Freitag, 30. Januar 2009

என் தவப் புதல்வ எழுந்து நீ நிற்க




முத்துக்குமரா,
முதுகுலத்துப் பேரா!

இனமானம் உற்றதை உணர்ந்த உயிரே
மற்றைய வாழ்வென ஒன்றில்லா பொழுதிடை
அறிந்த நீ குறித்தே தீயிடை ஏறி
எரியூட்டினும் தான் உணராதுஎனின்
தமிழாய்ஆனதன் வழி வாழ்வுடை ஆனாய்?

மேனிலை வருத்தி வான்கொடை ஈன
வந்தததோ மனது எமக்கென உதிர
செய் வினை முறிந்து முயங்கப் பெறும்
அகவினைப் பயனாய் ஆனதில்லையே உன்
இருத்தலின் மறுத்தல் ஓம்ப?

பாரதத்துக்கு ஆம் நல் அறம் எடுத்து உரைக்க
உடலுதிர் மனங்கொள் உயிர்க்கொடை ஈத்தந்து
ஈழத்தில் உடை போர் வெடிக்க மாக்கள் உயிர் உய்ந்து அங்குநிலவ
பாரத அடுபோர் தொழில் ஒழிய உனைக் கொண்டாய்
தமிழும் ஆனதன் பயனாய் மேன் இடம் வென்றாய்

வாழ்வொடு நிறைகொள் பதமும் படைத்தாய்
ஓவெனப் புலம்ப இடமும் விலக
உய்ய நிலை இஃதென பகல நீ உடம்பு அழிக்க
யானே அல்லேன் யாவரும் உணர்குவர்
நீ தமிழிடை மறை ஆனதாக

பண்டும் பண்டும் பாழ்வினைச் சிங்களம்
கொடு முறைக் கோன் வழி கொல்லக் கொல்ல தமிழ்
மாக்கள் ஆங்ஙனம் அழிய அழிய
அமிழ்ந்தது அவர் புவியிடை வாழ்வு
கொடுமுடித் தமிழும் புலி வழி அழிய போரிடை ஈழம்

முத்துக் குமாரா முதுகுலத்துப் பேரா!
இத்தனை உலகினுள் உருவந் தொலைத்தவா
அத்தனையும் ஆகி அமர் தவப் பயனன் ஆனவன் நீயே
என் தவப் புதல்வ எழுந்து நீ நிற்க என் தேச மகள்
கருப் பையில் ஓர் பொழுதினுள் புகுந்து!

ப.வி.ஸ்ரீரங்கன்
30.01.2009
வூப்பெற்றால்.

நிழலோவியம்:இரமணி;நன்றி!

Samstag, 24. Januar 2009

நிர்மலராஜன்,சிவராமென...

எழுதுகோல்

தோழனே,
துக்கித்திருக்கவும் முடியவில்லை;
துயர்கொள்வதற்காக அழவும் முடியவில்லை!
உன்னைப் போன்றவர்கள் பலரை நாம்
பாசிசத்தின் மடியில் ஏலவே இழந்துள்ளோம்.

அழிக்கப்பட்டவர்களில்
ஒருவனாய் ஆனாய்
ஆக்கத்துக்கு நீமட்டுமல்ல
பெயர் குறித்து எழுதமுடியாத அளவுக்குப்
பத்திரிகையாளர்கள் செயலிலிருக்கப் பலியாக்கப்பட்டனர்!

...நிர்மலராஜன்,சிவராமெனத் தொடர்ந்த
இந்தக் கதை பாதாளத்தில்
திசநாயகம்-ஜசீதரனைச் சிறிது சிறிதாகக் கொன்றபடி
உன்னில் படமெடுத்த கருநாகமாக மகிந்தா முகம் விரிகிறது
நாளை இன்னொரு பத்திரிகையாளனைப் பறிப்பதற்கு முன்

வஞ்சகத்தின் வழிகளைக் கண்டு வீதிக்கிறங்காதவர்கள்
வீடுகள்தோறும் மரணங்கள் விழும்
தேசத்தைத் திருடுகிற அந்நியர்கள் ஆட்டிப்படைக்கும்
மகிந்தா குடும்பத்துள் மலிந்தவை எல்லாம் கொலைகளே
மக்களுக்குச் சேவகம் எனும் போதகன்

தேசத்தின் தலையைக் கொய்து வழிந்த குருதியில்
சால்வையொன்றைத் துவைத்துக் கழுத்திலிட்ட கையோடு
போப்பாண்டவர் கால்களில் வீழ்ந்து
கொலைகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்ற முதற்கணமே
உன்னில் பரீட்சையை எழுத

ஒவ்வொன்றாகத் தலைகளை இனியும்
இலங்கை மக்கள் இழப்பதற்குக் கோத்தபத்தைகளும்
பிரபாகரச் சேனைகளும் கோடி தவமிருக்குங் கணங்களை
இரணமான உனது வீழ்ச்சியுள் காண்பதற்கு எவர்
மறுக்கின்றாரோ அவர் கொலைக் களத்தில் இன்னொரு பொழுதில்

காணாமற் போனதை எழுத ஒரு பேனாக்கூட
இலங்கை மண்ணுள் இருக்காது
வெள்ளைவேனும் வேஷ்டிக் கட்டும் கொல்லைப் புறத்திலிருந்து
கொல்வதற்குப் புலிகளென்ன சிங்கங்களென்ன
இரண்டினது கழுத்துகளில் மட்டுமே வெவ்வேறு அட்டைகள்!

ப.வி.ஸ்ரீரங்கன்
08.01.2009

நீ எனது தேசம்

அது எனது மூஞ்சி.



தேசக் கருச்சுமந்து
போராடச் செல்வோனே!
சிங்களக் கொடுங்கோன் கண்டு
கிளர்ந்தவனல்லவா நீ?


உனது பெற்றோரைப்
பூண்டோடு புணர்ந்த சிங்கள ஆட்சி,
உனது
கிராமத்தைக் கற்பழித்தபோது
ஆயுதந்தரித்தவன் நீ,


பாசிச அரசோ
அல்லப் பார்ப்பனப் பயங்கரவாதியோ அல்ல நீ!
புத்தனின்
பித்தர்கள் போடும் கொலைக் கூச்சல்
உனது தேசத்தைக் கற்பழிக்கின்றது இன்று!


மீளவும்
பாதகர்கள் தோழா,
பாதகர்கள் தோழா
பாரதஞ் சொல்பவர்கள் பாதகர்கள் தோழா!

என் தோழா,
இது கண்ணீர்த்தானம்
அநுராதபுரத்தில் உன் சிதையைக் கண்ட கண்ணீரோடு
இன்றுன் ஓர்மம் கண்டு கண்ணீர் சிந்துகிறேன் தோழா?
புரியவில்லைப் புலம்புகிறேன்-பொய்யில்லை!

நான் அழுகிறேன்,
என் இதயம் தினமும் ஓயாது நோகிறது
நான் யார்?
இனவாதியா,இடதுசாரியா?
எதுவுமே இல்லை!

மனிதன்
மகத்துவமாக வாழ்வதற்காக-நீ
போராடும் பொழுதில் நான் பார்வையாளன்
என் கரங்களில் தாங்கிய சுடுகலம் பறிக்கப்பட்ட அன்று
உன்னைக் கொன்றோம்

தோழா,
தனித்தாடா போராடுகிறாய்?
உனக்கு யாருமே இல்லையாடா?
எனது இதயமும்,என் விருப்பமும் துணையாகட்டும்
திடமான உனது நெஞ்சுக்கு துணிவையும்
துன்பமான சூழலையும் தந்தவர்கள் நாம்!

எனக்குப் பசிபோக்கிய பனை
உனக்கு அரணாகவரும் பாக்கியம்கூட
எனக்கு வாய்க்கவில்லை!

ஓ...
தற்குறியான என் சுயமே
என் உடலை
அவனுக்கு-அவளுக்கு அரணாக்கு
நான் மற்றவரைக் கொல்லேன்
என்னைக் கொல்பவரையும் விடேன்
நீ
என் சுயத்தைக் கொண்டாய்
நான் தனித்திருக்கிறேன்,அழுகின்றேன்!

அர்ப்பணிப்புடையவனே-தோழா!
தமிழன் நீ என்பதற்காக நான் கண்ணீர் சிந்தவில்லை
நாம் ஒடுக்கப்பட்டவர்கள்
தொடர்ந்தும் உலகங்களாலும்
இந்திய வஞ்சகத்தாலும் ஒடுக்கப்பட முதலில்
உன்னைக் கொல்வதற்கு கூடுகிறார்கள் அவர்கள்
நான் அறிவேன் நீ பயங்கரவாதியல்ல!

நான் அறிவேன்
நீ பாசிஸ்டு இல்லை
எனது மாமியன் மகனும்
அக்காளின் மகனும் நீ
உன்னைக் கொல்வதற்கு எனக்கு எந்தத் தத்துவம் தேவை?
போடு குப்பையில் என் புரிதல்களை
மக்கள் உன்னையும் என்னையும் தவிர்த்தாகப் புரிய
நான் கருத்துவளையத்துள் மாட்டிய விலங்கு இல்லை!

உன் வாழ்வுக்காக அழுகிறேன்
வா,வந்து என் முத்தத்தில் உச்சி மோந்த வீர சுகத்தைத் தா!
என் புதல்வனே!,தோழனே,மருமகனே,சோதரனே
சும்மாவடா சொன்னார்கள்
"தன் கையே தனக்கு உதவி" என?

இன்னொரு
வாழ்வுக்காக நான்
உனது அழிவை விரும்பேன்
நீ இந்த மண்ணின் மகன்
என்னை உனக்குள் புதைத்துவிட்டு
நான் உனக்காகக் கிறுக்குவேன்
இனி உனது அழிவைப் பற்றியே எழுதுவேன்

பார்வையாளனக இருக்கும் நான்
உன்னைக் கொல்வதற்கான முதற் கல்லைப் பதித்தேன்
கட்டிலில் புணர்வதற்கான எனது ஏற்பாட்டிற்குப் பளிங்குப் பத்திரிகை
என் உறவுகளுக்காகப் பார்வைக்கு வைக்கிறேன்
பாவி நான்,வஞ்சகன்
வியாபாரத்துக்காக உன்னை விளம்பரப் படுத்தினேன்
உன் இறப்பை மௌனித்து வரவேற்கிறேன்
கொடுமையானவொரு இனத்தின் வீரப் புதல்வன்-மகள் நீ
எனது குருதியின் துளியே
உன் மார்பினில் துளைக்கும் அந்நிய ரவைக்கு
நானே வியர்வை சிந்தி நிதியளித்துள்ளேன்
உன்னைக் கொன்றுபோட முனைபவர்களுள்
என் நிழலும் இருக்கிறது

என் தோழா!
உனது அழகான புன்னகையைக் கொல்வதற்கும்,
உன் தேசக் கனவை அழித்தெறியவும்
உன் திடமான உறுதியைக் குலைத்துப் போடுவதற்கும்
நானும் உடந்தையாகிப் பார்வையாளனானேன்

கைகட்டி,வாய் மூடி
வருகின்ற பெருநாட்களுக்குக் கொண்டாடும் மனதோடு
உனக்கும் எனக்கும் தொடர்பற்ற
உலகத்தைத் நான் சிருஷ்டித்துக் கொண்டேன்,
எனது மக்களின் மண விழாவுக்கு
வரவேற்பிதழ் பல்லாயிரம் யூரோவில் பதிப்பிக்கிறேன்
நீ,என்றும்போலேவே பனைமரத்தை அரணாக்கி
எமது மண்ணுக்கு உடலை விதைக்கின்றபோதும்

என் தோழா,
நான் வஞ்சகன்!
எனக்காக நீ உயிர் தருகையில்
உன்னைக் கொல்வது குறித்து நான் வகுப்பெடுக்கிறேன்
எனது குலத்தின் வீரமே,விழுதே,வியங்கோளே,
விலைமதிப்பற்ற எனது தேசமே!
ஏனடா நான் பார்வையாளன் ஆனேன்?
உன்னைக் கொல்வதற்கு ஒப்படைத்து
நான் மட்டும் தப்பினேனா?

மகத்துவம் என்பதை
உனது வாழ்வினோடு சொல்பவனே,
உனது மக்களின் மௌனத்தைக் கலைக்கின்ற உன் வீரம்
இங்கு கண்டேன்
வா,வந்து என்னை நீ மன்னித்துவிடு
நான் உன்னைக் கொன்றுவிட்டேன்
உனது வீரத்தால் என்னைக் கொல்,கொய்துவிடு எனது சிரசை!

உன்னைச் சுற்றி வளைத்த
பாரதஞ் சொல்லும் பார்ப்பனியக்கூட்டம்,புத்தர் தர்மம்
உலகத்தைத் தமக்கிசைவாக்கி
ஒவ்வொரு திசையிலிருந்தும்
உன்னைக் குறிவைத்திருக்கையில்
நீயோ
திடமான நெஞ்சை முன் நிறுத்தித்
தேசத்துக்காக
உனது உடலைக் காணிக்கை செய்து
என்னை எள்ளி நகையாடுகிறாய்!

என் உயிரே,உத்தமனே!
உணர்வுடையவன் நீ
உனது நரம்புகளில்
எனது கோழைத் தனம் தீயாக வீரக் குருதியைக் கொட்டட்டும்
போ,போரிடு,போரிடு
வஞ்சகர்களின் வலை அறுபடும் வரை நீ போரிடு
என் தேசமானவனே!
உன்னை விட்டவொரு தேசம் எனக்கில்லை!

நீ எனது தேசம்,
நீ,எனது மொழி,
நீ,எனது மதம்,
நீ,எனது உடல்,
நீ,எனது வேர்,
நீ,எனது பூர்வீகம்!
நீ,எனது மகன்,
உன்னைக் கொல்வதில் நான் மகிழ்ந்திருக்கேன்
உனது அழிவை மகிழ்வாக்கிப் பணம் கொண்டவன் நான் அல்ல மகனே!

என் தேசத்தின் வீரமே!
உனக்கு ஒரு பனைமரமாக இருந்து
அரணாக வருவதற்குக்கூட அருகதையற்றவன் நான்
உன்னைப்பேணி ஒரு குவளை சோறிட முடியாத எனது உழைப்பு
எனது பிள்ளைக்குப் பூமா மார்க் சோடி சப்பாத்து வேண்டுகிறது
என் போலித்தனம் உன்னைக் கொல்வதற்கு முகவுரை எழுதுகிறது

அழுவதால் நான் கழுவப் படுகிறேன்
உனது வீரத்தால் எனது கோழைத் தனம் கொல்லப்படுகிறது
உனது உயிர் தியாகத்தால் என் பிழைகள் அழிக்கப்படுகிறது
உனது உடற்சிதைவால் எனது முகம் இழக்கப்படுகிறது
இதயம் நோகிறது-நீ
போரிடும் ஆற்றலோடு தனித்திருக்கிறாய்
உனக்காக வழி நெடுக உனது தேசக் கனவு மட்டுமே துணையாக இருக்கிறது
உன் தேகத்தில் துளைபோடும் ரவைக்கு எனது மனமிருந்தால்
நிச்சியம் எய்தவனையே வேட்டையாடும்

தோழா,
உன்னைக் கொல்பவர்கள் கூடுகிறார்கள்
ஐந்து நட்சத்திரக் கோட்டல்களில்
ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின்றன
உனது காலடியின் தடங்களை அழித்து வளங்களை அள்ளுவதற்கு
நீ
முதலில் அழிக்கப்படுகிறாய்
உன் கோப்பையில் பங்கிட்டுக் கொண்டவன் கருணா
பணத்தோடு பாரதஞ் சொல்கிறான் கிழக்கில்!

என்னவனே(ளே)
எனது காதலா(லி),கண்ணைக் கசக்குவதால்
நான் கடுகளவுகூட உனக்கு உதவேன்
எனது அழுகை எனக்கானதே!
நீ, என்னை மன்னிக்காதே
எதிரியைச் சுடும் அந்தக் கணத்தில் எனது துரோகத்தையும் நினை
உனக்கு அதுவே துணையாகவும்,நெஞ்சுரத்தையும் தரும்!

ஒருவேளை நீ,வென்றுவிட்டால்
உனது சுய வீரமேதான் அதன் அடித்தளம்
எவருமே உனக்கு உறுதி தரவில்லை,
உனது மனத்தைத் திடமாக்கி
அழிக்கப்படுவதற்கு முன் காறி உமிழ்ந்து
எதிரியின் மூஞ்சியில் துப்பு
அது எனது மூஞ்சி.


ப.வி.ஸ்ரீரங்கன்
17.01.2009

எமது விளையாட்டின் இறுதிக்கட்டம் இது

எனது இருப்புக்காய்
உன்னைக் கொல்வேன்.


என் சோதரா,
மரணத்துள் நானும் நீயும் நீந்துகிறோம்
நிழல்கள் எம்மைத் துரத்துகின்றன
வேதனைக்காகவேனும்
அழும்படி கட்டளையிடும் அவை
வேளா வேளைக்கு
எச்சரிக்கை செய்ததாகவும் புலம்புகின்றன

காற்றின் உதைப்பில்
பட்டம்விட்டே பழகியவர்கள் நாம்
எந்தெந்தத் திசைகளில் என்ன காற்றென்பதை மறந்து
நீ விளையாட்டைத் துவக்கினாயோ
அன்றி நானோ கேள்விகள் தொலைந்த
நடுநிசிப் பொழுதொன்றில்

வேட்டைக்குப் புறப்பட்ட நாம்
முடித்துவைப்பதற்குள்
மிருகங்களிடம் சிக்குண்ட இந்தப் பொழுதை
நாளையவர்
எமது காலடியில் எதைத் தேடுவார்களோ
அதை
இரவோடிரவாக எழுதி வைப்போம்

எனது சோதரா,
எமக்கு
எப்போது ஆற்றைப்பற்றிய புரிதல் இருந்தது?
நாம் ஏற்றிய பொதிகளை இறக்குவதற்குள்
நடாற்றில் முழ்கும் படகை
நானோ
அன்றி உனது விருப்பமோ
தடுத்துக் கரைக்குக் கொணர்வதற்கில்லை
எமது விளையாட்டின் இறுதிக்கட்டம் இது

அன்புச் சோதரா,
அறிவாயா இன்னும்?
வெற்றுத்தாள்களில் நாடுகளை வரைவோம்
தேசம் எதுவெனத் தேடிய வரைவுகளில்
ஒன்றைத் தேர்ந்து
எமக்காகத் தண்டவாளங்களை
நட்டுப் பொதிகளை ஏற்றுவோம்

ஆற்றுப் படுகைகளை நம்பிய காலம்
தலைகளின் வீழ்ச்சியில் எல்லைகளற்ற தேசத்தை
எப்போதோ தொலைத்தாச்சு
இனியும்
கருமை பொதிந்த கோடுகளுக்குள்
அவை உருப்பெறுவதற்கில்லை

மரணக் காவியங்கள்
மலிந்த சவக் குழிகளுக்குள்
மங்காத கனவுகளோடு மல்லுக்கட்டும் பொழுதொன்று
மகா வம்சத்தின் தெருக்கோடியுள்
இனியும்
உனக்காகவோ அன்றி எனக்காகவோ
எவரும் தொடர்வதற்குள்

என் சோதரா,
பாலைவனத்தில் நாடோடிகளாகவும்
அலைகடலொன்றில் தத்தளிக்கும் கள்ளத் தோணி அகதியாகவும்
என்னையோ அன்றி உன்னையோ
ஏதோவொரு தேசத்துக் காவற்படை
கைதாக்கியதில் எமது உயிர் பிழைத்ததாகவும்

பின்னைய பொழுதொன்றில்
தூங்குவதற்கு முன்
மையைக் கக்கி ஓய்ந்த பேனாவொன்றில்
சுரக்கும்
எமது இருப்புக்காய்
நான் இப்போது தொடர்கிறேன்
உன்னைக் கொல்வதற்கு!

