Samstag, 24. Januar 2009

விலகுங் காலம்

புத்தாண்டே,வருக!


மெட்டரும்பும் பொழுது
புலர்வதற்காய் விடிவு
நொருங்கிய இதயம்
குறை வயிறு

குந்தியிருக்கும் கொட்டில்
குளமான முற்றம்
எச்சில் மிதக்கும்
கழிச்சல் கரையும்

இது எங்கள் வாழ்வு
எழுதாத சட்டமும்
எழுதிய சட்டமும்
எங்களைக் கெடுக்கும்
எருவான வியர்வை
பயன் கொண்ட வாழ்வு எவருக்கோ!

பேச்சிலும் மூச்சிலும் முனகல்
முழியிழக்கும் நீரோ
எங்கள் முற்றத்தை நிறைக்கும்
நித்தம் இருண்டு கிடக்கும் தேசம்
தெருவில் ஓடுடன் உழவன்

தேசங்கள் விடியுதுதாம்
உலக வர்த்தகத்தால்!
உப்புக்கும் அவர்கள்
பல்லுக்குக் குச்சியும் அவர்களே செய்வர்
உருப்பட்டது எமது வாழ்வு

விடிவுக்காய் யுத்தமென்று
மடிவுக்காய்த் தொடரும்
மனிதமும் பேசி
மாண்டவர் உடலில்
தூண்டுவர் குரோதம்!

இத்தனைக்கும் மத்தியில்
இன்னொரு புத்தாண்டு
பிடரியில் முட்டும் பட்டுணி மரணங்கள்
பாய்விரித்துப் படுக்க
பாடை கட்டும் பொழுதோடு காலம்
குண்டு காவி கொட்டும் கொடிய விமானம்

பார்போற்றும் புத்தாண்டு
போரொடு புலரும்
பொழுதெல்லாம் குருதி நெடில்
கொப்பளிக்கும் குண்டுகள்
வெட்டப்படும் சுரங்கம்
வெருட்டப்படும் வேலையிடங்கள்
வேள்விக்குத் தொழிலாளி
வேளைகளில் உடல் தொலைத்து...

உருப்பட்டது உலகம்
உருப்படியாய்ப் புலராத வாழ்வு!

உங்களுக்கோ உலையேறும் அடுப்புகள்
எங்கள் அடுப்பில் பூனைகள் புரளும்
துள்ளும் குட்டிகள்
தூங்கும் சுகமாய்

குண்டடிபட்ட மனிதக் குழந்தை
குருதியிழந்து தூங்கும்
இத்தனைக்கும் மத்தியில்
வருக புத்தாண்டே,வருக!
வேறு:
மெட்டரும்பும் பொழுது
புலர்வதற்காய் விடிவு
எமது கால்களில் நாமே நின்றால்...




30.12.2007

Keine Kommentare:

Kommentar veröffentlichen