Samstag, 24. Januar 2009

வா புத்தாண்டே

வா புத்தாண்டே!
வா புத்தாண்டே ஈழ மண்ணில் போர் தொலைத்து

குறுவிழி காண் மரணம்
கருமனங் கொண்ட இருள்
சுருங்கு நட்பறியா இதயம்
மூன்றுங் காணிடம் மறைக

பூவும் புகையும் பிணைவுறும்
நோவும் சாவும் கொண்ட ஈழம்
போரிடை கருகும் நெஞ்சும் நிலமும்
பாரிடை இனியும் வேண்டாம்!

தேரும் திரி வடமும்
மோரும் முது கையும்
பாலும் பசுவும்
மண்ணும் நெல்லுமாக பொலிக ஈழம்

செம்பு நீரும் செம் மண்ணும்
கோலந் தரும் முற்றமும்
பொங்கற் பானையும்
திசை பார்த்த சரிவும் நிறைக தமிழர் இல்லம்


மைவிழி மகளிர் நீராடி
தாவிக் கூத்தாடித் தமிழ்பாட
நிலமகள் மதித்து நிமிர
வா புத்தாண்டே ஈழ மண்ணில் போர் தொலைத்து

குலமுதற் கிழத்தி
குடிமுதல் உழவன்
மண் வளத் தேட்டம்
மலர்ந்த பொழுதாய் வா புத்தாண்டே

பாற் சோறு வேகும்
தரும் கைகள் வலுக்கும்
கொடுங் கோன் மறையும்
வான் கொடை வளரும்

கண்மாய் நிறையும்
மண்வாய் திறந்து
மணிமுத்துப் பெருகும்
மழலைகள் தவழும்

மண் வினைப் பயனால்
மண்ணுடையான் தழைக்க
நெடுமாரி சூடி
குக்கிராமம் கூடிய பொலிவில் சிறக்க

தெருவெல்லாம் கூடும்
திசையெல்லாம் கேளீர்
நமக்கு இனி அழிவு இல்லை
வா புத்தாண்டே வயலும் வயிறும் வாழ்த்த!


ப.வி.ஸ்ரீரங்கன்
31.12.2008
பின்னிரவு:0,35

Keine Kommentare:

Kommentar veröffentlichen