சிலந்தியின் வாய் பின்னிய வலையில்
வீழ்ந்து மீளும் கொசுக்களைக் கண்டாயா?
விட்டில்கள் விளக்கில் வீழ்ந்தபோது
அதுவே தமது
இறுதிக் கட்டமென அறிந்தவையா?

என் சோதரா,
நாம் தூக்கத்துக்குப் போகத்தான் வேண்டும்
ஆடிய விளையாட்டின்
முடிவு நெருங்கிவிட்டது!
நீ
வென்றாயா அன்றி
நான் தோற்றேனோ என்றதற்கப்பால்
எமது மரணத்துள்
உன்னைத் தோற்கடித்த பொழுதொன்றை எவருரைப்பார்?


ப.வி.ஸ்ரீரங்கன்
15.01.2009

புத்தன் தேசத்துக்கு மகிமை

"புது வருஷம்"


உயிர் உதிரும் உடலும் உணர்வுந்துறந் தொதுங்குங்
களத்தில் புதிதாய்ப் புலம்ப வருக புத்தாண்டே, வருக!
தாயும் சேயும் வான்படைக் குண்டாற் சிதையுமொரு தெருவில்
வன்னி விடுவிப்புக் கொடும் போர் துரத்தக்
கொடுங் கோன் முறை அரசு செய் மகிந்தா தமிழாய் உதிர்க்க

தமிழர் இல்லமும் வீழ்ந்தது
இரத்தமும் கொட்டியது
சிதறிய அன்னை விழியில்
ஈக்கள் மொய்த்தன ஒன்றாய்ப் பத்தாய்
இடியாய் நீ கொட்டிய குண்டுகள்

மக்களுக்கானது அல்ல என்பாய்
பயங்கர வாதத்துக்கு எதிர் எனும்
பம்மாத்து இலங்கைத் தேசியத்துள்
என்னைக் கரைக்க முனைகையில்
ஆத்தையின் பிணத்தில் அடுப்பெரித்து

அன்னம் புசிக்க -நீ
அரிசிப் பருக்கை இட்டு யாழ்ப்பாணத்தில்
வடக்கும் தெற்கும் ஒன்றாய்ப் புணர்ந்ததை
ஒப்புக்குரைத்து கிழக்கின் வசந்தம் மீட்டுகிறாய்
ஒத்துக் கொள்கிறேன், வடக்கும் தெற்கும் பிணைந்தே கிடக்கட்டும்!

அதுவே வரலாறு முழுதும் சாத்தியமுங்கூட-இஃது
சரியானதுங்கூடத் தலைவரே!இலங்கைத் தேசத்தின்
ஒப்பாரும் மிக்காருமற்ற தேசியத் தலைவரே-நீ
ஐ.நா.வில் மட்டுமல்ல யாழ்பாணத்துக்கும் தமிழில்
உனது அரசியலை மொழி பெயர்க்கிறாய் வான்படை வழி

தேசத்தின் மொழிகள் இரண்டையும் தெரிந்திருக்கும் தலைவர்
மதிக்கத் தக்கவரே!, மாண்புடையவரே!!என்றபோதும்
காரணமே இல்லாது களத்தில் மட்டுமல்ல
பன்னைப் பாயிலும் கொல்லப்படுவோரைப் பயங்கரவாதிகள் என்கிறாயே?
அடுக்குமா? பிணத்துள் பால் குறித்து ஆய்தலும்

எதிர்ப்பால் வினைபுரிதலுக்குச் சோடிசத்தின் சுகம்
அனுபவித்துக் களிகொள் மனதொடு
தேசத்தின் மகத்துவஞ் சொல்லும் நீங்கள்
தேசத்தைப் புணர்ந்தவருள் அடக்கமில்லையா?
கொண்டையுள் மலர் திணித்திருப்பவர்கள்

யோனியில் சன்னம் புதைத்துக்
காட்சிக்குக் காட்சிப் புணர்வுயர் நெகிழ்ச்சியில்
புண்ணாக்காக்ப்படும் பிணம்கூடப் பால்வினைப் பயனுள்
புத்தன் தேசத்துக்கு மகிமை சேர்க்க்கலாம்
ஆத்தையின் சேலையையுருவி உன்னிடந்தந்து

இலங்கைத் தேசியத்துள் பிணைந்து புணர
எமக்கொன்றும் உன் இராணுவத்தின் அரிப்பு இல்லை-அது
இல்லவே இல்லை!கோவணத்தைக் குடையும்
உன் கூட்டத்தின் பசிக்குப் பண்ணைகளைத் திறந்துவிடு
தெற்குள் திரண்டகொங்கைக்குக் கோவணங்கட்டி

புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும்
மரணங்களும் அப்படியே எமக்கு-எனினும்
புணரும் தருணம் பிணமென்ன
பெண்ணென்ன பேரின்பம் வதைத்தலில் வந்து போகும்-என்
தேசத்துப் புத்தர்களுக்கு இனியும்!!!


ப.வி.ஸ்ரீரங்கன்
31.12.2008

இலங்கையராய் இருக்க...

என்னமாய்ப் போகிறது உலகு
இருப்பவருக்கும் இறப்பவருக்கும்
இடையிலிருக்கும் ஒரு நூலிழை
காற்றில் ஒன்றும் ஒரு விசை

கடுமனங்கொண்ட கண்ணீரும்
கற்பதற்கு மறுக்கும் தலைமை விசுவாசமும்
தற்குறியாய்ப் போகும் தலைமுறையும்
தன் நம்பிக்கையிழக்கும் எதிர்காலமும்

தாமரை இலை நீராய் உருண்டுபோகும்
உயிரும், உடலும், உள்ளம் தொலையும் கணமுமாய்
ஒரு நொடிப் பொழுதையாவது இந்தவிலங்கையர்கள்
இனிதே நுகரக் கொடுப்பனவற்ற குறையை நீபாடு!

கடுமழையில் விழுதுடையும் ஆல்போல்
கொடு யுத்தத்தில் சிரசுடையும் சின்னதுகளையும்
கூன் விழுந்த குமரியளையும் பல்லுப்போன பாலகர்களையும்
பாழுமிந்து தமிழ்த்தேசிய அரசியல் விட்டு வைக்கா

பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு ஒரு புறமும்
பாடைகளால் பாசறைக்குப் படைகள் சேர்த்தல் மறு புறமுமாய்
இந்தப் பாழுமிலங்கையில் பண்பாடாய்ப் போக- பாருக்குள்
வலியவொரு குருதியாற்றை வடியவிடுமிலங்கை மண் புலி-சிங்கம் வடிவில்!

மெல்லப் பாடும் தென்றலும்
மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுகள்

கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்

நில்லாது போன நிரந்தர யுத்தம்
நினைவைத் துரத்தும் மரணவோலம்
இதுவெல்லாம் வாழ்வென்று
வேளாவேளைக்கு சங்குகொலிக்கும் தமிழ்த் தினாவெட்டு

சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைபட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய் ஊர்த்தெருவில் குத்தி விழும் மனம்

எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
மெஷினில் சிறைப்படு மெல்வுடையும் வாழ்வு!

உருத்தெரியாத உறவுகளாய்
ஊரே தெரியாத வம்சங்களாய்
உதிரக் காத்திருக்கும் பெற்றோருடன்
உறவு முறிக்கும் சிறுசுகளாய் இலங்கைத் தலைமுறை

ஊனுருக்கி உறவறுத்து
ஒருத்தி-ஒருவனோடு உறவுவைத்து
சுற்றம் தறித்து சும்மா வாழும்
அகதித் தமிழர் சுதந்திரமாய் சாவார் நாளை

வேருமில்லை விழுதுமில்லை
வேஷம்போடும் சந்ததியும்
உணர்வு முளைக்கும் ஒரு பொழுதில்
உப்புக்கும் மதியாது பெற்றோரை

புலப்பெயர்வு வாழ்வு
புதுவாழ்வு புகழ் வாழ்வு அல்ல
புலம்பித் திரியும்
பட்ட மரமாய் நலிந்த முகங்கள்

நாங்கள் இன்னுஞ் சில காலத்தில்
நடுத்தெருவில் நிற்பதற்கு
நாலு பெற்று வளர்ப்பதிலும்
உழைப்பதிலும் உலகை மறந்து...

நாலு சகாப்த்தம் நடக்குமிந்த
நாடுகேட்ட "நல்ல யுத்தம்"
நாட் குறிக்கும் நமனைக் கேட்டு
நல்ல வழி நாமடைய?தூ...

2009 ஆவது தேசத்தில்
யுத்தம் தொலைத்துத் தமிழரை
உயிரொடு உலாவவிடத் தமிழ்க் கூத்து ஒழிக
ஓங்குக இலங்கையர் ஒற்றுமை உறவு!


ப.வி.ஸ்ரீரங்கன்

அக்காவாய்க்கூடிப் பிறந்து...

நெஞ்சில் கீறும்
அக்காளின் நினைவுகொண்டு
அஞ்சலிக்கும் தங்கைகள் நாம்!!!


மௌனித்திருக்கவும் முடியவில்லை
மனதும் கேட்கிறதாயில்லை எமக்கு
எத்தனை கதைகளை உனக்குள்தேடிட அக்கா
எங்கள் உறவே, ஒரு வயிற்றுறவே எமைவிட்டுப் போனாயோ
பக்கத்திலிருந்தும் பார்க்கவும் பலன்கூடவில்லையே அக்கா!!!

மீளவும் சோற்றைக் கொள்ளும்
பெருவாயுள் அகாலக் கொடுமையின் சிதை
உறவுக்கான இரைமீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
பேசப்படும் தொலைபேசி அதிர அக்காள் போன செய்தி...

முந்தைய பொழுதின்
கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைப் பொழுதாய் வேளைகள் செல்ல
வேதனை சொல்லும் வேளையுள் நீ வீழ்ந்தாயோ அக்கா?

நொந்துலர்ந்த இதயங்களோடு
நெடிய வாழ்வுக்குள்
குந்த இடமின்றி அகதியாய்ப் பிரிந்தோம்
இன்றோ இருப்பிழந்து நீ உறவறுத்து
இதயம் நோக எம் விழிபனிக்க வைத்தாயே அக்கா!

எத்தனை இரவுகளில்
எங்களைத் தூக்கியணைத்து
துயரங்கலைத்த தோழி நீ!
ஆறுதலைச் சொல்லும்போது அம்மாவை இருந்தாய்
அக்காவாக அன்பு எமக்கு உறவானது,ஐயோ எம் அன்பே!

இந்தப் பொழுதில்
நீயும் இல்லை
நெடு நிலவும் இல்லை
நெஞ்சில் உரம் சேர்க்க
எங்கள் ஊர் ஆறுமுகனும் இல்லை-சிவனே!

சுவரில் தொங்கும் கடிகாரத்தின்
ஈனக் குரலில்
இதயம் குழப்பும் ஒரு கும்மிருட்டில்
உன் முகத்துள் எமைக்காண அச்சம் கொண்டோம்
அக்காவாய் உறவுற்ற எம் மூச்சே, காற்றாகிச் சென்றாயோ கடவுளிடம்?

எங்கள் ஆசை அக்காள் இனி வரமாட்டாள்
அவளுக்கு வயசாகி விட்டது நித்தியத்தை நாடிவிட்டாள்
வந்தவிடத்தில் நாட்கள்விலத்த
எங்கள் கட்டைகளையும் நீ கூட்டிச் செல்லேனடி சோதரி
போகப் போவதுதானே உண்மை,நீ போய்விட்டாய்!

எல்லாம் இழந்த இந்த இருட்டில்
அக்காளின் நீண்ட உறக்கஞ் சொல்லும் சேதியோ
மூச்சையடக்கும் ஒரு பொழுதை மெல்ல அழைக்கும்
உனது உயிரின் இழப்பில்
எமது உடல்களும் இந்த உலகத்தைவிட்டு?...

மெல்லத் தலை கோதி அள்ளியணைத்து
கிள்ளிய வீபூதியில் நெற்றியைத் தடவி
நெடிய வலி போக்கிய அக்காவாய் அன்று
உணர்வுக்குள் கோடி கதைகளை வைத்த அக்காள் நீ
சொல்லாமற் போனாயே சோதரி!,சோர்ந்து போனது எங்கள் மனங்களும் அறிவாயோ?

அள்ளிய சோறும்
மெல்ல முடியாத வாய்களோடும்
உணர்வு மரத்த மனங்களோடும்
இதயங்கள் நோக உனக்காக அழுது மடியும்
"ஒரு உயிராய"; நாம் புலம்ப நீ எங்கு போனாய்?

அக்காவாய்க்கூடிப் பிறந்து
அம்மாவாய் ஆரத்தாலாட்டியவளே நின்
ஆன்மாவுக்கு ஆறுதலும்
நித்தியத்தோடு நீ நிம்மதியாகவும் இருக்க
நீண்ட பிராத்தனையோடு நெஞ்சு வலிக்க இறைஞ்சுகிறோம்.


கண்ணீர் மல்க உருகும்,
உன் ஆசைத் தங்கைகள்.

தேச விடுதலை.

நீ மரிப்பதற்குத் தயாராகிவிடு
தேசம் பறிபோவதற்குள்
உனது குருதியை அவர்கள் பறித்துக் கொள்வதில்
களைத்திருக்கும் வேளை

மெல்லச் சாய்த்திருக்கும் கருவியை இயக்கு
அவர்கள் ஓராயிரம் குண்டுகள் பொழிவதனால்
பிழைத்துக் கொள்வார்கள்
வெள்ளைத் தேசமெங்கும் ஆயுதம் விற்று

விடிதலுக்கு இன்னுஞ் சில கணமே
நீ நெஞ்சு நிமிர்த்திச் சூரியனைப் பார்ப்பதற்குள்
இருள் கவிந்துவிடுமாயின்
தூரப் போய்விடு தமிழர்மீதான உலக யுத்தமே என்றுவிடு

கடிப்பதற்குச் சயனைட்டும்
குடிப்பதற்கு ஆற்று நீரும்
உன்னைக் காத்திருக்கும்
நியாயம் என்பது மரணத்தில் ஒப்பிக்கப்படும்

நெடிய வானம் உனக்கான தேசத்தை
தன் பருத்த உடலுக்குள் புதைத்திருக்கு
தேகத்தைத் தொலைப்பவர்களுக்கு
தெளிவுறுவதில் பிரச்சனைகள் இருப்பதற்கில்லை

கரும் புகை உனது சுடு கருவியிலிருந்து
வெளிவருவதற்குள் உனது உயிர் பிரிந்து போகலாம்
மௌனித்திருக்கும் உனது வாய்க்குப் பதிலாக
விழிகளால் பேசிவிடு

ஓ...நியாயமற்றவர்களே!
ஆசையைத் துறக்கச் சொல்லிய உங்களது புத்தர்கள்
உயிர் கொல்வதற்கு எப்போது கற்பித்தார்கள்?
அவர்களது செவிகளுக்குக் கேட்கும்படி கேட்டுவை

ஏனென்றும் எதற்கென்றும் கேட்க நாதியில்லையானால்
எவருக்காவும் எதற்காகவும் நீ துப்பாக்கியைக் களையாதே
மரிப்பதற்குத் தயாராகி விடு
மரிப்பதனால் நீ விடுதலையைப் பெற்றுவிடுகிறாய்

விடுதலை அகவல்

விடுதலை அகவல்

(நேரிசை வெண்பா)

நெற்றிப் பொட்டில் மஞ்சள் கட்டி
நெரிப்பிலிட்டு நீறாக்கி
நேற்று வைத்த நேற்றிக்கடன்
நெஞ்சுக்குள்ளே நினைவகற்றி

நெருப்பாய் போனது தெருவோரம்
ஊரானாலும் அழிந்து தேசம் பிறக்க
தேற்றிய கதைகள் நேற்றுவரை
பொய்மை விழுங்கிப் புடம் போட

போனது,போனது உயிருயிராய்
போற்றும் தலையும் தரைகிழித்துச் சுழியோட
புகழும் தளபதி படைவிலத்த
பழிக்கு நிற்கும் பிஞ்சுகளின்

உயிரினைப் பறிக்கும் சிங்களமும்
நாளும் சரியும் தலைகொண்டு
நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி
போரிடும் தாய்மண் என்றாக

சீண்டிப் பார்க்கும் சிறுகூட்டம்
சேனை கொண்டு அறுவடைக்குப் போனோர்
ஆண்டுகள் கண்டும் நாடடையார்
விடிந்தும் வீடுவரா வேளாண்மை

வேறு:

குருதி மழை
கோலமிழந்த ஈழ முற்றம்
நெடும்போர்ப் புயற் பொழுது
நெற்கதிர் தலை வீழ்த்திய குருதி வெள்ளம்

கடும் பசி கண்டகம் சுடலைக் கோலம்
வீடுடை குருதியுறை பிணம்
காடுடையான பிஞ்சுகள்
கேடுடையானார் ஈழத்தவர்

மேடுடையான மேன் மக்கள்
மேகத்துள் சொர்க்கம் காட்டிக்
கண் பறித்துச் சித்திரம் காட்ட
'அழகென்ன அழகு' என்பர் ஈழத்தவர்!

வேறொடு வேறு:

அதுவல்லத் தேசம் இதுவல்லத் தேசம்
ஆண்ட பரம்பரை மீள ஆளுந் தேசம்
தமிழீழ மது தாயினும் மேல்
தமிழெமது உயிரென்பாய்

தாகமும் அதுவே என்பாய்
தாயினது உடலம் வீழ்ந்தது
தந்தையும் வீதியில் வீழ்ந்தான் என்றோ
தனயர்களும் தாங்கிய போராயுதம் சரியத்

தலை சாய்ந்தார் கிழக்கொடு வடக்கிலும்
மடிப்பிச்சை எடுப்பேன் இறையே
இனியிவர்க்கு மாவீரர் வாழ் மண்ணும் வேண்டாம்
மக்களைத் துடைக்கும் கோனும் வேண்டாம்

கோவணம் இல்லை
குடியிருக்க ஊரும் இல்லை
கோயிலும் இல்லைக் குளமும் இல்லை
சுருங்கிய இரைப்பைக்கு ஈழம் எதுவரை?

புலிவழி கோன் முறை அரசு என்பாய்
குறைவில்லாத ஈழம் என்பாய்
ஒருவர் இருக்கும்வரை ஓங்கும் போரென்பாய்
அவரும் அழிய ஆவது என்ன என்பேன்?

வேறிலும் வேறு:

மகிந்தா மனிதர் என்றும்
தமிழருக்கு மேய்ப்பன் என்றும்
மகிழ்ச்சியாய் ஏற்பாய் எலும்பை
அதையும் புனைவாய் விடுதலை என்று

நெடுங்குருதி சொல்வாய்
நினைவையும் நெருங்குவாய்
நேற்றையதில் தமிழ்த் தலைமைiயுயும் காண்பாய்
அழிபவரை மறந்த மனதொடு அழிந்தவர் பற்றி

அவரவருக்கு ஆள்வது அவசியம்
குறிச்சி,வட்டாரம்,கோட்டம்
மாவட்டம்,மாகாணம்,மாநிலம் என்ப
மண்ணுக்கு எல்லைகள் வகுப்பாய்

கிழக்கொடு "ஜனநாயகம்" குந்த
கூலிக்குக் கும்பம் வைப்பாய்
குடியிருக்கப் பாரீஸ்சில் பங்களா கேட்டாய்
கொடுத்தவர் கொள்கை வீரர் கருணா-மகிந்தா மாமா


வேறிலும் வேறான வேறு:

வா வேந்தே வா,நீ "ம்..."கொட்டியவன்!
மார்க்சைக் கூட்டிவா மகுடி வாசிப்பார்
ராகவனை அணைத்துக்கொள் கூத்தடி,கதையாய்ப் புனைகொள்
ஏடாக்கு, நேற்றுக் கோட்டையைப் பிடித்தவர் நாம்

பேட்டையைக் கட்டுவதா சிரமம்?
நீ இருக்க எனக்கேது கவலை!
நினைத்தபடி இரு கல்வெட்டொன்று இனியும் வேண்டாமென
நேற்றைய நீயும் நாளைய நானும் என்றாய் உலகம்

பெண்ணியமா வேந்தே?நீலி,அந்தரி
செங்கண் அரவு பிறையுடன் பிணைந்த
ராஜேஸ் அக்கா இரவகற்றும் புரட்சி மடந்தை
நிர்மலமும் நீறாய் நெற்றியில் பூசு

வல்லவன் நீ
கொல்பவர்களைச் சொல்லியே
கோலம்போடு உலகமெங்கும்
கூப்பாடுகொள் பின் நவீனமாக

குடியிருப்புகளுக்குள் கலைத்தல்
அமைப்பைக் குலைத்தலுக்கு அவசியம்
குந்தியிருக்கும் இடத்திலிருந்து ஆரம்பி
அடுப்படிக்குள் சாம்பலையும் வையாதே!

