பேய் ஓட்டுதல்
போடுதலும்
கழட்டுதலும்
பின் போடுதலும்
எடுத்தலும்
சிதைத்தலும்
பின்னுவதும் பிரட்டுவதும்
தொடர்கதையாய் காலம் நகர,
அதன்பின் துடைப்பதும்
கழுவுவதும்
புரட்ட முனைவதும்
பேசக் கற்பதும்
எழுதிப் பழகுவதும்
எதற்கெடுத்தாலும்
குருதியேற்றம்
இறக்கம்
அழுத்தம்
எத்தனை
கதைகளும்
எருக்கலம் இலையாக!
கருத்தொடு கதை சொல்.
இல்லையானால் வாய் திறந்து
பேசாதே மற்றவை-மற்றவர்கள்
புராணம்!
போதும்,
பேய்விரட்டல்கள்
புரட்டல்கள்.
பிசாசுகளின்
இருப்பைப்பற்றிக் கதைகாவிக் கொண்டிருப்பதைவிட
கருத்தோடு
எதிர்வினை வை.
அல்லாது போனால்
அவித்த சோற்றை மெல்ல மென்று
அம்மாவிடம்
தோசைக்கு மா அரைப்பதுபற்றிக் கேள்
பின் அந்த வேலையில்
அம்மாவுக்கு உதவு.
எத்தனை முறை
எத்தனை கர்ச்சனை!
எதிலும்
உப்பும் இல்லை
உறைப்பும் இல்லை.
இதுவா
பேய் விரட்டும்
உடுக்கையடி?
உலக்கையெடுத்து உரலிடிக்குமுன்
உரலில் உமியா நெல்லாவென்று பார்த்துக் கொண்டால்
இடிப்பது உணவுக்கு
உதவுமா இல்லை
விழலுக்கு இறைத்த நீராகுமா என்பது தெளிவு.
உன்னை
உலகப் புள்ளியின் மையத்தில் ஏற்றி வைத்துவிட்டு
நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும்
உன்னைப் பின்னியே உலகில் வந்து தொலைக்கிறது!
உலகம்
உனது மையப் புள்ளியல்ல-நீ
அதில் மேடை தேடுகிறாய்
ஆடிக் கொள்வதற்கு
அவ்வளவுதான்.
அவசரப்பட்டு
அடுக்கிவிடும்
வார்த்தைக்கு அர்த்தம் இருப்பதில்லை
அதிலும் நீ சொல்லும்
கதைகளெல்லாம்
அலட்டல்-நமைச்சல் உனக்குத்தான்.
அந்தரத்தில்
ஆயுதம் தூக்கி
அடுப்பெரிக்கப் புணங்களை அள்ளிப் போட்ட
கதைகளின் அரிச்சுவட்டில்
நீ
ஆடுகிறாய்
கீச்சு மாச்சுத் தம்பலம்
மாச்சு மாச்சுத் தம்பலம்
இப்ப நீ
மூச்சு!
Keine Kommentare:
Kommentar veröffentlichen