Samstag, 24. Januar 2009

தேச காளியின் நீட்டிய நாவு

சமாதிகளுக்கு
இனியும் இடம் உண்டா?

உண்மை
உருக்குலைந்த புயற் பொழுதொன்றில்
உப்புச் சட்டிக்குள் வெள்ளம்
உளிகொண்டு
உப்பகற்றும் என் முனைப்புக்கு
இருட்டுப்பட்ட திசையொன்றில்
வெளிச்சம்

கக்கத்தில் சொருகிய இரும்புடன்
காலில் கிடக்கும் புண்ணுக்குப் புனுகு தடவுதலும்
தேசத்துக்குக் காவடி தூக்குதலும்
வழமைக்கு மாறாக இன்னும் தொடரும்
என் நெற்றிப் பொட்டில் கொடியேற்றி

ஒட்டிய புன்னகையும்
ஒடிந்த உடலும்
மீட்சியிழந்து குற்றுயிரில் தவிக்க
மீண்டுமொரு சந்தில்
மிதிபடக் காத்துக்கிடக்கும்
சில மண் புழுக்கள்
தமிழுக்காய் பொங்குகின்றன

எனக்கிருக்கும் வரம்பற்ற ஊக்கத்துள்
வக்கீலாகப் பலர் உள் நுழைய
என் கச்சைக்குள் கறையான்கள் அரித்தபடி
வீட்டுக்குள் அறுவடைக்காக
அம்மாளுக்குப் படையல்

தேச காளியின் நீட்டிய நாவுக்குள்
உள் நுழைந்த இலையான்கள் சில
தொண்டைக்குள் தீபந்தம் ஏந்துகின்றன
தெருவிலிருக்கும் தெருலாம்பு
கரகாட்டம் செய்யும் புயற்காலம்
இத்துடன் அமிழ்ந்து போவதாகப் பத்திரிகைச் செய்தி

இதற்குள்
படுத்துறங்கிய தாத்தாவுக்கு
நாவுக்குச் சுவையாக
எச்சில் கனவொன்று நீண்டபடி
கனாக்காலம் விலகிய மண்ணிலோ
வினாக் காலம் பிறந்து
பிரளயம் தாண்டவமாடுவதாக
உப்புப் போராட்டம் ஓங்கிச் சொல்கிறது

உனக்கான காலம்
ஓரத்தில் புரண்டது போதும்
ஒற்றைக் போரில்
ஆயிரம் முடிச்சவிழ்க்கும்
தேசத்தில்
எனக்கும் பின் உனக்கும்
சமாதிகளுக்கு இனியும் இடம் உண்டா?


ப.வி.ஸ்ரீரங்கன்
18.07.2008

Keine Kommentare:

Kommentar veröffentlichen