Freitag, 23. Januar 2009

சொல்வாருக்குப் புத்தியும் போச்சு

(வி)தேசியப் ப(பா)ண்(ன்)

மக்களின் கழுத்தை நெரித்து
நாவைச் சுருக்கிய
துன்னலர்
துன்பமில்லாக் காலத்தைத்
துரத்திய கையோடு
பொங்கியெழும் தேசத்தவரை
தேடியழிப்பதும்,
தட்டிப்பறிப்பதும் உச்சத்தைத் தாண்ட
ஈழத்துப் பண்ணில் மக்களின் பங்கைத் தேடுகிறாராம்!

ஓரத்தே மூட்டிய தீயில்
தினம் வேகும் தேசத்து மனிதர்களுக்கு
தேசத்தின் பெயரால் 'தேசியப் பண்'!
தேசம்,தேசம்,
விடுதலையாச்சு!
ஈழமென்ற கனவின்
நனவாய்'தமிழீழம்'தேசியப் பண்ணோடு
தெருவெங்கும் 'தேசியத் தலைவராய்' தோரணமிடும்

இத்தனை நூற்றாண்டுப் புரிதலும்
இந்தத் தமிழரை எட்டா!

கட்டை விரலை வெட்டச் சொன்னால்
மறுபேச்சுப் பேசா எகலைவன்போல
மட்டற்ற மயக்கம்
மக்களில் சிலருக்கு.

சொல்வாருக்குப் புத்தியும் போச்சு
கேட்பாருக்குச் சிரிப்பும் ஆச்சு!


உலகத்துப் பண்களில் ஆய்வும்வேறு


அற்பர்கள் அழித்தவை தேசத்து
மக்களை
வாழ்வை
பண்பாட்டை
பொருள் ஆதாரத்தை மட்டுமல்ல
அவர்தம்
ஆன்மாவையும்தான்.

இத்துணை'பொய்மை'இவர் இறைத்திடினும்
எத்துணை'கொலைகள்'இவர் கரஞ்செய்கினும்
ஈழத்தின் பெயரால்
இடர் மறந்து
இறந்தனர் மக்கள்!

இதயத்தைத் தொலைத்த
துன்னலர்
துயரக் கொடூவாள்தாங்கி
'தேசியப் பண்'ஒலித்திடும்
கனவை மக்களின் மனதினில் விதைத்தும்
வழிகளில்'வெடிகளைப்'புதைத்து
பணத்துடன் ஓட
பொழுதுகள் பார்த்து...

Keine Kommentare:

Kommentar veröffentlichen