கழுவிய மீனும்,
நழுவிய கையும்.
சந்தர்ப்ப வாதம்,ஓடுகாலி,தப்பித்தல்
கழுவிய மீனில் நழுவிய மீனெனவும்
ஊருக்குள் உருண்டுவரும் மொழிகள் பிளந்து
உன்னையும் கற்கச் சொல்கிறாய்,...ம்!
"சரியோ பிழையோ" தெரியாது,
கருத்துச் சொல்வதும் தப்பித்தலும்
சரளமான தமிழ்ச் சேட்டைதாம்
நண்ப போதாதற்குப் புதைகுழி தோண்டி
செத்துப்போன பிணத்தை இழுத்துப்
புலிப் பாசிச மொழியை வெகுஜனவூடக
மொழிவாகக் கருத்தூன்றாதே, தனக்கு
மூக்கு நீளமெனும் ஒரு வாத்து
மீளத் துயர் விலத்தித் தும்முகிறது
இறுதிவரை பிணங்களாகும் உயிருள்ள
வாழ்வாசைகள் துரோகம் மறுத்தத்
தியாகக் கம்பத்தில் கஞ்சல் சேலையாய்
அழகுக் கோலம், வரலாற்று வெளியில்
கொலுவூன்றிக் கொடி நாட்ட!;
நீ,புதியவனாகச் "சரியானது
பிழையானதென" கூறமுடியாது தவிப்பதாகச்
சொல்வதில் எவரையும் காப்பதற்கில்லையே?
முத்திரைகள் பலவிதப்படும் துரோகி,
எட்டப்பர்,பொறுக்கி,நாய்கள்,உணர்ச்சிவசம்,
இத்தனைக்கும் மத்தியில் இவருக்கும்
அவருக்கும் தனிமனிதப் பழிவாங்கல்
பொருந்துவதற்கு அவரவரொடு கூடப் பிறந்திட்ட
"மக்கள் நலன்" விட்டுவிடாது!,
எல்லோர் கழுத்திலையும் துரோக அட்டைகளைத்
தொங்கவிடும் புலிப் பினாமிகளோ தமக்கெனப்
புரட்சி அட்டைகளை தொங்கவிடச் சொல்வதும்
நியாயமென உரைக்க நீ எதற்கு நண்ப?;
மற்றவர்களுக்கும் அழகான தொப்பிகளைத் தைக்கத்
தெரியும் என்பதற்காய் புரட்சிக் குத்தகை
ஏலமாவதில் எனக்கென்னவோ இலட்சம் புதைகுழிகளுக்கும்
தமிழீழம் கிடைத்துவிட்டதென்ற உணர்வொடு
ஊசலாட்டம்தாம்; உப்பிடுவது அதுதானே எமக்கு?
மனித உயிரை நேசிப்பது இருக்கட்டும் நண்ப
தவறைத் தவறெனச் சுட்டப் புலிக்கொடிக்குள் முகத்தைப்
புதைத்துப் புரட்டுவதற்கும் ஒப்பீடுகள் உனக்கெதற்கு?
உலகம் உருண்டைதாம் அதற்காக அது சிறுபிள்ளைப் பந்தா என்ன?
பருப்பு வேக வைப்பதோ அன்றி
ஓடிப்பிடித்து ஓணான் பிடிப்பதோ அல்ல,
நாம், இலட்சம் மக்களது உருண்ட தலைகள்கொண்டு
பந்து விளையாடுகிறோம்; போதாதற்குப் புரட்சிப் பாடலுடன்!
இப்போது,நீ கூறுவதெல்லாம் மனித நேசிப்புக்கானதென்கிறாய்
இதிலாவது நாணயத்தைக்கொண்டாயானால்-அதற்காகவாவது
விசுவாசமாக நடக்கக் கடவாய், அன்றியதையும்
புலிக்குத் தியாகங் கற்பிக்க,ஏகாதிபத்திய எதிர்ப்புக்
கூறெனவுண்டு இருப்பவர்கள் தலைகளையும் கூறுபோட்டு
அறுப்பதற்குப் பெயர் புரட்சி அல்ல!வேசங்களுக்கு மேடை
கொலைக் களத்தில் என்று எவர் சொன்னார்?சாகடிக்கப்படும்
உயிர்கொண்டு சரணாலாயம் கட்ட நீ எதற்கு?
பிழை சரியெனத் தெரியாது தவிக்கிறாய்,
விரைவில் கற்பதற்கும் காலத்தில் வாழு
மீதியை வாழும் மனிதர்தம் ஓலம் உரைக்கும்
உனக்கும் எனக்கும் பாலங்கள் அமைத்து.
ப.வி.ஸ்ரீரங்கன்
12.04.09