Samstag, 24. Januar 2009

அடுப்புகளெரிக்க வழியைப்பாருங்கள்!

அன்னையின் மடி தேடி...


அந்நியர்களின் விருப்பாய்
அழிவு வந்தது ஈழமென்று!
குரும்பட்டி பொறுக்கிய சிறார்களின்
செல்லக் கால்கள்
எங்கள் தெருவெங்கும்
ஒடிந்து கிடக்கின்றன.

அந்தப் பாலகர்களின் சிரசுகள் அறுத்துத்
தேசியத் தலைக்கு மாலைகளாக்கப்பட்டன
கிளிதட்டு விளையாடிய குஞ்சுத் தம்பி>
தங்கை சிரசுகள் இழந்து
நம் 'கவிகளால்' மாவீரர்களானார்கள்!


எம் முன்னோர் தோணிவிட்ட
வளம் நிறைந்த எங்கள் கடலை
வழித்து நக்கும் அந்நியன்
எங்கள் மிருகங்களுக்கு எலும்புகளிட்டுக்கொண்டே
இன்னுமெமது
சிறார்களின் குருதியையும் குடிப்பதற்கு
மாவீரர் பாட்டோடு
தீராத கொலை வேட்கையுடன்
அலைகிறான்.

இந்த நிலையில்
என் தேசக் குஞ்சுகளுக்கு
சில வற்றைச் சொல்வேன்:


மற்றவர்களின் விருப்புக்காய்
மடிந்தது போதும்,
மௌனித்த உங்கள் ஆசைககளுக்கு
வயதாகிப் போகவில்லை!
அதோ,
வானத்தின் மூலையில் ஒளிருமிந்த நிலாவைப்போல்
துள்ளி விளையாடத்தக்க
உங்கள் மனதைக் கெடுக்கும்
கூலிக் கவிகைகளைக் கடைந்தேற்றுங்கள்.


'நானிறந்தால் ரோஜாவால் மாலையிடுங்கள்'
என்னுடலுக்கென்ற உங்கள் அற்ப ஆசையில்
வாழ்வின் உண்மையையும்
வாழ்வதற்கான உங்கள் நீண்ட ஆசையையும்
நான் தரிசிக்கிறேன்.


ஏழைத் தாய் பெற்றெடுத்த குஞ்சரங்களே!
இறந்தபின் எதுவுமே உங்களைச் சேரா,
இருக்கும்போதே வாழ்வீர்கள்!!



தலைவர்களின் குழந்தைகள் போல
மேலைத் தேசங்களில் கல்வி பயின்றும்
சொகுசு வாகனங்களில் சாவாரி செய்யும்
படாடோபம் உங்களுக்குக் கைகூடாது போகினும்
அன்னையின் கரங்களினால்
பரிமாறப்படும் அந்தப் பழையசோறும்
அப்பனின் வியர்வையில் ஒதுங்குவதும்
"எமக்கு" அமிழ்தம் என்பதை உங்களுக்குச் சொல்வேன்.



மற்றவர்களின்
மயக்கும் மொழியினை நம்பாதீர்கள்>
அவை உங்கள் தலையைக் கொய்யும்
அந்நியனின் அம்புகள்!


தேசமென்றும்
தேசியம் என்றும் சொல்பவர்கள்,
இதற்குமேலாக "உனது மொழி" உயிரென்போர்,
அதையும் தாண்டித் தேசத்துக்காய் மரித்தால்
தேகம் மறைந்தும் நீங்கள் வாழ்வதாய்க் கதை சொல்வோரை
மோதி மிதித்துவிடுவீர்கள்!


உங்கள் கரங்களிலும்
தோள்களிலிலும் இருப்பது-தொங்குவது
குரும்பட்டிகளோ
கிட்டிப் பொல்லோ அல்ல,
அவை
உங்களின் சிரசுகளைக் கொய்து
மாற்றானுக்கு மாலையாக்கும் ஜந்திரங்கள்!
தூர வீசுங்கள்!!
இனித் திரும்பியும் பார்க்காது
அன்னையின் மடி நோக்கிச் சின்னக் கால்களை அசையுங்கள்.



போதும்!
உங்கள் தலைகள் உருண்டது போதும்!!
இனியும் உங்கள் ஈரவுதடுகள்
புழுதியைப் புணர்வதும்
ஆசைகளைத் தேக்கி வைத்த மனத்துடன்
அன்னையின்
சேலைத் தலப்பைப் பிடித்தவுங்கள் கரங்கள்
அதே நினைவுடன் தரையைப் பற்றிப்பிடிக்கும்
அந்தக் கணச் சாவு
வேண்டவே வேண்டாம்!!!



விளையாட்டில்
நண்பன் அளப்பி அடித்வுடன்
'அம்மா'என்றோங்கி அழும் நீங்களா
அந்நியர் அடியாட்படையாய் மாறியது?
அதோ பாருங்கள்!
எங்கள் அன்னைகளின் அடுப்புகளில்
பூனைகள் ஒய்யாரமாகத் தூங்குகின்றன!



அப்பனை அள்ளிச் சென்றவர்கள்
காடத்துக்கும் எலும்புகளைத் தரவில்லை!
உங்களையும் கழுகுகளிடம் பறிகொடுத்தவளோ
பாடையில் போவதற்குள்
பருக்கை கொஞ்சம் உண்ணக்கூடாதா?


நேற்றுப் பெய்த மழையில்
அவள் விறைத்துக்கிடக்கிறாள்
கூரையோ
சிற்றொழுக்கிலிருந்து
பேரொழுக்காகி பேதையவள் உயிரை உறிஞ்சியபடி...
உங்களுக்குப் பசிபோக்கிய
முலைகள் வரண்டுகிடக்கிறது
அவள் மனத்தைப் போலவே!


இனியும்
தாமதித்திருப்பதில் அர்த்தம் உண்டா?
அந்நியனின் கூலியில்
ஆரும் "தமது தேசத்தை" விடுவித்ததாக வரலாறில்லை,
நீங்கள் அறிந்திருப்பீர்கள்!


வெள்ளைத் தேசங்கள்
செம்புக் காசுக்கும்
'தாளை' எதிர்பார்த்தே இருப்பவர்கள்
சும்மாவா கோடிகளைக் கொட்டுகிறார்கள்?
அவர்கள்
உங்கள் உயிருக்கல்லவா விலை தந்துள்ளார்கள்!


ஆசையாய் பெற்று
அமுதூட்டி வளர்த்தவள் அழுதுகிடக்க
யாருக்கோ தலைகொடுத்து
அழிவது
மாவீரமோ?
தேசம் விடுதலையாவதும்,
தேசியம் நிலைப்பதும்,
தமிழ் மொழி ஆளுவதும்
உங்களின் உயிரைக் குடித்துத்தாமென்றால்
நிச்சியம் அந்த விடுதலை
உங்களுக்கில்லை!


அந்நியனிடும்
கோடிகளின் பின்னே
கேடிகள் உள்ளனர்!


இன்னுமா
இவர்களை நம்புகிறீர்கள்?
ஆத்தைமாரின் கொட்டில்களே
அவர்களுக்குச் சொந்தமில்லை
இதற்குள்
தேசம் சொந்தமாகிடுமா?
போங்கள்,
போய் அன்னைகளின் கரங்கள் பிடித்து
அடுப்புகளெரிக்க வழியைப்பாருங்கள்!


ப.வி.ஸ்ரீரங்கன்
07.12.2005

Keine Kommentare:

Kommentar veröffentlichen