தலித்துப்பாட்டு மடை:

தண்ணிமுதல் தெரிவை தாகங்கொண்டு
மதிப்புக்கு மறுப்பறிக்கை பகர்க
குடிமனை உழந்த மாதரை நோக்கி
"உடலுறவில் திருப்தி"பற்றிக் கேட்டுவை

கடுமனது கொண்டால் சிரித்துவிடு
கனிவொடு மௌனித்தால் மடக்கு
இரவொடு தலித்துவம் பேசி வை
உனக்கா இது சொல்ல?

இடிதரும் வெடியும் நீ
கடி தரும் கொங்கைப் பாலும் நீ கேட்பாய்
குடமொடு பொழியும் மடந்தை
குழைவினில் குளிர்பவன் என்ப

குருவே,கோசுகனார் கொம்பே!
"வேளாளன் சாதி நீக்கிப் பிரகடனஞ் செய்க"வென
தலித்துவத்தின் விளக்க வரிவுரையே
மலர்பொதி அவிழ்த்த மாண்பே நினது பெருமை சொல்ல?

நெடுங்குருதி மருவி
விரிவிடை செரிவு காண
அருவிய செழு நீர்க் கமலத்துள்
நீந்தப் பெருந்தவப் பயன்கொள்-இதுவே தலித்தியம்


நிறை:

தெரிநிலை தேற்ற மையமுற் றெண் சிறப்
பெதிர்மறை யெச்சம் வினாவிழை வொழியிசை
பிரிப்புக் கழிவாக்க மின்னன விடைப்பொருள்.



01.08.2008

சிங்கள இனவாதம்

நெடுங்குருதி சொல்லும்
நீயும்-நானும்.

செத்தவர்கள் செத்தவர்களாகச்
சேறடிப்பதும் துரோகி சொல்வதற்கும்
இடப்பட்டவொரு வெளியில்
ஈழம் இருண்டுகிடக்க

பேருரைகள்
ஆய்வுகள் அவசரத்தில்
நீதி பகிர்ந்து...

தொடருகிற யுத்தக் காண்டம்
உடலங்களில் எண்ணிக்கை வைத்து
ஸ்ரீலங்காவின் ஒருமைப்பாட்டை
சிங்கக் கொடியால் பிணைத்தபடி
புலிகொடிக்கு நெருப்பிட்டு மகிழ்வதும் தொடர்ந்தபடி

கொடிகள் எரிக்கப்படலாம்
ஏற்றப்படலாம்
கம்பத்தில் மனிதம் தூக்கப்படுவதை
இனவொற்றுமை சொல்லியும்
ஜனநாயகஞ் சொல்லியும்
ஈழ விடுதலை சொல்லியும் நீ நியாயப்படுத்துவதை
இத்துடன் நிறுத்து!

ஒரு போரை
இன்னொரு போரால் நியாயப்படுத்தி
ஓரத்தில் நிற்கும் நீயோ
இலங்கையின் கருப்பு ஜுலை நெடுங்குருதிபற்றி
எல்லோருக்கும் வகுப்பெடுக்கிறாய்

அன்று
அடியாட்களை ஏவிய சிங்கள இனவாதம்
இன்று
உலகமகா ஜனநாயகக் காவலரின் ஆயுதங்களைக் காவி
தேசியக் கொடியைத் தமிழர்களின் பிணங்களின்மீது ஏற்றியபடி


இனப் பிரச்சனைக்குத் தீர்வு
நன்றாகவே புகட்டுகின்றனர்!

எனதுடலின் உயிரைக் குடிக்கும்
மிருகக் கொடிகளுக்குள் மறைந்துகிடக்கும் சாத்தான்கள்
புவிப் பரப்பில் வேதம் ஓதுகின்றன இலங்கைக்குச் சமாதானம் சொல்லி

கிழக்குக்கு ஜனநாயகம் கொணர்ந்த வக்கணையுள்
மகிந்தாவின் மண்டைக்குத் தொப்பி தைப்பதற்கு
நீ
ஸ்டாலினைக் கூட்டிவந்து ஒருமைப்பாட்டைச் சொல்லலாம்
அல்லது
மார்க்சைக் கூட்டி வந்து"இதுதாம் மாங்காய்"என்று
மந்திரஞ் சொல்லலாம்
ஆனால்
தொடரும் நரவேட்டையின் மந்திரக் கோலை
தேர்ந்தெடுத்த அரசுகளுக்காய் விட்டபடி

இதற்குள்
பிட்டுக்கு மண் சுமந்த
சிவன்களாகப் பலர் நமக்குள்ளும்
நித்தியாய்
நிர்மலாவாய்
ராஜேசாய்
ராகவனாய்
ரஞ்சித்தாய் வஞ்சித்து நெடுங்குருதி காணலாம்

வஞ்சித்தே வழக்கப்பட்டவர்களோ
அன்றுகொண்ட வேஷங்களின் கலைப்புக்கு
இன்றுவரை மருத்துவஞ்(சுய(...)விமர்சனம்) சொல்லாதவர்கள்
இன்று
வழிகள் அனைத்திலும்
பெரும் பொறிகள் அமைத்து
தெருவெங்கும் முகமூடியணிந்த முனிவர்களாக
நெடுங் குருதியாற்றில் அமிழ்ந்து தியானித்துக் கொல்(ள்)கிறார்கள்!

புலிக்குப் புசிப்பதற்கு மாவீரர்களும்
சிங்கத்துக்குப் புசிப்பதற்குத் தமிழர்களும் சிங்களவர்களும் மரித்துக்கிடக்க
ஸ்ரீராமச்சக்கரம் விரைவாகச் சுற்றிக்கொள்ளும்
இவ்விரண்டு மிருகங்களுக்கும் சேர்க்கஸ் வகுப்பெடுக்க

இனியென்ன?

செத்தவர்களைச் சொல்லிக்கொள்
ஞாபகப்படுத்திச் சில வினாடி மௌனித்துக்கொள்
இலங்கைக்குள் சமஷ்டி
மாகாணம்
மாநிலம் என்றும் மந்திரம் ஓதிக்கொள்
ஆனால்
ஸ்ரீலங்கா அரசை மட்டும் பகைத்துவிடாதே!

இன்னொரு பொழுதில் நீ அறுவடைக்குப் போவாய்
இருப்பவர்களின் உயிருக்கு உலையும் வைத்து
உனக்கான எலும்பை எறிந்துவிடும் ஸ்ரீலங்கா
சிரித்த முகத்துடன்
தமிழருக்கானவொரு புதைகுழியை
நீ
மாகாணங்களின் பெயர் சொல்லித் தோண்டிக்கொள்வாய்!

இதுதாம்
இன முரண்பாட்டுக்கான "தீர்வுப்பொதி"-இதுவரை நீ செய்ததும் இதுவே.


நாளை நன்றாகவே
நெடுங்குருதிக்குள் சமாதானத்தைப் பேண்
நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும்
தமிழரெனும் நாமத்துடன்
நன்றாகப் பேருரையை எஜமானரின் ஒப்புதலோடு இன்றே எழுதிக்கொள்
அப்போது
நீயே நமது மேய்ப்பன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
26.07.2008
இரவு மணி:00:34

கருப்பு ஜுலை

கண்ணுக்குள் வட்டமிடும்
பெற்றா-புறக்கோட்டை!
ஐ.பி. ரஞ்சன்
என்
சித்தப்பன் சிவராஜா
அவன் நிறுவனம்:
"பீப்பிள் ரேட் அன் சப்பிளைஸ்"

1983 ஜுலை 23.

சில நூறு பிணங்களைக்
கண்டேன் பெற்றாவில்!

சுருவில் சண்முகம் கம்பனியின்
இறக்குமதி-ஏற்றுமதி விண்ணன் சுந்தரலிங்கத்தை
ஜுலைக் கலவரம் தார்ப் பிப்பாவில் திணித்தபோது
நான் பூந்தோட்டவீதியில் ரஞ்சனின் ஜீப்பில்
நல்லதோ கிட்டதோ
ஐ.பி.ரஞ்சன் அன்று எனக்கு மேய்ப்பன்!

சில கணத்தின் கழிவில்
சோற்றுப் பார்சலுடன்
சிங்களத் தோழர்கள் மிதந்தார்கள் ஸ்டேஷனில்
ரஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க
சோற்றுப் பார்சலுடன் மல்லுக் கட்டிய பொழுது
ரத்கம ஸ்டோர் முதலாளிக்கு
அந்து ஊர்ப் பெயர் காத்தபோது
நாலு கோடி சொத்து எஞ்சியது இந்தக் கலவரத்துள்!

எனது அப்பனின் தம்பிக்கு
அந்தளவுகோடி தீயில் அமிழ்தது!


இன்னும் நெஞ்சில் வடுவாக அந்த நாள்.

நீ, மரணத்தைத் தியானித்துள்ளாயா?

சில முஸ்லீம்கள்-தெரிந்தவர்கள்
சிங்களவர்களாகத் தார்ப்பார் ஆடியதை
அன்று அனுபவித்தவன் நான்
கட்டுப்பத்தையில் பெட்டி சுமந்தவர்கள்
ஞானத்தின் தொலைக்காட்சிப் பெட்டிகளைச் சுமந்தார்கள்
என்னோடு புத்தகஞ் சுமந்தவர்கள் எதிரியாகிப்
போட்டுத் தாக்கியபோது
நானும் புரண்டேன் தமிழனென்பதால்

என்ன கொடுமையடா!
அன்றைய ஜுலையை நினைவு கூரும் நானோ
இன்றும் பல ஜுலையை எனது தேசமெங்கும் விதைத்தபடி
புலம் பெயர்ந்து எண்ணிக் கொள்வதில்
விமோசனமும் உண்டோ?

இன்றும்,
இதயத்தைத் தீனியாக்கும் அந்த ஜுலை 23!
ஜே.ஆர். மிக அழகாகத் திட்டமிட்டான்
பிரமதாசா நடாத்தி முடித்தான்
லீலாக் கலாண்டரின் சின்னத்துரை
மைந்தர்களோ பிரமதாசாவின் பேர்சனல் லோயர்கள்...

சுந்தரலிங்கம் மாண்ட கையோடு
அவன் தம்பி என்னை விடுவித்த நாலாம் மாடிக் கைது நினைவில்...

டினோஷன் ரேடிங் கம்பனியும்
லீலா சின்னத்துரை மகன் தனபாலாவின் தயவில்
இன்று எதையோ எழுதுகிறேன்.

ஜுலையின் வலி பெரியது

நான் அனுபவித்தவை...


நடு இராத்திரியில்
எனது மலக் குழியில் செலுத்தப்பட்ட
பொலீசின் ஆண்குறியின் தடிமனால்
எனது வலியும் ஜுலைதான்


கொல்லப்பட்டவர்களில் பலரை எனக்குத் தெரிந்தது
கொன்றவர்கள் பலரை நான் முஸ்லீமாக இனம் கண்டதும் உண்டு
எதற்கொடுத்தாலும் அழிந்தது ஒரு சமுதாயம்

என்னை ஒடுக்கியபடி
நான் ஓரத்தில் மௌனிக்கலாம்
வரலாறு மௌனித்தால்
எனக்குள் நெருப்பு எரியும்
தேசத்திலும் ஒரு இனம் எரியும்
இதுதான்
1983 ஜுலை 23.


ப.வி.ஸ்ரீரங்கன்
23.07.2008

தேச காளியின் நீட்டிய நாவு

சமாதிகளுக்கு
இனியும் இடம் உண்டா?

உண்மை
உருக்குலைந்த புயற் பொழுதொன்றில்
உப்புச் சட்டிக்குள் வெள்ளம்
உளிகொண்டு
உப்பகற்றும் என் முனைப்புக்கு
இருட்டுப்பட்ட திசையொன்றில்
வெளிச்சம்

கக்கத்தில் சொருகிய இரும்புடன்
காலில் கிடக்கும் புண்ணுக்குப் புனுகு தடவுதலும்
தேசத்துக்குக் காவடி தூக்குதலும்
வழமைக்கு மாறாக இன்னும் தொடரும்
என் நெற்றிப் பொட்டில் கொடியேற்றி

ஒட்டிய புன்னகையும்
ஒடிந்த உடலும்
மீட்சியிழந்து குற்றுயிரில் தவிக்க
மீண்டுமொரு சந்தில்
மிதிபடக் காத்துக்கிடக்கும்
சில மண் புழுக்கள்
தமிழுக்காய் பொங்குகின்றன

எனக்கிருக்கும் வரம்பற்ற ஊக்கத்துள்
வக்கீலாகப் பலர் உள் நுழைய
என் கச்சைக்குள் கறையான்கள் அரித்தபடி
வீட்டுக்குள் அறுவடைக்காக
அம்மாளுக்குப் படையல்

தேச காளியின் நீட்டிய நாவுக்குள்
உள் நுழைந்த இலையான்கள் சில
தொண்டைக்குள் தீபந்தம் ஏந்துகின்றன
தெருவிலிருக்கும் தெருலாம்பு
கரகாட்டம் செய்யும் புயற்காலம்
இத்துடன் அமிழ்ந்து போவதாகப் பத்திரிகைச் செய்தி

இதற்குள்
படுத்துறங்கிய தாத்தாவுக்கு
நாவுக்குச் சுவையாக
எச்சில் கனவொன்று நீண்டபடி
கனாக்காலம் விலகிய மண்ணிலோ
வினாக் காலம் பிறந்து
பிரளயம் தாண்டவமாடுவதாக
உப்புப் போராட்டம் ஓங்கிச் சொல்கிறது

உனக்கான காலம்
ஓரத்தில் புரண்டது போதும்
ஒற்றைக் போரில்
ஆயிரம் முடிச்சவிழ்க்கும்
தேசத்தில்
எனக்கும் பின் உனக்கும்
சமாதிகளுக்கு இனியும் இடம் உண்டா?


ப.வி.ஸ்ரீரங்கன்
18.07.2008

என்னென்ன கூத்துக்கள்...

தமிழீழக் குடை


தமிழீழத்துக்கான
"ஆதரவை"க் கோருகிறது பொங்கு தமிழ்
வர்த்தகத் தேசியம்
ஆதரவு இருந்ததனாற்றான்
தற்கொடைப் போராளியும் அவர் தாய்ப்பாசமும்
இதுவரை இவர்களைச் செல்வர்களாக்கியும்
தேசத்தைக் குருதிக்குள் தொலைத்தபடி
குழந்தைகளைக் குண்டுடன் தொலைக்கிறது!

தமிழைச் சொல்லியே
தரணியில் சந்தைப்படுத்தப்படும்"ஈழத்துக்கு"
ஆதரவைக் காட்ட
நீ,
அழகான தமிழிச்சி
அமுகிப் பிடிக்கும்
அற்புதத் தமிழீழக் குடையை வேண்டு!

கோரிக்கைதான் இது


கொம்பு முளைத்த
தமிழ்த் தேசியத்தின் ஏக குத்தகைக்காரர்
செய்வித்துத் தரும் குடைக்களும்
தமிழீழத்தை மொத்தமாக ஏலத்தில் விட
தமிழிச்சி உடலைத் தற்கொடையாய்க் கொள்ளும்
தமிழீழத் தாகம் மட்டுமல்ல
அதைச் சொல்லி கல்லாவை நிறைப்பவர்களும்
தமிழிச்சியின் உடலைப் புசித்தபடி
வர்த்தகத்தில்"ஆதரவு"கோருகிறது!-மங்கு தமிழ்!!


இதுவும்,
தேசத்தின் விடிவுக்குத்தான்
பல்லிளிக்கும் உடலும்
பகட்டான உடையும்
பக்கா வியாபாரம்
தேசியத்தின் பெயரில்


தூ...
பெண்ணுரிமை
தேசியம்
விடுதலை
தமிழீழம் சுயநிர்ணயம்
குப்பைகளைச் சொல்லியே
கோபுரங்கள் கட்ட
தாய்மையை ஏலத்தில் விடும் புலிப்பாசிசம்

தமிழையும்
தமிழச்சிகளையும்
ஏலத்தில்விட்ட இந்தத் தேசியம்
இலட்சம் உயிர்களையுந் தேடிப் புதைத்தது
தேசிய வர்த்தகத்தில்

இதுவும் அதன் வினைப் பயனாய்...


இன்னும்
என்னென்ன கூத்துக்கள்
இந்தக் கொலைக்காரக் கோமாளிகளால்
நமக்கு விடியும்?


ப.வி.ஸ்ரீரங்கன்.
20.06.2008

கொல்பவர்களைக் காட்டு நீ

தெருமுனைகளும்
தேசத்தை ஏலம் போடும்

கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்

நீ "ஈழவிடுதலை" என்கிறாயே அது என்வென்றுரைக்க முடியுமா?
மோதிய சுவரில் வழிந்தோடும் குருதியில் பட்டுவிலகும் தென்றல்
நாசித்துவராத்தோடு குருதிவெடில் சுமந்து
எனது உயிர்ப்புக்கு உப்பிடுகிறது

எனக்குள்ளும் இறந்தவர்கள்
கொன்றவர்களுக்குள்ளும்
கொலைகளை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்கள்
தேசத்தினது விடுதலையை மையப்படுத்தும் துப்பாக்கிவழி

எனக்கிருக்கும் உயிர்த்திருக்கும் உரிமை
எந்தத் தேசமும் தந்ததில்லை
அதைத் தருவதற்கு எவருக்கு உயிருரிமையாக்கப்பட்டது?
ஒட்டிய உடலொடு கஞ்சல்படும் உயிர் மொழியின் உரிமைக்கு உருமாகிறது

மொழியோ எனக்குள் இருப்பிழக்கிறது
அஞ்சல்படுத்தப்படும் மனித அழிப்புக்கு
உலகத்தின் பலபாகத்திலும் நியாயவோலை எழுதப்படுகிறது
மக்களின் நலனென்று கொலைகள் தீவிரமாக நடாத்தப்பட்ட

தெருமுனைகளும் தேசத்தை ஏலம் போடும் பொங்கு தமிழென
சாவதற்காய் உயிர்த்திருக்கும் அனைவரையும்போலவே
எனக்கும் உயிர் நிலைத்திருக்கு
எழுப்பப்படும் உயிரின் முனகலில் மரண வலி

கொலைகளின் தீவிரம் எதற்காக?
மரணம் நிச்சியப்படுத்தப்பட்ட பலிப்பீடத்துக்கு முன்னே
துப்பாக்கிகள் பிராத்தனை செய்கின்றன
தோத்திரம் உரைக்கும் எனது எஜமானர்கள் கைகளில் ஏசுவின் குருதி

கண்டடையப்படும் நியாயத்தின் வழி
விடுதலை எனக்குச் சாத்தியம் என்பவர்கள்
என்னைத் துரோகியென என்றோ கொன்றழித்தனர்
இதையும் விடுதலையின் நீதி என்கின்றனர்!

