Samstag, 24. Januar 2009

வருமாண்டைக் குறித்து...

அன்பு வாசகர்களே,
அருமை நண்பர்களே-தோழர்களே!
இன்றும் தொலையும் 2006,
இனியும் வரக் காத்திருக்கும்
ஒரு புது வருடத்தில்
புலம்புவதற்குப் பல இருக்கின்றன.

பசியும் பட்டுணியும்
பாருக்குள் கொலையும்,அநீதியும்
பண்டத்தைக் குறித்தே...

இவை அநுதினம் மலிய
அன்பாய்-ஆதரிப்பாய்
எப்படி அளவளாவ?

இருந்தும்,
ஒரு செக்ற்(உவையின்) போத்தலைத்
தனிமையில் திறந்தபோது
"நான் சமைக்க இருக்கிறன் நீ குடி"என
என் தோழி-துணைவி புலம்ப
புது வருடம் வரப்போகுது.


வெடிகள் கொஞ்சம் வேண்டினேன்
என் மழலைகள் மகிழ்வதற்கென!
எல்லாம் சேர்த்து,
பதினைந்து பொருள்களென
என் சின்னவன் கல்குளேற்றரில் பார்த்துச் சொன்னான்.

அவர்கள் வெடிப்பதற்குத் தயாராக...

நான் இரவு பன்னிரெண்டுவரையும் பொறுக்கச் சொன்னேன்.
இதுதாம் நமது
மகிழ்வு,அழுகை,வருத்தம்,தைப் பொங்கல்,
எல்லாம்!

உங்களோடு
உறவாடும் ஒரு பொழுதைத் தவிர
எனக்கென்று எந்த விருப்புமில்லை!

இந்தவுலகத்தில்
மானுடம்
அமைதி,சாந்தம்
இன்பம்,
சுகம்
இதயம் மலர்வாய்
இருப்பதைத் தவிர
எதுவும் நாம் கேட்கவில்லை!

எல்லோரும் இன்புற
இனியவொரு உலகைத் தவிர
எது வேண்டும் எமக்கு?

நானொரு குடிகாரன்.
நல்லதற்காய்,
கெட்டதற்காய் நடுச் சாமத்திலும் குடிப்பேன்.

குடிப்பதனால்
வாழ்கிறேன்,
குரைப்பதனால் நோகிறேன்.

எனக்கும்
நாய்க்கும்
வித்தியாசம் உருவத்தில்...

எல்லாம் தொலைக!

இதயம் மலர்வாய்
இருப்பவர் வாழ
ஏனிந்தவுலகம் எதுவும் செய்வதில்லை?

என்றபோதும்
ஒரு "குடி"பொழுதில்
ஏதோவொரு பாசத்தோடு
எல்லோருக்கும்
அன்பு,அமைதி,ஆரோக்கியம் சேர
வரும் புத்தாண்டு பொறுப்பாக
வாழ்த்துகிறேன்!

போதும்
என் புலம்பல்,
போதை ஏறும் தரணமிது
பொல்லாத உணர்வு பிதற்றச் சொல்லும்.

"................................"
எனவே,
சந்திப்போம் தொடர்ந்து,
இன்புற்றிருங்கள்!

உலகில் எதுவும் நடக்கும்,
எம்மால்
முடிந்தது...

நட்போடு.

ஸ்ரீரங்கன்.
31.12.2006.

Keine Kommentare:

Kommentar veröffentlichen