Sonntag, 9. September 2012

ஓட்டு இரகம்!

ஜனங்களே, ஆத்தை படுத்துறங்கிய
 அடுப்படியும் முற்றமும்
அமைதி துறந்த அப்புவின் சாக்குக் கட்டிலும்
 மானுடத்து எச்சமாக மக்கிக் கிடக்க
எந்தச் சுகமுமற்ற ஈழத்துக் கிராமங்கள்
 வடக்கும்,கிழக்குமாச்சு!


இதற்காகச் சாதிக்கொருவனுமாக,
 பிரதேசத்துக்கொருவனுமாகச்
சவப்பெட்டி செய்துகொண்டிருக்கிறான்கள்
 சட்டப்படி சாவோலை தருவதற்கு -அவர்கள்
காலத்தைக் குறித்து அச்சப்பட்டுக்கொண்டும்
 தங்கள் வாசற் தலங்களுக்குள் நாறும்
மலங்களைக் காத்தப்படி ஆயுதங்களால்
 மீள மீளத் திடப்படுத்துப்படுகின்றனர்


போராளிக்குச் சோறுபோட்ட குற்றத்துக்காகவும்
 நோட்டீசு ஒட்டியதற்காவும்
கூட்டத்துக்குப் போனதற்காகவும்,போராடப் போனதற்காகவுமாக
 சிறைகளில் இன்னும் இருண்டு பட்டுக் கிடக்கும்
ஈழத்து மனிதர்களது வாழ் காலமும்-கனவும்





இவற்றுக்கெல்லாம் மூலமான தேசியக்  கோவணங்கள்
 தம்மால் அடைத்து வைத்துக் கொல்லப்பட்ட
அப்பாவிகளுக்குத் துரோகிச் சான்றிதழ் கொடுத்துக்கொண்டிருந்த
 காலத்தைப்  பறிகொடுத்துவிட்டுக்  கைதிகளுக்காகக்
கண்ணீர் சொரியும் காலமுமாகத் தமிழ் மக்கள்
 காதுகளுக்குத் தினமுமொரு பூ வைக்கப்பட்டுக்கொண்டிருக்க


கிழக்கிலோ தேசியத் தலைவரது வளர்ப்புப்
 பிராணிகளோ வடக்குக் கிழக்கென ஓட்டுகள் பிரித்து
ஐந்தொகை எழுதிக்கொண்டுமுள்ளனர்!
 கோவிலுக்குக் காவடி தூக்கிய பழக்கதோசத்தில்
ஒரு சிலரின் கரங்களில் "ஒரு முகமூடியும்"
 சில கோவணத் துண்டுகளுமாகத் தமிழரின் உரிமை
தெருவில் உலாவிக் கொண்டிருக்கிறது


இருவேறு குகைகளுக்குள் இடறிவிழும்
 சில நடைபுணங்கள்
எல்லைகளில் எரிச்சலைக்  கொட்டுகின்றன
 இதற்காகப் பல வர்ணக் கோலங்களுடன்!


இந்த இடருக்குள்
 தலைகளைத் தறித்துச் சாக்கிலிட்டவனே
மக்களின் குரலாகத் தன்னையும்
 விழிகள் முன் நிறுத்துகிறான் பல் முனைகளில்!


இத்தோடு, மக்களின் சில்லறைகளைத்
 தட்டிப் பறித்த சில அண்டங் காகங்களோ
சிறைக் கைதிகள் விடுதலைக்காக "ஏந்துக உறவுக்கொடி" என்றபடி
 தெருவோரப் பிணக்குவியல்களோ
ஏதோவொரு கனவான்(ள்)கள் படையலாக
 துர் நாற்றமெடுத்துத் துயில்கின்றன தேசமெங்கும்!


இப்படிக் கடுப்பேற்றும் எனது ஆயுட்காலத்துள்
 இராணுவத்தான் குடியமர்ந்ததும்
குடி கலைத்ததும் புலிவாற் குஞ்சத்துள்
 அரிப்பெடுக்கிறது-கொட்டிய குருதி உலர்வதற்குள்
வழித்து நக்கும் இத்தகைய நாய்களோ
 நாக்கைத் தொங்கப்போட்டு
நடுச் சந்தியில் காத்திருக்கிறது
 தேசிய விடுதலையின் பெயரால்...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.
09.09.2012