வாழ ஆசைப்படும் மெல்லிய விருப்புக்குத்
தேசத்தின் பெயரால் தியாகம்-வித்துடல் முன் நிறுத்தப்பட்டபின்
மரணங்கள் வழிபாட்டுக்கான தரிப்பிடங்களாகின்றன
கொலைகள் "ஈழப்போர்" எதிர் கருத்துக்குத் தீர்வாகிறது

போர் வாழ்வு புகழுடம்பின் புனிதமாகின தேசத்தில்
கொல்லப்படும் உயிர் கடைப்பொழுதிலும் வாழ்வுக்காக ஏங்கித்தொலைகிறது
அதையும் தேசவிடுதலைத் தியாகமென்று
உலகத் திண்ணைகளில் தேசியக் கொடியேற்றுகிறது பாசிசம்

கொல்லப்படுவதற்கு முன் கல்லறையின் முன்னே
கனத்த மனதுடன் குழந்தைகள் அணிவகுத்தபடி
வாழ்வுக்காய் ஏங்கிக்கிடக்கச் சில காட்டுமிராண்டிகள்
தமது கட்டளையைச் சுமக்கும்படி துப்பாக்கியால் சத்தியம் வேண்டுகிறார்கள்

கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்

ஈழம் விடுதலையாவதற்குள் குருதிச் சேற்றில் அமிழ
தமிழ்க் குறுந்தேசியம் என்னையும் உன்னையும் அண்மிக்கும்
ஈற்றில் இருவருக்கும் வேறு கல்லறைகள்
"துரோகி-தியாகி"என்று குருதியல் எழுதியும் வைக்கப்படும்

விடுதலை, சுதந்திரம், சுயநிர்ணயம்,தமிழீழம்
ஏகப் பிரதிநிதிகளின் வழியே பொங்கு தமிழாகப்பொங்க
கல்லாப் பெட்டிகள் நிரம்பும் தேசிய வர்த்தகத்தில் பணமாக
இல்லாத ஈழமோ பிணத்தால் நிரம்பி வழிய



21.06.2008

தந்தையுமாகி நின்று

எந்தையும்
தாயும் எனத் தொடர...


"இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்"
இன்னமுமே புரியா இது அத்தான்-ஆசான் தாயுமாகி
இன்னதெனக் கூறுவதற்குள் இதயமொடு சமரசஞ் செய்யுந் தருணத்தில்
இதுதானோ உற்றார்க்கு உடம்பு மிகை, பிறப்பு அறுக்கல்?

காற்றே கவிந்திருக்கும் கருமுகில் அறுத்து
காவிச் செல்லு என் கண்ணீரை
கட்புலம் நோகிய நினைவொடு நெஞ்சு
அத்தானாய் வந்தாய் ஆசானாய் இருந்தாய்

தந்தையுமாகி நின்று
தமிழ் செய்யும் எனது மனதில்
நிலைத்தாய் தாயுமாகி தாங்கொணாத் தவிப்பு
தர்க்கத்துள் நிலைக்காத உறவில்

என்னத்தைச் சொல்ல?எத்தனையோ பகைகொண்டேன்!
பக்குவமாய் உறவுறுந் தருணமொன்றிற்காய் நாம் காத்திருக்க
காற்றிடையுறவுண்டாய் கவிதையானது உனது நினைவு
நெருப்பிடும் கணத்திலும் நின் பெருமிதம் எனது நினைவாய்

தளையறு வாதத்திலும் தவப் பெரும் தர்க்கத்திலும்
தமிழாய்ச் சொல்லும் உணர்வினுடு தவித்தவொரு வாழ்வும்
போரிடை அன்ன தன் புதல்வச் சுற்றமும் சுற்றப்
பொருவில் மேருவும்,பொரு அரும் வாழ்வு புக்கான்

நிலவொடு வானம் பொருந்தும்?
முகிலொடு பொழிவு நள்ளும்
புகழ்தரும் பொலிவும் அமிழ்தின் அகமும்
அந்தமிலா அமைதிகொள்ள வாயிடை மொழியுமானாய்

தக்கதே செய் என்பாய்
தகமையாய் வளர்க என்பாய்
தாயினும் மேலாய் இருந்தாய்
தந்தையே எனக்கும் ஆனாய்!

இன்றோ என் சொல்லுக்குச் சுகமுமில்லை
நீ இல்லா நினைவுக்கு உருவமுமில்லை
கனத்த உணர்வினுள் கண்ணீரொடு மோதும் நான்
கண்ட மாத்திரத்தில் நீ காலமுமானாய்?

மாமுனி மனையோடு மருவிய கால வெளியொன்றில்
விழி எறிந்து வரவுக்காய் நான் மிதந்த பால்யம்
பக்குவமாய் பொத்திய புதுவுணர்வுக்கு நீ உறவென்றாய்
உளமொடு ஊனும் நோக உனக்கெனப் பணிந்தேன் அன்று

மைத்துனர் முறைமையால் மனதுடைந்து
மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம்
நேற்றைய நினைவுமுறிக்க
நீ நெடுந்தொலைவில் நிற்கக் கண்டேன்!

"கெட்டேம் இதுஎம் நிலை என்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகுபவர் சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரிது இகழ்ந்து ஆற்றவும்
எட்டவந்து ஓர் இடத்து ஏகி நிற்பவே"என்பதும் அறிவாய்

இற்றையில் வெம்பி வெந்தழுது வீங்கி நிற்கும்
நினைவுடை நெஞ்சுகொண்டேன்
உற்றது உறவென்பாய் அற்றது அறமுமின்றி
அழிவது இயல்பென்பாய், அர்த்தமும் ஆசானாய் ஆனவனே!

முற்றத்து வாழை குலையீந்த
முத்தனும் பெண்டிரும் கூத்தாட
மெத்தமும் நித்தம் இது தொடர
அந்தமும் ஆதியும் பொய்த்திருக்க

எந்தையும் தாயும் எனத் தொடர
சிந்தையில் சிறப்புடை சேர்த்த நினைவிடை
நெஞ்சறி நன்றி நானுரைக்க-என்
இதயத்துள் எங்கோ நிறைந்திருப்பாய்.

ப.வி.ஸ்ரீரங்கன்.
13.05.2008

வரலாறு எவ்வாறு எழுதப்படுமோ?

குத்தகைக்கு எடுக்கப்படும் யுத்தம்!


தேசத்தின் "வட-தெற்கு" இருமுனையிலும்
யுத்தக் கயிற்றைக் கட்டியது காலம்
ஒரு முனையில் கட்டப்பட்ட யுத்தம்
இப்போது பகிரங்கமாகக் குத்தகைக்கு எடுக்கப்படுகிறது
"யுத்தத் தளபாடங் கொள்முதலுக்கான உதவி"எனும் பெயரில்
மறுபுறம்,
மரணத்தைத் தடுத்தாட்கொள்வதற்கான"தேச விடுதலை" எனும் பெயரில்!

எவருக்குத் தெரியும்
தாய்மையின் பிரசவ வலி?
சுருங்கக் கூறிவிடலாம்,
சுண்ணத்துஞ் செய்துவிடலாம் விடுதலையில் பெயரில்
சில வெற்றிகளில் யுத்தமுனைகள் இரண்டும்
சிலகாலம் உயிர்த்திருக்கும்
மறுபடியும் "ஏலங்கள் விடப்படும்"குத்தகையை வேண்டுவதற்காக

பொடிமெனிக்கே காமனிக்காய்ப் புத்தரிடம் ப+க்கொண்டோட
பொன்னம்மாள் கருணைதாசானுக்காய்க் கும்பிடுபோட்டபடி
தேசங்கள் தேவ தூததர்களின் தயவில்
இரும்புகளைக் காவித் திரிவதில்
மக்களின் வயிற்றையும் உயிரையும் பறித்தபடி
புதுக்கணக்கிட்டு யுத்தத்தின் எல்லைகளை நீட்டும்

எலிக் கறியுண்பவன் தேசம்
சந்திரனுக்கு ரொக்கெட்டு விடும் கனவில்
அம்பாணியின் நோட்டுத்தாள்களை வட்டியில் நனைத்தபடி
இலங்கையின் இறைமையை ஏந்தி
பக்ஷவின் மடிக்குள்"போர்ட் மீட்டிங்"நடாத்தும்

யுத்தக்களத்தில் போராளிகளின் மன நிலையையும்
விசாரித்து வைக்கும் சில ஊனத்துப் பிறவிகள்
"விடுதலைப் போராளிகளும்"ஜந்திரமான கூலிப்படையாய்
மெல்ல மாறியதான சாட்சியாய் விரியும் அந்த விசாரிப்பு!

அன்றுமின்றும் குண்டுகள்தான் ஓடுபிரித்து உயிர் கொல்லும்
இப்போது"தேசிய விடுதலையும்"ஓடு பிரிக்கும்,
ஒடுங்கிய சிறுசுகளை அள்ளிச் செல்லும்
சில ஆயிரம்
"டொலருக்கு முன் சிறார் இராணுவம் டொலரல்லாதபின் மாவீரர்" என்ற
புதிய பதிவு தொடரும் பெட்டிகளாய்!

வரலாறு எவ்வாறு எழுதப்படுமோ?
தவித்துப் போவது தாய்மை மட்டுமல்லத் தேசமும்தான்!
தட்டிப் பறித்த சில்லறைகளுக்குப் பதிலாக
உலகம் உயிர்களை எண்ணிக்கொள்ள முனைகிறது
யுத்தின் பெயரிலும்
உணவுத் தேவையின் பெயரிலும்
இங்கு ஒழுங்குற இயங்கும் வியாபாரம்

என்றபோதும்,
எனது நெஞ்சில்
"இறுதிப் போராளி உள்ளவரை
விடுதலைப் போர் தொடரும்"ரீல் விடும் காலம்


மலந் துடைக்கும் காகிதங்களாய் தாய்மையின் வலிகள் ஒதுங்கும்
வறுமையில் அவளது உயிரோ ஊசலாடும்
நம்பிக்கை மட்டும்"பெட்டி"வரும்வரை
மகவுகளின் உடலில்
உயிர் நிலைத்திருக்கும் கனவை விதைத்தபடி...


ப.வி.ஸ்ரீரங்கன்
29.04.08

வா புத்தாண்டே

வா புத்தாண்டே!
வா புத்தாண்டே ஈழ மண்ணில் போர் தொலைத்து

குறுவிழி காண் மரணம்
கருமனங் கொண்ட இருள்
சுருங்கு நட்பறியா இதயம்
மூன்றுங் காணிடம் மறைக

பூவும் புகையும் பிணைவுறும்
நோவும் சாவும் கொண்ட ஈழம்
போரிடை கருகும் நெஞ்சும் நிலமும்
பாரிடை இனியும் வேண்டாம்!

தேரும் திரி வடமும்
மோரும் முது கையும்
பாலும் பசுவும்
மண்ணும் நெல்லுமாக பொலிக ஈழம்

செம்பு நீரும் செம் மண்ணும்
கோலந் தரும் முற்றமும்
பொங்கற் பானையும்
திசை பார்த்த சரிவும் நிறைக தமிழர் இல்லம்


மைவிழி மகளிர் நீராடி
தாவிக் கூத்தாடித் தமிழ்பாட
நிலமகள் மதித்து நிமிர
வா புத்தாண்டே ஈழ மண்ணில் போர் தொலைத்து

குலமுதற் கிழத்தி
குடிமுதல் உழவன்
மண் வளத் தேட்டம்
மலர்ந்த பொழுதாய் வா புத்தாண்டே

பாற் சோறு வேகும்
தரும் கைகள் வலுக்கும்
கொடுங் கோன் மறையும்
வான் கொடை வளரும்

கண்மாய் நிறையும்
மண்வாய் திறந்து
மணிமுத்துப் பெருகும்
மழலைகள் தவழும்

மண் வினைப் பயனால்
மண்ணுடையான் தழைக்க
நெடுமாரி சூடி
குக்கிராமம் கூடிய பொலிவில் சிறக்க

தெருவெல்லாம் கூடும்
திசையெல்லாம் கேளீர்
நமக்கு இனி அழிவு இல்லை
வா புத்தாண்டே வயலும் வயிறும் வாழ்த்த!


ப.வி.ஸ்ரீரங்கன்
31.12.2008
பின்னிரவு:0,35

விலகுங் காலம்

புத்தாண்டே,வருக!


மெட்டரும்பும் பொழுது
புலர்வதற்காய் விடிவு
நொருங்கிய இதயம்
குறை வயிறு

குந்தியிருக்கும் கொட்டில்
குளமான முற்றம்
எச்சில் மிதக்கும்
கழிச்சல் கரையும்

இது எங்கள் வாழ்வு
எழுதாத சட்டமும்
எழுதிய சட்டமும்
எங்களைக் கெடுக்கும்
எருவான வியர்வை
பயன் கொண்ட வாழ்வு எவருக்கோ!

பேச்சிலும் மூச்சிலும் முனகல்
முழியிழக்கும் நீரோ
எங்கள் முற்றத்தை நிறைக்கும்
நித்தம் இருண்டு கிடக்கும் தேசம்
தெருவில் ஓடுடன் உழவன்

தேசங்கள் விடியுதுதாம்
உலக வர்த்தகத்தால்!
உப்புக்கும் அவர்கள்
பல்லுக்குக் குச்சியும் அவர்களே செய்வர்
உருப்பட்டது எமது வாழ்வு

விடிவுக்காய் யுத்தமென்று
மடிவுக்காய்த் தொடரும்
மனிதமும் பேசி
மாண்டவர் உடலில்
தூண்டுவர் குரோதம்!

இத்தனைக்கும் மத்தியில்
இன்னொரு புத்தாண்டு
பிடரியில் முட்டும் பட்டுணி மரணங்கள்
பாய்விரித்துப் படுக்க
பாடை கட்டும் பொழுதோடு காலம்
குண்டு காவி கொட்டும் கொடிய விமானம்

பார்போற்றும் புத்தாண்டு
போரொடு புலரும்
பொழுதெல்லாம் குருதி நெடில்
கொப்பளிக்கும் குண்டுகள்
வெட்டப்படும் சுரங்கம்
வெருட்டப்படும் வேலையிடங்கள்
வேள்விக்குத் தொழிலாளி
வேளைகளில் உடல் தொலைத்து...

உருப்பட்டது உலகம்
உருப்படியாய்ப் புலராத வாழ்வு!

உங்களுக்கோ உலையேறும் அடுப்புகள்
எங்கள் அடுப்பில் பூனைகள் புரளும்
துள்ளும் குட்டிகள்
தூங்கும் சுகமாய்

குண்டடிபட்ட மனிதக் குழந்தை
குருதியிழந்து தூங்கும்
இத்தனைக்கும் மத்தியில்
வருக புத்தாண்டே,வருக!
வேறு:
மெட்டரும்பும் பொழுது
புலர்வதற்காய் விடிவு
எமது கால்களில் நாமே நின்றால்...




30.12.2007

மழலைகளின் மரணத்தை...

குரைக்கும் நாய்!


நாயொன்று இருந்தவிடத்திலிருந்து
குரைத்தபடி கோடுகிழிக்கிறது.
எனது தேசத்தில் குழந்தைகள் போராட வெளிகிட்ட நேரம்
ஏழரைச் சனியனின் நேரம்

தொடர் தோல்வியில்
என் இரத்தம் இலங்கைத் தீவெங்கும் ஆற்றை உண்டாக்கியபடி
தேசத்தின் மடியில் தவழ்ந்த என் புதல்வர்கள்
தாம் நினைத்த காரியத்துக்காகச் சாகிறார்கள்
எனினும்,
என் தேசத்தின் பிதாவுக்குச் சூழலை மதிப்பிடும் தகமையில்லை
இவன் தந்தை
நடந்த புல் சரியாத நன்றியுடை நல்ல மனிதன்
நான்
இவனை"அவனே-இவனே"என்பேன்!

என் தேசம் மரணிக்கிறது
எனக்குள் குருதி உறைகிறது!
நான் பாடிய மாதாகோவில் குருசு மரம்
எனது பிணத்தால் கறை படும் ஒரு பொழுதில்
எனது பிணம்
என் தோட்டத்தில் புதைத்தாகணும்
அதற்காவேனும்
நான் என் தேசத்துக்காக மரித்தாகணும்!

விடுதலை!

வீரியமிக்க என் மழலைகளின் மரணத்தை
நான் தாங்க முடியாது
புலம்புகிறேன்!


"புலிகளுக்குக் கடுஞ் சேதம்"தினக்குரல் செய்தியைப் போடுகிறது!
என் கண்களில் நீர் தாரைதாரையாகச் சொரிகிறது.
இது எனது சுயம்!
என்னை
எனக்கே புரிய முடியவில்லை.


நான் புரட்சியை விரும்புகிறேன்
இதைவிட என் மழலைகளை
தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன்
அவர்கள்
அப்பனாகிய என்னை
அம்மாவாகி என்னைக் கொல்லலாம்
அதற்கு அவர்களுக்கு முழு உரிமையுண்டு!

தேசத்தின் கருத்தரிப்புக்குத்
தம்மை வித்தாக்கியவர்கள் அவர்கள்!!!


எனது மரணம்
அவர்களது தியாகத்தின் நீட்சியாகணும்
என் திடமான மரணம் தேசத்தின் வலுவுக்கு வீரியம் சேர்க்க
நான் அழிந்தேனும் அறிவைச் சொல்வேன்
என் குழந்தைகளின் படிப்புக்கு எதுவுமே சொல்லிக் கொடுக்கவில்லை
அவர்கள் பெறும் முட்டைகளில் நான் வெம்பிக் கொண்டாலும்
எனது தேசத்தின் குழந்தைகளின் உயிரின் விதைப்பில்
என்னை இழக்கிறேன்.

புரியாதவொரு புலத்தில் புலம்புகிறேன்
பெற்ற கல்வியில் தேசத்தின் விடிவைக் குறித்து நோகிறேன்
பெரிய கலைகள்,
பெரிய முறைமைகள்,
பெரிய தத்துவம் புரிந்த பொழுதுகள் ஏராளம்!
எனினும்,
என் மாதாவின் வயற்பரைப்பில் மரணத்தைக் கேட்கிறேன்
என் தேசத்தை நிர்மாணிக்கிற தேசத்துக் குழந்தைகளே,
போரிடுவென்று சொல்லேன்!!


கற்றுக் கொள்,
காலத்தை-நேரத்தை!
உனது தியாகம்
தேசத்தின் விடிவுக்கானதாவென்று
நீ
உணர்வதற்காய் கற்றுக்கொள்,கற்றுக்கொள்,
இன்னுமொருமுறை கற்றுக்கொள்!

நாயொன்று இருந்த இடத்திலிருந்து குரைத்தபடி
அது
எனது தேசத்தையும் குழந்தைகளையும் தின்னும் நோக்கில் குரைக்கிறது!
எனது கரங்களில் வலுவில்லை
கல்லெறிந்து வெருட்டுவது எனது நோக்கமில்லை
அதை மண்ணில் புதைப்பதே எனது நோக்கம்


நான்
வெறி பிடித்தவன்!
அறிவின் வெறி,
ஆணவமாய் இருக்காதெனினும்
அந்த வெறி
உலகத்தின் அறிதலை வெற்றி கொண்ட வெறி!!!


குரைக்கும் இழி நாய்
என் முன் மண்டியிடுவதல்ல என் நோக்கு!
அது கொண்ட அரசியலே
அழிவுக்கு வழி என் தேசத்துக் குழந்தைகளுக்கு,
இதை நீ
புரிக!

06.12.2007

நானும் அழிந்தமை

காமனை வென்றகண்
ஆரை உகப்பது?


காமத்துக் கொட்டகையிலொரு
சூத்திரக் கனவு
கவித்துவமாக
கனிப் பறிப்பதற்கும்
புசிப்பதற்கும்
பக்குவங்கள் சில பாடங்களாய்...
பாய்(மெத்தை) விரித்தலென்னவோ
"ஏடங்கை நங்கை
இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம்
விரும்புவெண் தாமரை
பாடும் திருமுறை
பார்ப்பனி பாதங்கள்
சூடும்என் சென்னி..."அவளை நொந்து

(...) பாதம் தாங்கிய தலையின்
பின்னிரவுக் கனவின் கடுப்பில்
ஓரவாயுள் உவர்ப்பாய் ஊறிய
ஒரு யுகக் கனவு

அடுப்பில் எரியும்
பட்டமரத்துக் கட்டையாக
விரும்பு என்(அவள்) செந்தாமரையும்
விட்டது மூச்சு
அப்போது,

"எட்டுத் திசையும்
அடிக்கின்ற காற்றவன்
வட்டத் திரைஅனல்
மாநிலம் ஆகாசம்
பொடியுரியுங் காலத்துப் பொய்வெளிதனிலும்
பொய்யாக் கனவு புணரும் பொழுது
மெய்யா முடக்கு வாதமொன்று
ஒட்டி உயிர் நிலை
என்னும்இக் காயப்பை
பெருங்காய டப்பாவுக்கும்
பெருமையிலாப் எதிர்ப் பால் வினiயுங்
கட்டி அவிழ்கின்ற
கண்ணுதல் காணுமே!"

