Samstag, 24. Januar 2009

ஒன்றுபட்டுக் கிடக்கிறது ஊழ்

குருட்டு விழிகள்

நம்பிக்கை நலிந்த
குருட்டு விழிகள் பாதைகளைக் காட்டுகின்றன
குழறுபடிகளின் வருகைக்குப் பின்
மனிதர்களின் மண்டையோடுகள்
மரணத்துக்கு முன்னைய காலங்களுக்குள் சிதறிக்கொண்டன

குருதியுள் முளைத்த ஈக்களோ
வாழ்ந்து பார்த்து
நித்தியம் குறித்துத் தும்மிக்கொண்டன!


மெல்லிய காற்றுள்
உந்தப்படும் தூசியின் இருப்பைச்
சுட்டெரித்த காலம் கொடியதே என்று நீ புலம்புகிறாய்

எதிர்காலமோ
அன்றி நிகழ்காலமோ
கடந்தகாலமோ
இதுவரை எனக்குள்ளோ
வெளியுள்ளோ கிடையாது

மீண்டுவிட்ட வினாவுக்குள்
கருத்தரித்த நித்தியம்
ஒடுங்கி விரியும் உயிரின் இருப்போ
காலத்தைக் கிழித்துக்கடாசியது எனக்குள்

மெல்ல உதிரக் காத்துக்கிடக்கும்
நரை அரித்த விதையோ
முளைப்பதற்குள் மரணித்தாக வேண்டும்
ஆசையின் இருட்டில்
ஒன்றுபட்டுக் கிடக்கிறது ஊழ்

பிரித்தெறி
தூரத்துக்குத் துரத்திவிடு
எட்டப் போவதற்குள்
எதற்குள்ளோ பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு
மண்டையோடுகளுக்குள் சிறைப்படுவதற்கு விருப்பற்றவை



31.10.2008

Keine Kommentare:

Kommentar veröffentlichen