Freitag, 23. Januar 2009

நம்பிக்கை

மக்களின்
நம்பிக்கை வேர்கள்
அழற்சிக்குள்ளாகியபடி
நலிந்து விடுவதுதாம் வாழ்வென்றாகி
தினமும் விடியலை வெறுத்து
மௌனிக்கும் உயிரும் உளமுமாய் அவர்கள்

எப்போதோ மூட்டிய காளி கோவிற்கற்பூர தீபம்
அமிழ்ந்து அணைவதற்குள்
இன்னும் பல சூடப்பொதிகளைக் கேட்டபடி
அதன் நீண்ட ஜுவாலை சூரியனை மறைக்கும் கிரகணமாக
தேசமெங்கும் இருளைப் பரப்பி
வீதிகளில் கிடக்கும் முட்களை மறைத்து உயிர்களின் வலியைக் கேட்கும்!

இப்போ காளியின் இருப்போ
மௌனமான சமாதியாகி
மலினப்பட்ட வதந்திகளோடு
வலிந்துருவாக்கும் பூஜைகளின் பின்னே
கோரத்தாண்டவத்தின் குரலிழந்து ஜடமான ரூபநிலையாய்...

பனித்துளியின் இருப்பைவிட
பலவீனமான ஒரு நிலையில் அவள் ஒருபோதுமிருந்ததில்லை
யாரும் அறியா ஒரு பொழுதில்
அவள் கோவிலை விட்டுப் போனதாகவும்
அதன் பின் அவள் வரவேமாட்டாளமெனும் ஒலியும்
ஊர் கூடிக்கதைக்கும்போது வலுவுறும்

பூசாரிகளால் ஏற்றப்படும் மந்திரங்களோ
அரேபிய ஒட்டகத்தைப்போல்
மக்களின் செவிகளை மரத்துப்போக வைக்கும்
இதன் நீண்டவொலி
ஐரோப்பியப் பக்தர்களின் பிடரியிலுரசி
மெல்லிய நம்பிக்கைளையும் விழுங்கிய நிலைவேறு

காளிக்குப் பதிலாக வைரவரை வணங்குவதும்
நம் மக்களின் ஐதீககால வழமைதாம்
எனினும்
அவிழ்த்து விடப்பட்ட பேய்களை ஆட்டிப் படைக்கும் சக்தி
வைரவருக்கு இருப்பதில்லை!
காளியினது கைகளோ
ஆயுதங்களின் இருப்பிடம்
சூலாயுதத்தின் சொந்தக்காரருக்கு
அத்தனை பேய்களும் கட்டுபடாது மக்களின் பக்கம்
குருதிசொட்டும் கோரப் பல்லுடன்

அவசரமாக அடிக்கப்படவேண்டிய உடுக்கோ
பிய்த்தெறியப்பட்டு எங்கோவொரு மூலையில்
உருத்தெரியா வடிவில் தியானித்தபடி

உடுக்கையின் அவசியத்தை அறிந்த பக்தர்கள்
வெளியுலகில் தேடுவதில் வலு தீவிரமாக
அங்கும் ஓரளவு உருத்தெரியாது கிடக்கும் சிலதை
வாக்களித்தபடி தருவதற்கு சம்மதம் கோரி
க(ஜெ)னிவாக் கோவிலுக்கு பிரதட்டை எடுக்கப்படலாம்

இந்நிலையில்
காளியின் பெயரைச்சொல்லி
சேர்த்த காணிக்கைகளில் கட்டப்பட்ட
குடிசைகளில் காளியின் படங்கள் நாக்கைத் தொங்கப் போட்டபடி...
இனி
கையெடுத்துக் கும்பிடுவதுதாம் பாக்கி.

17.02.2005

Keine Kommentare:

Kommentar veröffentlichen