அக்காப் பாட்டும்
பக்காப் பொருளும்
பல்லுப் படரும்
சொல்லும் அவிழ்க்கும்
சுகம் ஒன்று
சொறி நாய்ச் சிரங்காய்ச் சொறியும் எங்குமெதிலும்

ஏடங்கை நங்கை
உடலெங்கும் தேடும் படிகம்
எடுப்பதும் சுவைப்பதும்
சொல்லிப் புரியாச் சுகம்
வில்லுக்கு விஜயன்
மல்லுக்கு நான் வீமன்
வாளுக்கு என் தோழன்
முக்காலமும் உணரும் பெருவெளிப் பாதையொன்றில்
வீழ்ந்தேன் பெருவினையால்

"உடலாய் உயிராய்
உலகம தாகிக்
கடலாய் கார்முகில்
நீர்பொழி வானாய்
முக்காலப் பருவப்பயல்கள்
பாவியாகப் போகவும் துணியும்
விரும்பு செந்தாமரை விடியும்
விரியும் குவியும்
வியர்க்கும் விழிக்கும்
இடையாய் உலப்பிலி!"

அறியாப் பொருளாய் அமர்த்திய
விடலைப் பருப்பு அவியாப் பொழுதில்
எடுப்புப் பற்றிய இடுப்புச் சுகத்துள்
அடையார் பெருவிழி
அண்ணலாய் நானும் நின்றேனே நிமிர்ந்து!

சிற்றிடைச் சீமைச் சிற்பவலையுள்
செருகும் தலையுந் தொலைய
முறியும் கனவும்
கவிழ்த்த ஆண்மையுங் கரைய
கடுப்பாய் உலரும் உதட்டில்
வெளுப்பாய் மறையும் ஆத்தையின் கோலம்

"தானும் அழிந்து
தனமும் அழிந்துநீடு
ஊனும் அழிந்தென்
உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து
மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை
நானறி யேனே?"

நானறிந்தே அழிந்தேன்
நாவின் சுனையுள் நடுங்கிய கன்னி
மோகச் சுவையுள்
மடி வலித்த கணத்துள்
கடைந்தாள் "என்னை"
அள்ளிய பொழுது
அதுவே அழுதது
அலப்புத் தாங்காது.

காமனை வென்றகண்
ஆரை உகப்பது?
நெக்குநெக்குள் உருகி உருகி
தொப்புள் வெளியுள்
நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
பழந்தாங்கும் முனையுள்
நக்கும்அழுதும் தொழுதும் வாழ்த்தி
செந்தாமரைச் சொண்டில் குந்திய பெருநிலையில்
நான விதத்தால் கூத்து நவிற்றிச்
கொடிபோலும் திருமேனி
கொழுத்துக் கிடக்கும் கொல்லைப் புறத்துள்
திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப்
புக்கு நிற்பது என்றுகொல்லோ
என்
இள மேனிச் சிலிர் நங்கை
மென் கொங்கை புணர்ந்தே!

ஓம் சூத்திரா!
காமத்துச் சூத்திரச்
சுகத்தைச் சொல்லிப்
புகுவீர்
மெல்லத் தாண்டும்
தெற்பத்துச் சுகத்துள்
மேனினுடங்கி!


(மோகத்துள்
முக்கி முனகிய பொழுதொன்று:05.10.2007)

ஒதுங்குக ஓரமாய்

அரசியல்சாரா
"என்னை"
அரசியலாக்காதீர்கள்!

"அரசியல் சாராததென்பதும் அரசியல் சார்ந்ததே!"
அரசியலின்றி அணுவும் இல்லை
அதுதரும் ஒளியுமில்லை-அழிவுமில்லை
எப்பெப்ப ஏது எழுதிடினும் இருப்பது அரசியல்தான்
நான் என்பதன் திரட்சியே
உடலின் அரசியலையும்
உளத்தின் அதுசார்ந்த கருவுருவையும்
புற நிலையின் தன்மையே
"நான்"என்பதையுஞ் சொல்லி
எனதென்பதையும் காட்டி
அதுதாண்டிச் செயலையும் தூண்டி
"எப்படியும்"எழுதத் தூண்டுவதால்
அங்கேயும்"அப்பன் அரசியல்"
அமர்ந்திருந்து அழுத்தி
ஐந்து ருபாய்க்கு அப்பம் வேண்டும்போதும்
அரசியலாய் வந்துவிடுகிறது!

பெரியாரியமென்பது
அரசியலற்ற நிலவினது
(ஓ... நிலவின் நிலத்தைக்கூட விற்றிருக்கிறார்கள்,
அதையும் அமெரிக்க "அப்பன்கள்" வேண்டியுமிருக்கு...) நீட்சியல்ல

நீட்டிமுடக்கும் ஒவ்வொரு சொல்லும்
அரசியலின் அடுத்த நகர்வைச் சொல்பவை
"பெரியார்"என்பதே அரசியல்தான்
அங்கேயும் அடுக்கப்பட்ட
ஒவ்வொரு கல்லும் அரசியலை உரிப்பதற்கே

விழிப்புணர்வென்பதன்
உட்புறஞ்செரியும் உருவம் என்ன?
அதைச் சொல்லும் அரசியலும்
நிலவும் அரசியலின் அடுக்குகளுக்கு ஆராவாரம்
அள்ளித் தெளித்து
கக்கத்தில் வைக்கும்"அரசியல் சாரச் செயற்பாடு" என்றும்
அடுத்தவருக்குச் சொல்லும் அவசரத்தில்
"பெரியாரியம்"அரசிலின்றி இருந்தால்
அடுப்பு ஊதவும் அருகதையின்றி
அழிந்தொழிந்து அக்கிரகாரத்து
அடுகளையுள் அள்ளிய சருகாய் கிடந்திருக்கும்!

அறிக!
அரசியலறிவற்று
அரசியல் பேசும்
அன்புநிறை அகப் புரட்சியார்களே-
பெரியாரிய விழிப்புணர்வுப் விழுப் புண் வீரர்களே!!

அரசியலுக்கு
அடித்தளம் பொருள்
அது தரும் வறுமைக்கு
சட்டம் சொல்லுஞ் தனியுடமை
அப்பவும் வரும்
அடக்குவதற்காய் ஆயிரம் படை மதமென்றும்

மண்ணென்றும் மோட்ஷமென்றும்
இப்பவும் சொல்வோம்
"அரசியலற்ற-எந்த அரசிலுமற்றென்னை
உங்கள் அரசிலுக்குள் தள்ளீ
அடக்கப் பார்க்காதீர்கள்"
"பெரியார்" எவரது என்போம்?
அரசியல் அற்றிருந்தால்
மார்க்ஸ்-காந்தி மற்றும் பல புள்ளிகளும்
பாருக்குள் பண்டியாய் இருந்திருப்பர்
அந்த அரசியல் சாராதிருந்தால்!!

பகக்தில் பாம்பு வருங்கால்
படபடக்கும் உணர்வுக்குள்ளும்
பொருள் சார்ந்த எண்ணம் கண்டீர்!
போரிடடும் தருணமே
காரணத்துக் காரியத்துக்கும்
முடிச்சிடும் முன்னைய புரிவில்
மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே!
உங்களைச் சொல்லி"அரசியல்"செய்யும் அரசியலும்
அரசியலில்லை அரசியல் இல்லை(!!!???)

அப்போதெதற்கு நான்
வார்த்தைகளை அடுக்கி
வம்பு பேசுகிறேன்?

அரசியல் சாரா "என்னை"
அரசியலாக்க "ஒரு கூட்டமே" அலைகிறது
அது ஒதுங்குக ஓரமாய் இப்போது
என் "வாடகை" வீட்டுக்கான நிலவரியை கட்டுவதற்கு
நான்
பேரூந்துக்கு "ரிக்கற்" எடுக்கக் காசு இல்லை!!


ப.வி.ஸ்ரீரங்கன்
07.10.2007

பலிப்பீடம்.

பலிப்பீடம்.

இருண்டு
மெளனித்துக் கிடக்கும் மேகத்துக்குக்கீழ்
இடித்தொதுங்கும் வவ்வால்
தூங்க மறுக்கும்

உருண்டு
உருவமிழக்கும் உணர்வுப் பொட்டலத்துள்
இருப்பதெல்லாம் வினையும்,வீம்பும்
எஞ்சிக் கிடக்கும் காலத்தையேனும் அறிந்தாபடில்லை
சொற்பத்துள்
இருள் படரும் ஒரு தினத்தைவிட
என் ஆயுள் நீண்டதில்லை


வவ்வாலின் இறக்கையெழுப்பும் ஒலியோ
அத்துமீறிய அதிர்வுகளை உணர்வுக்குள் எறிந்தபடி
இருந்த இடத்தை மறப்பதற்கு
இன்னும் நீண்ட தூரம் சென்றாக வேண்டும்
மரணத்தின் விளிம்பில் குந்தியிருக்கும் முற்றுப் புள்ளி


திரைவிலகும் ஒரு திசை வெளியில்
குத்தியெழும் அரண்ட மொழிவோ
அச்சத்தைத் தந்தபடி
அரவணைத்து ஆறுதலைச் சொல்வதற்கு
அன்னையோ நீண்ட தூரத்தில்
இனி அவள் வருவதற்கில்லை!

எனது
நித்தியங்கள் தலை குப்பற வீழ்கின்றன
நினைத்துப் பார்க்கவே மனது மறுக்கும்
கருமைப் புள்ளியில்
அறுந்து தொலையும் என் ஆணவம்
கடிகார முள்ளில் சிக்கிய உயிரோ
சுழன்றெழும் இன்னொரு பொழுதில் மீளத் தலை குத்தும்

என் தலையில் குவிந்திருக்கும் கறையான்கள்
அரித்துப்போட்ட அமைதிக்கு நாளை கருமாதி
எரிந்தொதுங்கிய சாம்பலுள்
கரித்துண்டாய்க் கிடக்கும் அநாதையுணர்வுக்கு
இன்னொரு பொழுதில்
கணிசமானவொரு உறை கிடைக்கும்


முடமாகக் கிடக்கும் காலத்துள்
நினைவு முறிக்கும் உண்மைகள்
ஏற்க மறுக்கும் தடங்களில்
இருப்பிழக்கும் மனித வெளிகள் இருண்டு கிடக்கும்


எந்தத்தேற்றமும்
ஊன்று கோல் தருவதற்கில்லை
முடங்கிக் கிடக்கும்
உருவமிழந்த இதயத்துள் எலி பிராண்டும்
பூனைகளின் பசித்த தவத்துள் அது சாகக் கிடக்கிறது


என்னைப் பிய்த்தெறிவதற்கு
பேரங்களோடு கட்டப்படும் சூன்யத்துள்
என்னதான் இருந்திட முடியுமென்பதை
இதுவரை நானோ அல்லது
என் மரணமோ அறிவதற்கு அவசியமில்லை


வவ்வாலின் வாயுள்
சிட்டுக் குருவிக்குப் பலிப்பீடம்


ப.வி.ஸ்ரீரங்கன்
இலையுதிர்காலம்: 2007.

கிராமத்தின் துடிப்பில் வலுவிருக்கும்

அகதியாகி
அழியுங் காலம்


சத்தமில்லாதவொரு தெரு முடுக்கில்
தனித்தேயிருக்கும் பொழுதொன்றில்
ஊர்க் கனவு
மனது கனக்கும்


அந்நியன்
எச்சமிடும் நிலையிலும்
கொலை விழும் தரணத்திலும்
எனது தேசத்துக்
கிராமத்தின் துடிப்பில் வலுவிருக்கும்
வாழ்விருக்கும்


ஆத்தையின்
இடுப்பிலிருக்கும் நீர்க் குடமும்
அள்ளிய நீரும்
ஆச்சியின்
சோறூட்டும் சூம்பிய விரல்களும்
அப்புவின்
சுருட்டு மணமும்
அந்தச்
சாக்குக் கட்டில் குட்டித் தூக்கமும்
சித்திரை நிலவும்
சின்னமடுமாதாவின்
பூசை மணியும்
சங்கு ஊதியதற்காகவும்
தேவாரம் பாடியதற்காகவும்
வைரவர் கோவிலில்
ஐயரிட்ட பொங்கல் அழிந்த காலத்துள்
பதியமிட்ட உணர்வு


புகையிலைச் செடிகளின் மலர்ந்த இலைகளும்
மெளனமாய்க்
கொட்டும் பனியும்
இதற்குள்
மனசைப் பறிக்கும்


அணிலின் பாட்டும்
பனங்காய் வாசமும்
அவற்றைப் பந்தாடும் ஊர் மாடுகளும்
அணைக்க
மாமிமகள் மச்சினிச்சியும்...
இளையராசாவின்"மச்சானைப் பார்த்தீங்களா"ப் பாட்டும்...
என்னத்தைச் சொல்ல?


ஐரோப்பியச் சந்தையில்
அனைத்தையும் பெற்றும்
அம்மாவுக்கு "அடுப்பெரிக்க விறகு பொறுக்கும்"
அந்தச் சுகம் இல்லை


கட்டிய மாட்டுக்குப்
புல் செருக்கும் வலியும்
அன்றைய வதையினுள்
ஓன்றாய் விரியும்
இங்கே
அகதிய அழிவில் அதுவும் சுகமே



கால் நூற்றாண்டு கடந்தாலென்ன
இல்லைக்
கட்டை
வெந்து மண்ணாகினாலென்ன?
கள்ளிக்கும்
ஆமணக்குக்கும்
கதை சொன்ன அந்தக் காலம்
கண்ணீரில் படரும்


பட்டம் விட்டு
அண்ணனும் தம்பியுமாக
அள்ளிச் சுவைத்த அம்மாச் சோறு அமுதம்!


இப்போதும்
மனைவியுண்டு
மக்களுண்டு
வேலையுண்டு
காருண்டு
காசு உண்டு
ஆனால்இ
கண்ணீர்...

காலங்கள் கடந்திடினும்
கண்ணீரில் நிழலாடும்
என் முற்றம்!


முப்பாட்டன் வளர்த்த பனையும்
அப்பன் தோண்டிய கிணறும்
ஆத்தை அவிந்த சமையற் கட்டும்
அள்ளிச் சுவைத்த செம்பு நீரும்
ஓட்டைச் சயிக்கிளும்
புழுதி ஒழுங்கையும்
ஆடும்இமாடும் அந்த வீமாவும்
"உஞ்சு"என்பதற்குள் காலை நக்கும்;
இன்றும்
அழியாத கோலமாய்...


எத்தனை இரவுகள்?...


இடித்துக் கொட்டும் மழையும்
ஐப்பசிப் பெருநாளாய் மலரும் சின்னமடுமாதாவும்
சங்கானைஇ
சில்லாலை மக்களின் கூடார வண்டிலும்
குயிலின் கூவொலியும்
கும்மாளமிடும் சிறுசுகளும்
குழம்பில் அவியும் மீனும்
குத்தரிசிச் சோறும்
கொடிய வதையாய்
இதயம் வலிக்கும்


சிங்கராஜரின் அடுக்கு மொழியும்
அள்ளித் தரும் அருந் தமிழும்
மாதாவின் வளவுக்குள் அலைய
அம்மாவின் மடியில் தலை புதைக்கும் நான்!


அங்கேயும் இல்லை நான்
இங்கேயும் இல்லை நான்
அகப்பட்டது அகதியாய்...

அந்நியனாய் முகந்தொலைத்த
இந்தப் பொழுதில்
எள்ளி நகையாடும்
ஐரோப்பியக் குடியின் மிதப்பில்
என் தேசத்து வளமும் தாளமிட
கொல்லைப் புறத்து
கேடியரசியலின் கூசாத் தூக்கிகளும்
கேடான யுத்தப் பேரரசர்களும் பேசும் தீர்வுகளோ
நடாத்தும் யுத்தங்களோ
"அகதி"க்கு ஆட்சேர்க்கும்

அப்புவிடம்
குடியிருந்தது சொந்த முகம்
பேரனிடம்
வேருமில்லை விழுதுமில்லை
இதில் முகமிருக்கும் வேளை ஏது?


அகதியாய் ஓடி
அகதியாய் வாழ்ந்து
ஐரோப்பியத் தெருக்களில் சருகாய்ப் பறந்து
அள்ளப்படும் குப்பைகளோடு
முகமிழந்த இந்த முண்டமும்
ஒரு நாள் அள்ளப்படும்




27.09.2007

தடமொன்று சிக்கியது

மீண்டு வரும் பொழுதொன்றில்
பொய் முகம் முறித்தெறியும்
தெருவொன்று துன்பத்துள்
திருப்பத்தில் எகிறும் எலும்புத் துண்டம்

மொய்த்திருக்கும் இலையான்களின்
குருதி நினைந்த கால்களில்
இந்த மிருகத்தின் தடமொன்று சிக்கியது
எரிந்த சாம்பலையும் அவை விட்டபாடில்லை!

கனத்த மிதப்பொன்றில்
கடுகுகளுக்குக் கால் முளைத்து
வளத்தின்மீதான பெரு விருப்பாய்
வன் பொழுதொன்றில் வர்ணமிடும் பொழிவுகள்
அமெரிக்க மாமாக்களின் நா நுனியில்.

உடைபடும் நாணம்

உறவுறுந் தருணம்...

நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள்
சாளரத்தின் ஓரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள்
காலத்துள் அமிழ்ந்த என் உணர்வுக் குருவிக்கு
சமாதி கட்டிப் பார்க்கும் தோழி ஒருத்தி

மரத்தில் உதிரக் காத்திருக்கும் ஆப்பிள்
மௌனித்திருக்கும் என் வதைகளிலொன்று
பறித்தெடுத்த ஆப்பிளில் இறங்கும்
தேவதைக் கனவு கூசும் பற்களில்
குதறும் விற்றமீன்களுக்கு பொழுதொரு வதையாய்

அனைத்து நித்தியங்களும் அமிழ்ந்தழிய
அறத்தின் ஓரத்தில் காமக் கலப்பை தாக்கக்
கண்ணீர் வதையுள் கடுப்படக்கும்
காலத்துள் உதிரும் எதிர்ப் பால் வினையும்

ஒரு வழிப் பாதை இருவருக்கும்
காலத்துள் அறபடக் காத்திருக்கும் ஜீவன்
கைப் பிடி மண்ணுள் இவ்வளவு கண்ணீர் பொழிவா?
இதயம் அதிரும் உயிரது கூத்துள்

குறுகும் பொழுதுகளில் உடைபடும் நாணம்
குவியும் கருப்புக்கு ஒதுங்கும் உறவு
மெய்தர மறுக்கும் கருமை மனது
ஈரஅலை இதயத்திலிருக்க உறங்கும் தாம்பாத்யம்

தொப்புள் கொடியுறவொன்றிணைக்கும் குடும்பம்
குட்டையைக் குழப்பும் கோதாரி மனது
கும்மாளமிடும் காழ்ப்புணர்வு
வதைக்கும் நினைவுகள்
வடுவாய் விரியும் நாவினாற் சுட்ட புண்

எனினும்,
நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள்
சாளரத்தின் ஒரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள்
மௌனிக்க முனையும் பாலுறுப்பு

ஓலமிடும் ஒலியின் அதிர்வில்
சுவரில் உரசும் இதழ்கள்
இதயத்தின் அடியில் உலர்ந்த சாம்பல்
நாவிற்கடியுள் நலியும் காதல்

வீசியடிக்கும் குளிர்ந்த காற்றுள்
இதழாள் சுவையும்
நெருங்கி வரும் இரவில்
உடலின் மிடுக்கும் உருவந்தர மறுக்கும்
வலியை மென்று மனது ஒடுங்கும்

துயரத்தின் கொடுவாள்
அறுத்தெறியும் காலத்தின் மரிப்பில்
தொலைவதென்னவோ நீயும் நானுமே
தவித்தென்ன தண்ணியடித்தென்ன
தாழ்வது நமது நலமே!

