Samstag, 24. Januar 2009

களமாடும் பிஞ்சு விழியுள்

விதியே,விதியே
விடுதலை செய்வாய் இவரை?

கைமுனுக்களும்
எல்லாளன்களும்
கதை பேசும்
ஒரு
உலாக் காலத்துக்காய்
இறக்கையிழந்தது தாய்க் கனவு

எல்லாளர்களினதும்
கைமுனுக்களினதும்
பழைய உறவுக்காய்
உதிர்ந்தொதுங்கும்
சில விடிவெள்ளிகள்

எதற்குமே
வீரம்,தீரம்
வியூகம் வகுத்து உருவேற்ற
"உலகத் தமிழர்களே"வணக்கம்!!

ஒரு தெரு விளக்கு
சோம்பல் முறிக்கும் இருண்ட பொழுதில்
கபாலம் பிளந்து,
கால் முறிந்து
கண்ணீரோடு களமாடியது ஈழம்


அரசர்கள்
அவிழ்த்துவிட்ட யுத்தவெளியில்
அரிசிக்கு அலையும் தாயொருத்தி!
அநுராதபுரக் காட்டுக்குள்
கண்ணீரோடு மனதை அனுப்பி
பெற்ற வயிறு பொங்க
பெயர் குறித்த படத்திற்குப் பூவெறிந்தபடி
சில கிழங்கள்...

துட்டக்கைமுனுவுக்கு
எல்லாளன் ஓலை எழுதும்
புதிய வரவில்
போனதென்னவோ
எவளோ வீன்றவுயிர்களெனச் சில முணுமுணுப்பு
தேசியத்துச் சூடடிப்பில்
எருமைக்கு இரக்கமில்லாச் சில கணங்கள்
எழுதிச் சொல்வார்
அந்த,இந்த விமானத்தில்
இருபது சரியாம்
தலைவரா-கொக்கா?


எவனுக்குத் தெரியும்
மரணத்தின் வலி?

கேட்டுப்பார்!

நோட்டுக் கணக்காய்
நீட்டிவைப்பார் வரலாறு
அங்கே விடுதலை
இங்கே விடுதலை உயிரிழந்தே
உருவுற்றதென்பார்

பிறகென்ன?

போய்ப் பார்,
களமாடும் பிஞ்சு விழியுள்
வாழ்வின் பிறப்புமிறப்பும் பிணையுந் தருணம்
இன்னொரு தளத்தில்
வெற்றிக் களிப்பும் சுவைப்பும்!
விதியே,விதியே
விடுதலை செய்வாய் இவரை???

Keine Kommentare:

Kommentar veröffentlichen