சாவி???
கொடிய பொழுதொன்றில்
தொலைக்கப்பட்ட சாவியைத் தேடிக் கொண்டு சென்றேன்
மனது விழியின்றித் தேடுவதற்கு
அக்கறையாய் இருந்தது
எனினும்
;எனது கையில் துருவிக்கொண்டிருக்கும் கைத்தடி>
சிறு பருக்கைகளாய் கிடந்த சருகுக் குவியல்,
முகத்திற்கு நேரே எதிர்கொண்ட மழைத்துளி
அவற்றின் நிலை மாறுதலை
அறிவதில் எனக்கு நாட்டமில்லை.
எச்சில் பட்ட குமரியின் முலைபோன்று
என் சுருட்டு நசிந்து
உதட்டில் அமிழ்ந்தது
வனாந்திரமாகிப்போன நெடிய பயணம்
வரண்ட பாலைவனத்து ஒட்டகமாகச்
சுமைகாவத் தயாரானது
கடந்த பிரளயம்
விழிகளினூடே...
எதெற்கெடுத்தாலும்
தும்பி பிடிக்கக் காத்திருக்கும் சிறுவர்களின் மனதோடு
ஒரு கொடிய ஆற்றைக் கடந்துகொண்டிருந்தேன்
திடீரெனத்தோன்றிய அந்த இராட்சத முதலையை
எதிர்கொள்வதில்
மனதின் பாலைவனத்துப் படிமத்துக்கு முடியவில்லை
அதனருகில் அமர்ந்திருந்த கொக்கின் தலையில்
வெண்ணை வைத்த பனியை
சூரியக் கதிர் விரட்டியடித்தது
தடுக்கமுடியாத காற்றோ
பலமுறை என்னோடு மோதித்
தன் திமிர்த்தனத்தை உரசிப் பார்க்க
திரண்டு வந்த
அலைகளில் நான் எங்கோவொரு மூலையில்
தூக்கி வீசப்பட்டேன்
காருண்யமிக்கவொரு நீரலையால் கரையொதுங்க
உயிரின் துடிப்பு மூளையில் அதிர்ந்தது
இதயத்துள் இருண்டு கிடக்கும் நஞ்சு
துப்புவதற்குள் பொழுது இருண்டு விடும்
பற்களின் கொடிய நறும்பலால்
என் கடந்த காலத்தை நினைவுக்குள் இருத்திக் கொண்டேன்
நினைக்கும்போது சுகமாகவிருக்கிறது
இப்போது கைத்தடி திடீரென நிலை மாறியது
அதன் கனத்தலில் கைகள் வலித்தன
நாய்களில் கொட்டிப்பார்த்த வெள்ளோட்டம்
நடுத்தெருவில் என்னை ராஜாவாக்கியது
அதுவொரு காலம்
சும்மா அங்கொன்றுமிங்கொன்றுமாய்
அலைந்த சருகுகளெல்லாம்
முகத்துக் நேரே பணிந்து முதுகுக்குப் பின்னே நிமிர்ந்தன
அதன் பின் நான்
ஆண்குறியை அழுத்திக்கொண்டு
அம்மணத்தின் வாசலில் அடிமையாய் கிடக்கிறேன்.
சாவி???
05.04.2005
Keine Kommentare:
Kommentar veröffentlichen