நேரத்தோடு அறியப்படாத
எனது நிறமாற்றம்
தொலைவதில் வியப்பு என்ன?


களமாடும் பிஞ்சு விழியுள்

விதியே,விதியே
விடுதலை செய்வாய் இவரை?

கைமுனுக்களும்
எல்லாளன்களும்
கதை பேசும்
ஒரு
உலாக் காலத்துக்காய்
இறக்கையிழந்தது தாய்க் கனவு

எல்லாளர்களினதும்
கைமுனுக்களினதும்
பழைய உறவுக்காய்
உதிர்ந்தொதுங்கும்
சில விடிவெள்ளிகள்

எதற்குமே
வீரம்,தீரம்
வியூகம் வகுத்து உருவேற்ற
"உலகத் தமிழர்களே"வணக்கம்!!

ஒரு தெரு விளக்கு
சோம்பல் முறிக்கும் இருண்ட பொழுதில்
கபாலம் பிளந்து,
கால் முறிந்து
கண்ணீரோடு களமாடியது ஈழம்


அரசர்கள்
அவிழ்த்துவிட்ட யுத்தவெளியில்
அரிசிக்கு அலையும் தாயொருத்தி!
அநுராதபுரக் காட்டுக்குள்
கண்ணீரோடு மனதை அனுப்பி
பெற்ற வயிறு பொங்க
பெயர் குறித்த படத்திற்குப் பூவெறிந்தபடி
சில கிழங்கள்...

துட்டக்கைமுனுவுக்கு
எல்லாளன் ஓலை எழுதும்
புதிய வரவில்
போனதென்னவோ
எவளோ வீன்றவுயிர்களெனச் சில முணுமுணுப்பு
தேசியத்துச் சூடடிப்பில்
எருமைக்கு இரக்கமில்லாச் சில கணங்கள்
எழுதிச் சொல்வார்
அந்த,இந்த விமானத்தில்
இருபது சரியாம்
தலைவரா-கொக்கா?


எவனுக்குத் தெரியும்
மரணத்தின் வலி?

கேட்டுப்பார்!

நோட்டுக் கணக்காய்
நீட்டிவைப்பார் வரலாறு
அங்கே விடுதலை
இங்கே விடுதலை உயிரிழந்தே
உருவுற்றதென்பார்

பிறகென்ன?

போய்ப் பார்,
களமாடும் பிஞ்சு விழியுள்
வாழ்வின் பிறப்புமிறப்பும் பிணையுந் தருணம்
இன்னொரு தளத்தில்
வெற்றிக் களிப்பும் சுவைப்பும்!
விதியே,விதியே
விடுதலை செய்வாய் இவரை???

ஊழீ முதல்வனும்

எச்சங்கள்
அழித்தவொரு படுகையில்


திகழ் ஒளி நிலத்தில் சிந்த
விளங்கு பயிர் வான் நோக்கும்
எனினும்
எனக்கென்றொரு விடிவு இருண்டு கடந்தது
குப்பைக்குள் கிடக்கும் எனது எலும்புத்துண்டு
கோவணம் கட்டுகிறது வினை முடிப்பதற்கு
இது போதாத காலம்


மெலிய படுகையொன்றில்
தூங்குகிறது என் பாவம்!
பயிர் முளைத்தறியாத உவர் மண்ணாய்
மனங்கள் சில மனிதரின் பெயரில்
பெருங் கூச்சலுக்குள் கீறப்படும் கோடுகள்
அவை வளைந்தும் குறுகியும் குற்றப் பத்திரிகை தாங்கி



பொழுது புலரும்
போகும் நாளிகையும் மீண்டு வரும்
பொய் அறியாக் காலமும் கட்டுண்ட மனிதருக்காய் இரங்கும்
ஆனால்
மனிதன் நானோ மண்ணுக்குள் போய்விடினும்
மரணம் அறியாச் சிறு துகளாய்
மரணப் படுக்கையில் முள்ளாய்க் குற்றும் இருப்பு
எனது எலும்புத் துண்டம் எதிரில் தோன்ற


தோரணங்கள் துன்பித்துத் தொங்க
தூவும் மலர்ச் சொரிவும்
அர்ச்சனைக்கான அவசரத்துள்
ஆருக்கோ அபிஷேகம் அதற்கு அவஸ்த்தை


எச்சங்கள் அழித்தவொரு படுகையில்
நாளைய நிலை மறுப்பை நிச்சயிக்கச் சில முனைப்புகள்
எடுத்த எடுப்பில் சூரியனுக்குத் தூக்கு
ஊர் பெரியவரின் உதட்டில் உதிர்ந்தது உண்மை


கருத்தரித்த எனது இருப்பில்
பச்சை குத்திய முகங்களுக்கு எவருரிமை கொள்வார்?
வயற் பரப்பில் வட்டமிட்ட காகங்கள்
புழுக்களோடு மல்லுக் கட்டுகிறது
மண்பதத்தைச் செய்தவை புழுக்கள்!


தோப்பாக நின்றபோது நான் பெருங்காடாகவும்
தனிமரமாக நின்றபோது தடங்கலாகவும்
தெருவோரத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன
தறித்தெறிவதற்குத் தோதான கோடாரிக்கு
நானே முன்னொரு பொழுதில் காம்பாக இருந்திருக்கிறேன்


ஊழீ முதல்வனும் உயிர் தந்த ஆழீயும் எனக்குள் உறங்க
ஓரத்துக் கிளையில் முறிபடும் காலம்
ஈரத்தை மறைத்த இறங்காப் பொழிவில்
இதயத்தை இழக்கும்!


திகழ் ஒளி
நிலத்தினுள் சிந்தினும்
விளங்கு பயிர் வான் நோக்கினும்
விடியாத சில தேசங்கள்
எவனுக்கோ
முகமொன்று செய்து கடைவிரிக்கச்
சில காலிகள் தெருவெங்கும் ஒட்டுகிறது
களவாடிய எவன் அறி புலனை

ஸ்ரீரங்கன்
18.11.2007

எழுந்தாய்த் தமிழ் தேசம்

எழுக
என எழுந்தாய்த் தமிழ் தேசம்!


நீல மேகமும்
நெடும் பகற் பொழுதும்
இடுமுள் வேலிதாங்க
தெருவெங்கும் இருண்டு கொடுவரி மறுகும்
கால் வலிக்கும் ஜந்திரம் ஓயாது:யுத்தம்!

"போய் வா"என் கோ,பெருந்தகையே!
பார்த்திருப்பதற்குள்ளே விரிதிரைக் கடலொடு
முதிரக் காத்திருக்காது உதிரக் கண்டேன் கனா!
இங்கு ஓடாய் உழைத்தவர் உறக்கம் தொலையும்

மதிலொடு ஒட்டிய ஓணானுக்கும்
ஒரு வயிறுண்டு
ஓரத்தில் கொட்டும்
தூசி மேகம்

எதற்காகவோ இருப்பழியும் காலம்
யானுளம் கலங்கி
யாவதும் அறியேன்
ஓதுவதற்கு ஒப்பாருமில்லை
ஒழிக என் கூதற் காலம்!

நெடும் புனல் நீக்கிய மறைப்பில்
துயிலிழந்த தெருவோரத்துக் கண்மாய்
பெரு நரிக்குக் கொண்டாட்டம்
துள்ளிக் குதிக்கும் மீனுக்கு அழிவு
இளநிலாக் காயும்
இருளாற் கவ்வும் இயக்கமும் அதுவாய்

எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்
எங்கேயும் கெந்தகப் புகையுண்ட குறை முகங்கள்
வல்லூறு வட்டமிட
ஊழ்வினை வந்து உயிர் உண்டு கழிந்தது

பொன் திகழ் மேனியொடு பலர் தோன்றி
செங்கோல் காட்டிச் சொல்லிய கதைகளும் ஆறிய கஞ்சி
இருளிடை புகுந்த ஒளிமுதற் கடவன்
கோன்முறை வெடிபட வருபவர்
அடுபுலி அனையவர்
படுகடன் இது?

16.112007

கிழக்கின் சுய நிர்ணயம்...

கேட்பாரின்றிக் கேணிகள்
விதைப்பாரின்றிக் காடாய் வயற்பரப்புகள்
வாத்தியாரின்றிப் பள்ளிகள்
வாழ்விழந்த ஏசு குருசு மரத்தில் தொங்கியபடி
தமிழ் தனித்தபடி தேசத்துள் விடுதலை தேடி...

எண்ணப்பட்ட தலைகளின் சரிவில்
மாவீரர் தினங்கள் வந்து போகும்
குருதிச் சேறு அப்பிய குழந்தை முகங்கள்
கொல்வதற்கேற்ற கூட்டுப் பிராத்தனை
தனித்த தேசம் சுய நிர்ணயம் தமிழீழம்!

பயங்கரவாதக் கதைப் புனைவில்
காலத்தை ஓட்டும் சிங்களக் கொடும் யுத்தம்
எக் காலத்துக்குமானவொரு தேசக் கதாநாயகர்
இவர்களுள் கைய+ட்டுப் பெற்றவர்களின்
பிரதேசக் கதாகலாட்ஷேபம்

காரியத்து மூளைக்குக் கதைக்க
ஒரு வடபகுதியும்,வன்னியும்
வாழ்விழந்தாகச் சொல்லவொரு கிழக்கும்
பெரும் பசைகள் வலுக்க வந்தது
இலண்டனுக்கும் பாரீசுக்கும்?

ஆரூ கண்டார்?
ஆட்களைக் கடத்தியவர்களுக்கு
நோட்டுக்களைக் கடத்தவா சுணக்கம்?
சும்மா சொல்லக் கூடாது
சுகமாய் இருக்க மக்களின் சோகம்
சொல்லிக் கொள்ளப்"புலிகளின்" அராஜகம்
வடக்கின் மேலாதிக்கம்!!

வண்டு திசை பார்த்துப் பூவொன்றில்
வயலும் வரப்பும் வாழ்வளித்த குறுங் குடில்
கிராமத்துக் குறுவாழ்வில்
குலைந்த சோகம்!

தெருவில் பொதியேந்தி
பொழுது படுவதற்குள் திரும்பும்
உழைத்தோய்ந்த முகங்கள்
சுழற்காற்றில் அள்ளப்பட்டது தெருவும்
தேசங்கொண்ட மனங்களும்

எங்கள் தெருவில் நாண்டுநிற்கும் நாவல்மரம்
எப்போதோ அழிந்தொதுங்கிய
நெட்டூரப்பொழுதின் வரவில்
வாழ்விழந்த மாதாவும் மௌனிக்க

இருப்பழியும் கரும் பொழுதொன்றில்
குருசு மரத்தடியில் சரியும் என்னுடலுக்கு
சாவு வந்ததாய்ச் சொல்வதற்கேனும்
என் கிராமத்தில் மனிதருண்டா?
இது"தமிழீழம்"கோசம் செய்த மோசம்?

நான் கனவுதரித்த கிராமம்
தின்னக் கொடுத்து வைக்காத உறவுகள்
பெருநாள் பொழுதொன்றில்
பெயர்த்தெறியப்பட்ட கிராமத்து இருப்பு


கருமேகம் பொழிய
காதல் வயலும் கதிர் முறிக்க
கால் வயிறு நிறைப்பாள் அன்னை
களித்திருப்போம் கஞ்சியில்
எனினும்,
கைக்கூலியாய் இருந்ததில்லைக்
களவும் செய்ததில்லை!

கோழித் "திருடனும்",
வாழைக் குலைக் "கள்ளனும்"
வாழ்வை விளக்குக் கம்பத்தில் தொலைக்கக்
கொலைஞர்கள் கூடிக் குலாவ
கோவணம் நிறைந்த கோடிகள்!

கொடுமை!
கொல்லைப் புறத்தில்
கன்னக் கோல் கொடும் பொழுதில்
கொலைகளை எண்ணக் கொம்ய+ட்டர்
"கிழக்கின் சுயநிர்ணயம்"
வழங்கும் வங்கிகள் நிறைய...

இப்போதெல்லாம் கிராமம் பட்ணத்தில்
சில்லறை கேட்டுத் தெருவில் தனித்தபடி
குற்றுயிர்கொண்ட குக் கிராமத்துத் திட நெஞ்சு
கூடின்றிக் குலையும்.
வன்னியிலும்
பாரிசிலும் இலண்டனிலும்
குருதிதோய்ந்த வலுக்கரங்கள்
வட்டியில் வயிறு வளர்க்கும்
வாழ்விழந்தது வடக்கும் கிழக்கும்.




24.11.2007

அண்டத்துள் துயிலுங்கள் ஆழ்ந்து!

எல்லாம் கலைந்த பொழுதொன்றில்
நடுத்தெருவில் நிற்கும் ஒரு உணர்வு
அந்தத் தெருவோரம் ஏதோவொரு வருகைக்காகக் எவரெவரோ காத்திருப்பு
கடைசியில் எல்லாஞ் சிதைந்து
சாயம் வெளுத்த துணியாக எனது மனது

நிமிர்ந்து வானத்தைப் பார்கிறேன்
மழைமேகமிழந்த வெளியில் சூரியனின் வருகை தாமதமாக இருக்கிறது
கடுங் காற்று வீசுவதென்று நமது பெரியவர் சொல்வதும்
அந்தக் காற்றைத் தாம் அறிவதென்றும்
தம்மிடம் பெருங் காப்புக் கவசம் இருப்பதென்றும் வார்த்தையில் சொன்னார்

வட்டமிடும் கழுகுகள் அவர் குரலைத் தடுத்தன
அவை கக்கிய ஏதோவொரு பொருளால்
பெரு வெடியின் அதிர்வில் பேரண்டம் தோன்றியதாகவும்
அந்தப் பேரண்டம் இனியும் சுருங்கி வருவதாகவும்
விஞ்ஞானிகள் கூறிக் கொள்கிறார்கள்!

பழைய விலாசத்தில் பத்துப் பேர்கள், தலைகள் இருக்கலாம்
பாய் விரித்துப்படுக்க எண்பது கோடித் தமிழர்கள் எண்ணப்படலாம்
பாட்டு வாத்தியங்கள் இல்லாமல் பல்லவிகள் பாடப்படலாம்
பாருக்குள் நீதி இருப்பதாகச் சொல்வதில்தான் பரிதாபம் தெரிகிறது

புட்டுக் கொண்ட பேரவாப் புலம்பல்கள்
போருக்குள் மாண்ட இதயத்தின் விளிம்பில் இரக்கத்தைத்தான் கூட்டுகிறது!
எத்தனையோ பொழுதுகளில்
வீரத்திலிருந்து வான்முட்டும் கர்ஜனைகள்
வாய்ப் பந்தல் கதையாய் அந்த வானமும் சுருங்கி
தனக்குள் ஒடுங்கும் காலத்தின் எதிர்வு முகத்தில் ஓங்க
கண்ட இடமெல்லாம் தாண்டித் தயங்காத விஞ்ஞானத்திலும்
ஒரு கையை வைத்துச் சுவைத்தபோது
துரும்பைப் பிடித்தபடி ஆற்றிலிறங்கும் பெரியவர்

சர்வதேசத்துக்குள் இன்னும் நீதியைத் தேடி
நிலை பெற்ற பொழுதொன்றில் பொறிக்கிடங்கைக் கண்டபோது
பொறுப்புகள் பொங்கித் தாண்டவமாடுகிறதாம்
பொல்லாத பொழுதுகளும்
பொய்மைப் பேச்சுகளும்
வட்டத்தில் நிலை குத்தி
கொட்டத்தில் காட்டிய பேரெழிச்சித் தாண்டவமாய்த் தாண்ட
புதுவுலகச் சாம்பிராச்சியத்துள் நீட்டியுறங்குதாம் சமாதானப் புறா!

இருப்பிடமிழந்த தெருவோரத்து நாயாகிய எனது முகத்தில் சலிப்பு
துக்கம் தொண்டையை அடைக்க
தூக்கத்தில் கனவுதரித்தாவது அந்தச் சுகத்தைத் தராதோவென்றொரு நப்பாசை
நாமிருக்கும் கோலத்தில் கூட்டிக் கழித்து
ஊதிப் பெருக்கி மடக்கி வகுப்பதைத் தவிர வேறென்ன செய்ய?

அண்டத்துள் துயிலுங்கள் ஆழ்ந்து
துன்பத்தில் நாமிருந்து
தூங்கித் தவிக்கும் பொழுதுகளிலாவது உங்கள்
புதிய வரவில்
பூத்துக் குலங்கும் தேசத்து விடியல்
எட்டுவதற்காகவேனும் இப்போது ஓய்ந்தெழுக!


27.11.2007

ஆருக்காய் அழிந்தீர்?

தேகம் நோகிறது
திரண்டவென்னுறுதி குலைகிறது
உயிரே,உறவே,என் தெவிட்டாத தமிழே!
இந்தத் தேகம் ஆடுதே,அதிருதே
ஆருக்காய் அழிந்தீர்?


போருடல் யார்த்த புது மொழியே
துன்பப் பெருவெளியில் தோற்காத உயிரே
தோள் முறியா என் தேசமே,
தூணே,துயரறியாத் துணிவே!


நான் தோற்கிறேன்
தொலைவில் சென்றவரே
தோன்றீரோ மீள
என் தேசக் கருப்பையில்?


என்னிருப்பே,
ஏழ்மைதாங்கிய திடமே
தீனுக்காய் உயிர்த்திருக்கும் எனக்குள்
தீயாய் சுடும் தீபங்களே!



விழுப் புண்காவிச் சோர்ந்த உடலுரியச்
சொரியும் பூவில் உடல் மறைத்துங்களை
தோள் கூடிக் காவத் தெருவில் நிற்க
புதைத்தனரோ புத்தர்கள் புதை சேற்றில்?


பொல்லாத பேயரசு
பெயருக்கும் மனிதமற்ற
மடை நிலமாய் மாறிய இலங்கை
கடை நிலையாய்க் கண்ணீரற்ற மண்


புலம்பெயர்ந்த மனங்களின் மகிழ்ச்சி
விலையுயர்ந்த விமானத்தின் அழிவுக்கா?
என் விலை மதிப்பற்ற வீரத் தேச பக்தர்களே
உங்கள் மரிப்பில் மகிழ்வு தொலைய
மார்பெல்லாம் வலியதிகம்
விழிகொட்டும்,வாய் புசத்தும்


என் மகனே,மகளே!
எதற்காக இந்த வேள்வி?
மனம் முடங்கிய எமக்காக
மெல்ல நாமிட்ட பிச்சைக்காய்?


வேண்டாம்!
இத்தகைய வேதனையில்
வெற்றியொன்று வேண்டாம்!!
வீரர்களே விலங்ககற்ற
வேளையொன்று கூடும்
வேல்காவித் தோள் சேர
நூல் காவும் உங்களுறவும்!


தேசம் தொலைத்து
நேசம் அழித்து
தொலை தூரம் சென்று
சருகாய்ச் சாகும் என் உயிருள்
அதிர்வாய்,அக்கினியாய்
உதிர்ந்த உங்களுடலம்!


மெய்யே,மேன்மையே
மிகப் பெரும் வலுவே-என்
விருட்சமே,விழுதே-வீரமே!
துயரத்துள் என் மனம் பாரீர்!


கார்த்திகைக் கரும்பே
கண்ணீரின் பெருமிதமே
காலத்தால் அழியாக் காவியங்களே
காதலித்த மண்ணுக்காய்
வீழ்ந்தீரோ வீர முத்தத்துடன்!


தீராதா சோகத்தில்
திக்கற்ற இந்த இழி மனிதன்
தானாடாதபோதும்
தன் தசையாடக் கவி பாடித் தமிழ் நோக
உணர்விட்ட பாதையொன்றில் தனி மரமாய் வான் நோக்கி


வாறீரோ என் வசைகளுக்குள்
ஒரு வாழ்த்துக் கேட்க?
வதங்குகிறேன்,
வாயெடுத்து ஓவென்ற ஓலத்தோடு
சளி சிந்தும் நாசித் துடைப்பிலும்
இந்தக் கிழட்டு விரல்கள்
தமிழழுத்தத் தரணம்வைத்த என் வாரீசுகளே
வாருங்கள் தேசத்து விடியலுக்குள்!

வர்க்க நிலைக்குளென்னுணர்வை வைத்து வதைக்காதீர்
தேசியத்தைச் சொல்லியும்
என்னைத் தாழ்த்தாதீர்!
இதுவென் சுயமாக்கப்பட்ட வலி.
சொன்னாலும் புரியாத தொப்புளுறவு.


தேசத்துக் குழந்தைகளின் உதிர்வோடு
அரசியற் சடுகுடுவா,
சாணாக்கியாமா?-வேண்டாம்!


விடியலுக்கான வீரப்போரொன்றைப்
பொழுதோடு போற்றிக்
களமாடும் நிலையொன்றில்
புரட்சிக் கீதமொன்று ஓலத்தை மறைக்க
சீலத்தில் தேசமகள் திளைக்கத் தோன்றுக மீள!


உங்கள் புதுவரவுக்காய்
உழைப்பவர் மகிழ்வார்
உயிரினுள் வைத்துத் துதிப்பார்
தோன்றுக எம்தோள் சேர்ந்து
தேசத்தைக் காக்க


அதுவரையும்
சென்றுவாருங்கள் என் செல்வங்களே!
சோகச் சுமையாய்
துயிலுரிந்த உங்கள் உருவங்கள்
நெஞ்சில் கீறிய வலி ஆறுவதற்குள்
வாருங்கள் புரட்சிக் கீதம் இசைத்து!




24.10.2007
இரவு மணி:22.16

ஒன்றுபட்டுக் கிடக்கிறது ஊழ்

குருட்டு விழிகள்

நம்பிக்கை நலிந்த
குருட்டு விழிகள் பாதைகளைக் காட்டுகின்றன
குழறுபடிகளின் வருகைக்குப் பின்
மனிதர்களின் மண்டையோடுகள்
மரணத்துக்கு முன்னைய காலங்களுக்குள் சிதறிக்கொண்டன

குருதியுள் முளைத்த ஈக்களோ
வாழ்ந்து பார்த்து
நித்தியம் குறித்துத் தும்மிக்கொண்டன!


மெல்லிய காற்றுள்
உந்தப்படும் தூசியின் இருப்பைச்
சுட்டெரித்த காலம் கொடியதே என்று நீ புலம்புகிறாய்

எதிர்காலமோ
அன்றி நிகழ்காலமோ
கடந்தகாலமோ
இதுவரை எனக்குள்ளோ
வெளியுள்ளோ கிடையாது

மீண்டுவிட்ட வினாவுக்குள்
கருத்தரித்த நித்தியம்
ஒடுங்கி விரியும் உயிரின் இருப்போ
காலத்தைக் கிழித்துக்கடாசியது எனக்குள்

மெல்ல உதிரக் காத்துக்கிடக்கும்
நரை அரித்த விதையோ
முளைப்பதற்குள் மரணித்தாக வேண்டும்
ஆசையின் இருட்டில்
ஒன்றுபட்டுக் கிடக்கிறது ஊழ்

பிரித்தெறி
தூரத்துக்குத் துரத்திவிடு
எட்டப் போவதற்குள்
எதற்குள்ளோ பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு
மண்டையோடுகளுக்குள் சிறைப்படுவதற்கு விருப்பற்றவை



31.10.2008

காலம்.

காலம்.



எரித்தலில் விரிந்த கொடும் யுகத்தோடு
பங்கு பிரித்த பகற் பொழுதொன்றில்
பிசாசுக்குப் பிரித்துவிட்ட உடலம்
பொய் உரைத்துத் துப்பிய எச்சில்


பெய்த மழையில் பேயின் எச்சம் போனதென்ற
பிரமை கொள் பீலி சூனியம் வைத்தபடி
நெற்றியில் தேசிக்காய் நறுக்க
குருதிகொட்டிய பற்கள் அது பேயெனப் பகல


மென்று தொலைத்த தசைகளின்
மொச்சை மூக்கின் வழி
வாழ்வுக்கொரு குருதிக் கதை விளம்ப
மண்கொள் மூளை வரம்பிட்ட கணமோ


மேகத்துள் மெல்ல விரியும் இருப்பிழந்த
துகளுக்குக் கால்கள் மண்டை வழி முளைத்தபடி
முதுகைக் குப்புறப் படுத்தபடி
சொறிவதற்கு நாட்குறித்த கனவில்



தெருவோரத்து நாய்களில் ஒன்று
திடங்கொண்டு தேடிய எதிர்ப்பால்
மல்லுக்கட்டிய கணத்தை சுருந்த சிதளொடு
மெல்ல முகர்ந்த கணத்தை மோகித்து



என்னைக் காவு கொள் கனவொடு
வரம்பின்றி மோகித்து மனமொடு மிரண்டது
மீள் வருகை ஒன்றில் மோதிய
உடலை தூக்கி நகர்ந்தது காலம்



19.09.08

செங்கோல் வென்று செழுநீர்ப் பருகி

சின்ன மாஸ்டரு
கிழக்குப் போடரூ!


அடையாளங்களைக் களைதல்
ஆத்தையைப் புணர்ந்து
அப்பனைத் தொலைத்த அடுத்த கணமே
அடுக்களைக்குள் நெரித்த விறகு
அவிப்பதற்குத் தயார் சிறாரிதயம்
சிரித்தபடியே சொல்லு:கிழக்குக்கு ஜனநாயகம்!


முந்திய வினைப் பயன்மிக்க
துருவக் கரடியெனும் சின்ன மகுடி
தெருவில் சாய்ந்து சூரியக் கதிருள் நனைந்தேகியது
மருண்ட நியாயத்துள்"அடையாளங்களை"களைந்து
அல் குல் மேய்ந்தே அரசிலை தடவ!

மப்படித் திருட்டில்
"அடையாளம்"அரிதென்றெனினுங் கவட்டுக்குள் அரிப்படங்கா
பாடங்கள்"ஈழத்துக்கு"தீர்வாய்...கிழக்கு ஜனநாயகமாய்...
செமைக் காய்களின்
சொல்லுக்குப் பின்னும் செழித்த கனவுகள்
செங்கோல் வென்று செழுநீர்ப் பருகி
சொருகுதல் தமிழால் புனைந்து

பொருளக் கண்டேன்
போரென அரவக் கண்டேன்
பொய்யே உன் சாவைக் காணேன்
பொல்லா வினையே மனிதரைக் கொல்லா
அழிவுண்டோ?

சிரங்குச் சொறியே
ஈழப் பெயரில் தெரிவென்ன
திண்ணையில் போட்டு மடந்தைகள் புணர
திரண்ட புனைவில் "தெரிதா"சுத்தம்?

குதிருக்குள்ள"அப்பன்"இல்லை
அருள்கொடை செம்மல்
பாரீசின் குப்பைக் கோட்டத்துள்
"குசினியர்"கோவிந்தா-கோவிந்தா!
பிள்ளையானுக்குப் பேரீச்சம் பழமும்
கருணா அம்மானுக்குத் தெளி தேனுங் காட்டப்பட
"குசினியர்"கோடிக் கனவின் தெரிவில் கிழக்குப் பல்டி அன்ட் ஆலோசகர்!!

"அடையாளந்"தெரியாத புலம்(ன்) பெயர்ந்த
புண்ணாக்குத்"தெரிவுகள்"கிழக்குக்கு ஆலோசகர்கள்
அடிக்கும் மொச்சையில் குருதி வெடில் மூக்கில் நுழைய
அள்ளுங்கோ அள்ளுங்கோ
அவனை-அவளைக் கடைந்து
அழிவதென்னவோ"உங்கள்"ஆத்தைகள் பெத்ததா-பின்ன?

கத்தரான ஆண்டவரே

கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர்

ஏசுவே உன் பிறப்பையும்
இன்னுமொருமுறை கொண்டாடியாச்சு
இருந்தும்
கொடு வாழ்வு நமக்குப்
போனதாகத் தெரியாதிருக்கும்
இந்த நடுநிசிப் பொழுதில்
உம்மைச் சிலுவையில் அறைந்த அதே கரங்கள்
எம்மையும் சிலுவையில் அறைய
எவரும் விழி திறவார்-நீயுந்தான்!

நீ கொடுத்து வைத்தவன்
ஈராயிரமாண்டுகளாய் உன் இறப்புப் பிறப்புப் பேசப்படுகிறது
எங்கள் அழிவும் உன்னைப் போன்றதே
எனினும்
எவருக்கும் உணர்வு முளைக்கவில்லை
எல்லோரும் ஏறி மிதித்க
எங்கள் தேசம் எருசலேம் ஆகிறது

முசுக்கொட்டைச் செடிகளின் நுனியிலே
செல்லும் இரைச்சலைக் கேட்கும் போதே
சீக்கிரமாய் எழுந்து போகவும்
கர்த்தர் எமக்கு முன்பாக
எமது எதிரியை முறியடிக்கப் புறப்பட்டதாகவும் சொன்னாய்

எமக்குள் நடப்பதோ வேறு!
பற்றைக்குள் மறைந்தவர் மறைந்தவரே கர்த்தரே
படும் துன்பம் அப்பாவிகளுக்கே
நீயோ வானத்தில் மௌனித்தபடி
கர்த்தரின் கணகணப்பில்

நானோ அன்னையத் தொலைத்தவன்
சுற்றஞ் சுகம் தொலைத்தவன்
என் பரலோகத்தில் இருக்கும் பிதாவே,
என் தேசத்தின் பிதாவுக்கு
தேவையான ஆட்பலத்தையும்
பொருட்பலத்தையும் நாம் இட்டும்
தேசம் விடியுந்தரணம் எங்கோ தொலைந்து
தறிகெட்டலைகிறது!

எமக்காக நீயேன் முன் சென்று
எதிரிகளை நிர்மூலமாக்க முடியாது?
பைபிளிலோ
குரானிலோ அல்லது கீதையிலோ
கிடப்பதெல்லாம் யுத்தம் பற்றியதுதானே?

எல்லா மனிதரையும்
அன்பால் அணைக்க நாங்கள் புத்தரில்லையே?
நீயும் அப்படியே
பிறகேன் தயக்கம் பிதாவே?

மெல்லத் துரத்தும் எல்லை
மறுபேச்சுக்கே இடமில்லாதபடி
உசுப்பியெடுக்கும் ஊழிக் காலம்
உருவமிழந்த சில நட்பு வெளிகள்
நாலுந் தொலைந்து முட்டுச் சந்தியில் நாம்!

முகமிழந்த காலங்களைக்
கட்டையில் போட்டெரித்துவிடத் துடிக்கும் உணர்வு
மூச்சு முட்டும் நாயோட்டம்
எப்போதும் நடுத் தெருவில் நின்றபடி குரைப்பதும்
இல்லையேல் பிராணனைப் பிடுங்கும் உழைச்சல்

கோலமிட்ட முற்றும்
கொடு நிலவு முறித்த இரவு
கடும் முகில் இழப்பில் கரைந்த வெள்ளம்
காலங்கள் தொலையக் காத்திருந்த
திருவெம்பாவை கடந்த பொங்கல்

எல்லாம் தொலைய
தோணீயேறித் தொலைந்தோம் அகதியாகி
காணாத மனிதரைக் கண்டு
கட்டிய வழி உறவென்றெண்ணி
காணிக்கைகேட்டு
கட்டிய புடவை மாற்றெடுத்தோம்

எச்சில் இலையாய்
தேசம் தொலைத்த உடல்கள் கொண்டு
தெருக்களில் எடுத்த பிச்சை
குத்தியது கள்ளத் தோணியென்று!

நட இப்படி
கிட அப்படி
எடு இப்படி
எல்லா ஏவல்களும்
முகத்தில் எழுதும் இரவல் நாடென

பாட்டன் நாட்டிய மாந்தோப்பும்
பாட்டி வளர்த்த தென்னந்தோப்பும்
பனங்கூடலும் செல்லழித்துச் சிதைத்தது
சின்ன விரல்களும் கூடச் சிதைந்து
குருதியில் தாழ்ந்து அமுங்கியது

இத்தனைக்கும் பிறகு
ஏய்ப்பதற்கொரு யுத்த நிறத்தம்,
தீர்வுப் பொதி,
இந்தியா தீர்க்கும் சண்டித்தனம்!

கோடாலிக் காம்பாகக்
குடிகளைக் கெடுத்த இயக்க வாதம்
கோதாரி மாபியாக் கூட்டம்
கோத்தயைக் கூட்டிக் கொடுத்துக்
கூத்தடிக்கும் ஒட்டுக் குழுக்கள்
பிள்ளையான் கருணா பு....டை ஆண்டிகள்

உலகை ஏமாத்தும் தேசியத் தலை
ஊரைச் சுத்தும் அவரது உதவாக்கரைகள்
தேசத்தைச் சொல்லி
சேர்த்த மூட்டைகள் பிரித்து
வானொலி,தொலைக்காட்சி நிறுவல்கள்

பணத்தை இலக்கு வைத்து
பாடைகள் காவும் ஒரு கூட்டம்
பல்லை இளித்துக் குதறம் இன்னொரு வம்புப் படை
வாய் கிழியும் வரம்பிட்ட வெருட்டல்கள்
தேசத்தின் பெயரால்
தேசியத் தலைவரின் பெயரால்

தேசமே தொலைந்த பொழுதில்
தோணீயேறிய அந்தக் கணத்தில் தொலைந்தது அனைத்தும்
துப்பிக்கொண்ட வெற்றிலைச் சாற்றைப் போல்

இதற்குள் பணம் மட்டும்
தேசத்துக்கும் எமக்கும்
தொப்புள் கொடி கட்டி
தோளில் கிடப்பதைப் பறிக்கும்
பொழுதுகள் என்னவோ தமிழீழம் சொல்லும்!

முகந்தொலைந்த
அகதியக் கோலமும்
அடிமை வாழ்வும் எமக்கிட்ட
புதிய தீர்வாய்...

புதிய புதிய வருஷங்கள் வரும்
புதிய புதிய நத்தார் பண்டிகைள் வரும் ஏசுவே
அதுபோல்
புதிய புதிய தலைமைகள் தோன்றும்
தலைவர்கள் பேசுவார்கள்
போர்ப் பிரகடனஞ் செய்வார்கள்
தீர்வும் சொல்வார்கள்
எனினும்,
தீராது நமது அடிமை வாழ்வு

துரத்தும் ஒரு கூட்டம்
மடியேந்திக் காசு வேண்டிக்
கார் வேண்டும்
வீடு வேண்டும்
கேட்டால் உழைப்பின் விளைவு!

உழைப்பவர் நாங்கள்
உப்புக்கு அலைவது தெரிந்த கதை
இத்தனைக்கும் ஏமாற நாமிருப்போம்
தேசத்தின் பெயராலும்
இன்னும் எதன் பெயராலும்

ஏசுவே உன் பிறப்பையும்
இன்னுமொருமுறை கொண்டாடியாச்சு
கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர்
அதைச் சொன்னீர்,
உம்முடைய ஆசீர்வாதத்தினாலே
உமது அடியானின் வீடு(நாடு)
ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னீர்!

எந்த அடியானின் தேசம் அப்பனே?
கத்தரான ஆண்டவரே
தேவரீர்
நடுத்தெருவில் அகதியாக அலையும்
என் கூட்டத்தையும் கடைந்தேற்றக் கை கொடுக்கத்
துணியாயோ?

எமக்காக இன்னொரு முறை
சிலுவை சுமந்து முள் முடிதாங்கிச்
சிலுவையில் மரிக்காயோ ஏசுவே?



25.12.2007

மந்தைகளுக்குச் சொல்லிப் புரியாது

குலைக்காதே டோண்டு!

குடுமியற்ற டோண்டு-நீ
கும்மாளமிட்டு கூட்டிப் பெருக்கும்
கம்ய+னிசம் ஒரு ஓரத்தில்
இருந்தே தொலையட்டும்

இப்படி வா,
இன்னும் கொஞ்சம் நெருங்கி
அதென்ன உனக்குமட்டுமே
எந்தப் பன்னாடைக்குமில்லா உயர் சாதித்தடிப்பு?

உனக்குத் தெரியும்-நீ
உண்டு கொழுக்கும் உணவுக்கு
உழைப்பவனல்ல நீ என்பது
இருந்த இடத்தில் உண்டி வளர்க்க
கிட்லரைக்கூட வரவேற்றவர்கள் உன் பரம்பரை

உனக்காகச் சொல்வதற்கு
ஒரு இந்தியா போதும்
உலக நடப்புப் பெரியதுமில்லை-நீ
கும்மியடிக்கும் கம்யூனிசம் குளறபடியுமில்லை!

கூற்றுக்குக் கூற்று மனிதரைத் தாழ்த்தும் கபோதியே!
பார்ப்பானின் படிகளில் நசியும் ஈக்களைவிட
மானுடர் அழிவு உனக்கு உறைக்கவில்லையா?
சே...பொல்லாதவனே!
ஜாதிக்குள் ஜாதி வைத்தவன் வாரீசே!!

பொய்யுரைப்பதற்காகவே பொறந்தாயா?
இல்லைப் பொல்லாப்புச் சொல்வதற்காகப்
புடியுருண்டைச் சோற்றை மெல்வதற்குப்
பொறந்தாயா?

எந்தத் தரணத்திலும் நீ
எதிரியின் ரூபத்துள்
எடுத்து வைக்கும் பொல்லாத வார்த்தைகளோ
வாழ்வாருக்கு வாய்க்கரிசி

என்ன மனிதனப்பா நீ?
இந்தியாவின் இருட்டுப் பக்கத்துள்-உன்
வெந்துலர்ந்த இதயத்தைத் தேடிப் பார்க்கிறேன் அங்கேயுமில்லை
ஓ...! உனக்கு அது இருப்பதற்கான அறி குறியே இல்லை

நேற்றைய பொழுதொன்றில்-நீ
நெருப்பிட்டெரித்த நிணத்துக்கு நந்தன் என்றும்
சதிவலை பின்னிப் பிணைத்தெரித்த உயிருக்கு
உடன் கட்டை என்றும் பின்னியவன் நீ!

உனக்கா புரியாது கம்யூனிசத்தை கடைந்தெடுக்க?
கட்டியம் கூறு!
கவனமாகச் செல்லரித்துச் சென்று
கடவுளின் பெயரால் வயிறு வளர்ப்பதற்கு!!

அனல் வாதமிட்டும்
புனல் வாதமிட்டும்
ஒரு இனத்தின் வேரையே செல்லரித்தவன் பார்ப்பான்
அவன் விந்தின் வழியல்லவா நீ?

காலங் கடந்திடுவதற்குள்
கோவணம் கழற்றிக் கடமையைச் செய்
நாளை நலிந்தவருக்குச் சாஸ்த்திரமுரைக்க-உன்
பரம்பரை இருந்தாகவேண்டும்

நடுநிசிப் பொழுதொன்றில்
வேட்டையாடப்படும் மிருகங்களில் ஒன்று
உன் சாயலாகவும் இருக்கலாம்
எதற்கும் முந்திக்கொள் ராகவரே

கடுகளவும் பின் வாங்காதே!
கண்ணீரையாவது கடைவிரித்து
காவித் திரியும் குப்பைகளைக் காசாக்கத் தெரிந்தவன் நீ
கம்ய+னிசம் பற்றிப் புலம்புவது புரியத் தக்கதே புண்ணாக்கு!!!

தாராவியிலும் மும்பாயிலும்-இன்னும்
முன்னூறு இந்தியப் பெரு நகரிலும்
பின்னைய பொழுதுகளில் கண்ணயரும்
இளம் இந்தியர்கள்
காரேறும் பொழுதுகளில் முண்டமாகும் தெருவோரம்
இதுவும் கம்ய+னிசக் கோளாறாய் வாந்தியெடு

வற்றாத வடுவாய் நால் வர்ணமிருக்க
முப்பது கோடி இந்தியர்கள் இழி ஜாதியென்பாய்
இதுவும் கம்யூசக் கோளாறுதான்
இந்தியாவுக்கு இந்து அதர்மம் இப்படித்தான் சொல்லும்!

இந்த இலட்சணத்தில் நீயோ
கவடு கிழிப்பதில் காலத்தை ஓட்டியபடி
கம்ய+னிசக் கோளாறுப் படிகம் சொல்ல
சீனத்தையும் மாவோவையும் கேட்டு
மடிப் பிச்சை எடுத்து...

மந்தைகளுக்குச் சொல்லிப் புரியாது
மொத்துவதற்கும் மனசு வருவதில்லை எமக்கு!
அண்டைகளுக்கு அடைகாப்பதில் உனக்குத்தான் எவ்வளவு சுகம்
அப்பப்பா அரவணைத்துன்னைக் கக்கத்தில் வைப்பார்-நீ
கம்ய+னிசக் கோளாறைக் கோலமிட்டுச் சொல்
கோழி கூவுவதற்குள் கோடீஸ்வரனாவாய்!

கொப்பராணை நீ
கொல்லுவதற்காகவே
தொப்புள் கொடியறுத்துத் திரண்டெழுந்து
திண்ணையிற் குந்தியவன்

குலைக்காதே டோண்டு!
தெரு நாய்கள் உன்னைப் பதம் பார்த்தாலும்
நாய்களுக்கே நஞ்சேறும்
பாவம் நன்றியுள்ள நாய்கள்!!!

09.09.2007

வீணவன்

வீணவன் :புலித் தலைவன்!


அல்லும் பகலும் ஆர்த்தெழும் உணர்வு மேவ
முன்னும் பின்னும் பேரி னப்-சிற்றின,ஈனப் படைகள் சூழ
கையடைப் பொருளாய்ப் போனவீ ழம்
குருதியால் நிலங் கழுவி கண்ணீர் மல்கும்.


தாய்மைப் பெருந் தாலாட்டு குரல்வளை தெறித்தொ துங்கும்
கருவில் குண்டடி, காலில் மிதிவெடி-
காணுமி டமெல்லாம் மனிதத் துண்டம்!
சொன்னால் செய்வதற் கொரு சாவுக் கூட்டம்,
சகதியாய் குருதிச் சேற்றில் மக்கள் கூட்டம்!!


இதைப் பார்கொள்ளாது,பரதவிக்கும்.
ஈழவர் நள்ளார்,தினம் நலிவர்.
ஊனின்று றங்கும் பச்சிளம் பாலகர்கள்,
பாதைகளி ன்றிக் காடுடை யானார்.


போர் வினை செய்யப் பெற்ற நாட்டில்
கண்கொடு ஜனநாயகம் பிறப்பின் கடை.
விழிவிற்று கோலாச்சும் வீணவன் தன் புகழ்
பாடிடும் துன்னலர் கூட்டமாய்ச் சில தமிழ்ப் பாலகர்



இதுள் எம்மவர் சிலருக்கு பாரத-அமெரிக்க நலனில்
காதல் முதிரக் கருத்து அழிந்தார் ஆம்!
அன்னார்கள் சுனாமியில் சேர்த்ததையும் சுத்தி,
தீர்வுப் பொதியையும் தின்று, போரைத் தொடர்ந்தாலும்-
நள்ளாதி ந்த ஈழ நானிலம்!!


மொழியிழந்து துப்பாக்கியடைப் பொருளாய்
வாழ்வி ழந்து வனப்பி ழந்து-வரும்
பாதகர் வால் பிடித்து பிழைத்திடவோ போர் வாழ்வு?
புலிகளின் தாகம் இதுதானோ எம் புண்ணிய தேசம்?


தமிழர்கள் பார் அளிப்பார் ஆவதெ ப்போ?
புகல் தமிழர் நாடு உறைவார் ஆவதெ ப்போ??
அன்னை பொங்கிய சோறுண்டு அகம் மலர்ந்து-
துகில் வதெ ப்போ???
எம் அக விளக்கு ஒளியெ ழுப்பி நிமிர்வதெ ப்போ????


29.04.06

பள்ளமும் திட்டியுமாய்...

தவழ்புனல்
குருதிநெடிலகற்றும்!

இரவைத் தின்ற
பகற் பொழுதொன்றில்
தன்னை,
குண்டொடு வெடித்திடத் தேம்பியழுதாள் ஒருத்தி!
அப்பாவித் தமிழிச்சி "ஐயோ அம்மா!"வெனப்
புலம்பிச் சிதறினாள் எவனுக்காகவோ!



பற்றை,நாகதாளி>கள்ளி>
எருக்கலை,ஆமணக்கு,ஈச்சை நிரம்பிய ஈழம்
புகைபடியக் குருதி கொட்டி
விரிந்து,குவிந்து
பலரைச் சிறைப்படுத்திப் பட்டுணியிட்டு
பங்கருள் திணித்தது.


புலிகள்,சிங்கங்கள் கழுகாய்மாறி
அவர்கள் நிணத்தைப் புசித்தன
நாய்கள்
ஒன்றையொன்று கொன்றுண்டு அகம் மகிழ்ந்தன!!



இன்னுஞ் சிலர்
அவர்களிலொத்தவர்களைத் தேடியலைந்து
ஈற்றில் முழு ஈழத்தவர்களையும்
புசிப்பதற்காய் முடிவுகட்டிக் குண்டெறிந்தார்கள்
அதையும் விடிவுக்கானதெனச் சில புத்திசீவிகள்
விண்கட்டிப் பட்டம் ஏற்றினார்கள்


கழுகாய் மாறிய புலிகளில் சிலர்
ஐரோப்பாவரைப் பறந்து
புகலிடத் தமிழரின் புதை குழி தோண்டினர்
ஈழப்போர் நான்கு அவசியமென்றபடி!
எனினும்,
காலக் கொடுவாள்
தன் கோரப் பாச்சலை
அவர்கள் சிரசுகளில் ஓர் நாட்பாய்ச்சும்!!



பள்ளமும் திட்டியுமாய்
சமன்பட மறுக்கும் அராஜகம்
தினமும் ஒரு புதிய அரும்பாய்
மக்களின் எழிச்சியைத் தூண்டும்.
சமாந்தரமாய் முளைவிடும்
புதிய ஜனநாயகம்!


மூச்சிறைக்க இடறி விழும் புலிப் பாசிசம்
உணர்ந்தொதுங்கும் சிங்கம்,
தலை குத்தி மண் கவ்வும் இனவாதம்
காலமிதைக் கவிதையாய் வடிக்கும்.


உருத்தெரியாது அழிந்துவிடும் ஆயுதங்கள்
உப்புக்கு நிகராகா ஈழக் கோசம்!
புதுவாழ்வின் ஆசையின் எச்சத்தில்
மனிதம் முளையெறியக் காத்திருக்கும்,
அந்த நாளைப் படைப்பதற்குத் தோழர்கள் கரங்கள்
செங்கொடி தாங்கும்


அப்போது
தவழ்புனல் குருதி நெடிலிழந்து குதூகலிக்கும்
எங்கள்
குழந்தைகள் அதுள் தப்படிப்பார்!


அவர்கள் பெற்றோர்
எடுப்பார் கலப்பை,
எருதுகளெங்கும் உழைத்துதவும் எங்கள் வாழ்வுக்கு,
காகங்கள் யாவும்
களிப்பாய்ப் பாட
கருங்குழற் பெண்கள் பட்டுத் தரிப்பார்,

பருவப் பயல்கள் அவரிடம் பதுங்க
எங்கள் தேசம் இனிதாய் மலரும்
இனியும் ஒரு வாழ்வு எங்களுக்குண்டென
இளையவர்கூடுவர் இதயம் மலர!

கோவில்கள் எங்கும் குழலும்,
கொட்டும் தவிலும்,சங்கும் ஒலிக்கும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
29.04.06

சிறு புள்ளி.

மயானத்தின் மத்தியிலொரு
சின்னப் புள்ளி
மனித நடமாட்டத்தைச் சொல்வதற்கென
திக்குத் தெரியாத கும்மிருட்டில்
உழலும் பேய்களுக்கான குறிப்பாய் அது இருக்கலாம்

பேய்கள் வலுக்கத் தொடங்கிய
யுத்தகாலத்தில்
எரி பிணத்தின் மார்பில்
வலுக்கரத்தால் பிளந்து இதயம் அகற்ப் பட்டது

இருப்பவர்களுக்கான சூனியப்
பொழுதொன்றைச் செய்து முடிக்கும்
மந்திரக் கரங்களுக்குள் பினைபட்ட இருதயத்துள்
இன்னும் சூடான குருதி


ஓருரி மணிக்குள்ளே
உருவமே தெரியாது
உதிர்ந்துபோன இருள் வெளியில்
மயானம் தனித்து விடப்பட்டது

கருமாரி செய்யும்
கடுமையான இரங்கல் ஒலியில்
காலத்தின் கடிவாளம்
அறுபட்டுக் கிடக்க

மலம் முடுக்கி
விழிவழி வழிய
இதயம் இழந்துபோன எரி பிணம்
ஒரு வழியாகப்
பக்கம் பார்த்துப்
பாய்ந்தும் மயானத்தின் புள்ளியில் புரண்டது


மனித நடமாட்டமென்று
பேய்களுக்குத் தூக்கி வாரும்போது
ஓணான் உருவெடுக்க முனைந்தவொரு
எச்சில் பேய்
எல்லோர் முகங்களையும் குதற
எரி பிணத்தின் மத்தியில்
அந்தச் சிறு புள்ளி சுருங்கியது.



13.01.2007

நுனி நாவுத் தாளலயம்

நான்
தத்வமஸி
அஹம் பிரஹ்மாஸ்மி!!!

என் தேடலுக்கான நேரம்
நீண்ட பொழுதின் மறைவுக்குள்ளேனும்
அந்தத் துளியைக் கண்டாக வேண்டும்
நடுச்சாமப் பொழுதொன்றில்
கிழித்தெறியப்பட்ட துவாரத்துள் குருதி கசியக்
கடுப்படையும் ஒரு சுவாசக் கணம்

எத்தனை அலறல்கள்
எப்படி நிகழ்ந்தோய்ந்திருந்தும்
ஒரு ப+ச்சிக் கனவுள் போட்டெடுத்த
நரம்புத் தடம் புதிதாய்...

நாவுத் துவாரத்து இடுக்களில்
மெல்லச் சிக்கிய உயிரின் முனைப்புகள்
கொன்றுவிட்ட முழுமுதற்கணங்களும்
மௌனித்த திருப்தியில் மடிந்தோய்ந்த சுருதி

முதற்கட்டம்
இடைக்கட்டம்
கடைக்கட்டம்

சந்தர்ப்பவாதக் கிருமிகளின்
பல் முனைத் தாக்குதலுக்கு
இலக்காகிய பந்துக்குள்
உயிர்த்திருக்கும் காற்று
இன்னொரு பொழுதில் இறைக்கை விரிக்கும்

அந்தப் பொழுதுக்கு முன்னான இந்தக் கோலத்துள்
வலிந்தெதிர்க்கும் துணிக்கைகளுக்காகத் தானும் வீங்கி
தான் கொண்ட தடங்களையும் நோகடிக்கும்
நிண நீர் முடிச்சவிழ்க்கும் செயற்றிறனோ
கருங்காலிச் செயல்

மூட்டு வலிகளாய் பெருக்கெடுக்கும்
வைரசு மகாராசாவுக்கு
வற்றாத வெறி
போட்டுத் தாக்குவதற்கு
இந்தப் பொழுதில் ஒரு துரும்பும் இல்லை
இனியாவது பிறந்து காண்
என் பின் தடமே!

மெல்லப் பெருத்த தொந்தியும்
பத்திலொரு பாகத்தை இழக்க
பருதவிக்கும் சாக்குப் பையோ
சல்மோனால
கோலிற்றிசுக்களால் நிரம்பி வழியும்

அதையும் தாங்கி அற்பக் காரியத்துள்
அகதியாய் அலையும் மனமும்
அடுத்த காண்டம் குறித்த பேரச்சத்துள்
அசையாத வடுக்களைச் சுமக்க மறுக்கும்

ஆங்காங்கே உப்பி விரியும்
தோற் கட்டிகள்
தோல்வியின் கயிற்றில்
ஊஞ்சிலிட மறுக்கும் ஆன்மாவைச் சிதைக்கும்

தெரிவுகளற்ற ஒரு கனாக்காலம்
தெருவெங்கும் தோரணை கட்டும் இளமிடுக்கை
எப்பவோ இழந்த உணர்வும்
இருப்பதற்கான வெளியைத் தேடியலையும்

மெல்லத் திசையிழக்கும் அந்த விழிகளும்
ஆரத்தழுவும் ஆத்தையின் அந்தத் திசையை
உணர்வதற்குள் மூர்ச்சையாகும்
ஒரு நாட்பொழுதில்

பெரு விருப்பில் இனித்தவை
இதயப் பரப்பெங்கும் எழுதிவைத்த
"அழகு-இடுப்பளவு-மார்பழகு"
நீரிழந்த கண்மாய்த் தரையாய்
குறுக்கும் நெடுக்குமாகச் சிதறி வெடிக்க

சில்லறையைக் காவுகொண்ட தாய்லாந்தும்
இருஷ்சியாவும்
இருமேனியாவும் இன்னும் சில தேசத்துச் சிற்பங்களும்
மெல்ல உயிர் தின்ற வேற்று வாசிகளாய்

"........................"
"??????????????????"

வேறுபடும் கலர்களையெல்லாம் புகுந்து பாhக்கும்
பேரவாப் பொழுதுகளின் "பரம் பொருளே"
நின் தரிசனம்
இன்னும் விளங்க மறுக்கும்
உன் மடிப்புச் சொண்டில்
நுனி நாவுத் தாளலயம்
இன்னும் வலுத்துக் கொள்ளும்!

நான்
நான்
நான்
தத்வமஸி
அஹம் பிரஹ்மாஸ்மி!!!

ப.வி.ஸ்ரீரங்கன்
02.09.2007
0.40 மணி.

பாழ்பட்ட நாட்டில்

ஓடும்
போர்க் குதிரைகள்!


போர்க் குதிரைகள் தாறுமாறாக ஓடுகின்றன.

குதிரைகளின் கால்களில் அழகான இலாடன்கள் அடிக்கப்பட்டும்
அவைகளில்"பேச்சு வார்த்தை-சமாதானம்"என்றும் அழகாகப் பொறிக்கப் பட்டும்
தேவையேற்படின் மூன்றாம் தரப்பின் அனுசாரணையோடு
கட்டுக்கு வருமென்றும்"அரசியல் சாஸ்த்திரிகள்"மீளவும் கூறுகிறார்கள்!


முன்பும் இதே கதையாய்...


மக்களும் நம்பிக் கொண்டு
நடுகாட்டில் வெட்டிய மரத்தடிகளில் மறைப்புக்கட்டி
மண்கிண்டி
வயிறு நிறைத்திட்ட கணப் பொழுதில்
போர்க்குதிரைகள் கட்டவிழ்த்துப் பயிரழிக்கின்றன.


பாழ்பட்ட நாட்டில்
போருக்குக் குதிரைகளைத் தயாரித்த
சொல்லாத "தர்மங்கள்"பல இப்போதும் மறைப்பில்
சொல்லித் தெரிந்தவைகளையும்
சில செத்த குதிரைகளின் குருதி நெடிலில் மக்கள் மறந்தே போகிறார்கள்!


எந்த நேரத்தில்
எவர் தலையிலும் நெருப்பைக் கொட்டும் சிங்களக் கனவுக்கு
சீவிச் சிங்காரித்து"படைத் தரப்புக்கு"இது பின்னடைவல்ல என்றும்
புள்ளி விவரப்படி ஆட்டொகை காட்டி
கடைந்தேற்றும் கடையர்களும் கண்ணீர் சிந்தி
நம் தலையில் குட்டுவதும்
காலைக் கடன்போல் தினமும் தொடர் நிகழ்வாய்த் தெருக்களில் சிந்தியபடி


எந்தக் கனவைக் காண நேரிடினும்
அவை குருதிகொட்டும் சிதறிய சதைப் பிண்டத்தோடு
சொல்லும் சேதிகள் தூக்கத்தைக் கெடுத்த அதே பொழுதுகளாய்
தமிழர்களின் முற்றத்தில் வந்துறுமும் பருவக்காற்று
பாடைகட்டியே வெறுத்துப்போன கரங்களோடு
நமது பெரிசுகள் பல்லைக் கடிப்பது தினமும் தொடர்ந்தபடி


எத்தனை நாளைக்குத்தாம் இது வாழ்வாய்?


வட்டமேசையிலிருந்து
திம்புபோய் பின்பு
நோர்வே தாய்லாந்து
சுவிஸ்சர்லாந்து என்று தீர்வுதாம்
கட்டாக்காலி எருமையாக அலைகிறது இந்தத் தேசங்களில்


செம்பு நீரில் வயிறு நிறைத்தவர்களும்
செத்துக் கிடப்பதற்கே
செல்லடி பட்டுக்கொள்வதும்
சொல்லாத அந்தத்"தர்மங்களால்"தாம்!
அதையும் காத்துக் கிடக்கும்
சொத்துக் கூட்டம் சொல்லும் கதைகளும்
போடும்"தர்மங்களும்"இந்தத் தேசத்தில் நிரந்தரமாய்ப்
போர்க் குதிரைகளை ஓடவிட்டபடி...

ப.வி.ஸ்ரீரங்கன்
15.10.2006

பிணங்களின்மீதேறி...

போரிடும் தருணங்கள்.

செத்தவர்கள் செத்தவர்களாகச்
சேதி காவிவரும் சிங்களக் கனவு
சொல்லித் தெரியவும்,சொல்லாமற் தெரியவும்
இலங்கையில் பல உள.

இது போரரசியல்.

எனக்கும்
என் தலைமுறைக்கும் வாழ்வு கற்பிக்கும் போரரசியல்
ஒவ்வொரு தலைகளின் வீழ்ச்சியிலும்
என் தேசத்தின் இருப்பையுதிர்த்தபடியே
வாழ்வைத் தின்று பிணங்களாய்க் கழிக்கிறது!


நரம்பு புடைக்கும் எந்த மொழியும் நம்மிடமில்லை
விழித்திரையில் குத்தி மோதும்
கொடுங் கணங்களும்
கோரத் தாண்டவம் ஆடும் சிங்களக் கூத்தும்
காலத்தைக் கொன்று
கடமைக்காய் உயிர் குடிக்கும்
அது தமிழின் தரப்புக்கும் நிரந்தரமானவொரு பொழுதாய்...

யார்தான் மகிழ்வார்
உடல்களின் சரிவில் எண்ணிக்கை வைத்து?

ஒவ்வொரு விடியலிலும்
உருவமே தெரியாத மரணங்கள்
கதவின் துவாரத்து வழியே
உயிர்த்திருப்பவர் உணர்வை மோத
உறக்கமின்றித் தவித்த இரவுகளில்
குருதி சிந்தும் கொடிய போர்
இச்சைப்பட்டுச் சப்பித் துப்பும்
கழிவுகளாய் மனிதவுடல்கள்


சுனாமிக்கு முன்னும்,
பின்னும்
மலிந்த கொலைகளும்
சிதைந்த பிணங்களின்
ஊனிழந்த எலும்புத் துண்டுகளும்
தமிழரின்
உரிமை தின்ற
காலடித் தடங்காளாய்
இன்னும்
சில போரிடும் தருணம் வரை...

பிணங்களின்மீதேறி
பெருமை சொல்லும் தேச நலன்
வாகரையைப் பிடித்தாலென்ன
இல்லை வன்னியைப் பிடித்தாலென்ன?

".........................."