பலிப்பீடம்.
இருண்டு
மெளனித்துக் கிடக்கும் மேகத்துக்குக்கீழ்
இடித்தொதுங்கும் வவ்வால்
தூங்க மறுக்கும்
உருண்டு
உருவமிழக்கும் உணர்வுப் பொட்டலத்துள்
இருப்பதெல்லாம் வினையும்,வீம்பும்
எஞ்சிக் கிடக்கும் காலத்தையேனும் அறிந்தாபடில்லை
சொற்பத்துள்
இருள் படரும் ஒரு தினத்தைவிட
என் ஆயுள் நீண்டதில்லை
வவ்வாலின் இறக்கையெழுப்பும் ஒலியோ
அத்துமீறிய அதிர்வுகளை உணர்வுக்குள் எறிந்தபடி
இருந்த இடத்தை மறப்பதற்கு
இன்னும் நீண்ட தூரம் சென்றாக வேண்டும்
மரணத்தின் விளிம்பில் குந்தியிருக்கும் முற்றுப் புள்ளி
திரைவிலகும் ஒரு திசை வெளியில்
குத்தியெழும் அரண்ட மொழிவோ
அச்சத்தைத் தந்தபடி
அரவணைத்து ஆறுதலைச் சொல்வதற்கு
அன்னையோ நீண்ட தூரத்தில்
இனி அவள் வருவதற்கில்லை!
எனது
நித்தியங்கள் தலை குப்பற வீழ்கின்றன
நினைத்துப் பார்க்கவே மனது மறுக்கும்
கருமைப் புள்ளியில்
அறுந்து தொலையும் என் ஆணவம்
கடிகார முள்ளில் சிக்கிய உயிரோ
சுழன்றெழும் இன்னொரு பொழுதில் மீளத் தலை குத்தும்
என் தலையில் குவிந்திருக்கும் கறையான்கள்
அரித்துப்போட்ட அமைதிக்கு நாளை கருமாதி
எரிந்தொதுங்கிய சாம்பலுள்
கரித்துண்டாய்க் கிடக்கும் அநாதையுணர்வுக்கு
இன்னொரு பொழுதில்
கணிசமானவொரு உறை கிடைக்கும்
முடமாகக் கிடக்கும் காலத்துள்
நினைவு முறிக்கும் உண்மைகள்
ஏற்க மறுக்கும் தடங்களில்
இருப்பிழக்கும் மனித வெளிகள் இருண்டு கிடக்கும்
எந்தத்தேற்றமும்
ஊன்று கோல் தருவதற்கில்லை
முடங்கிக் கிடக்கும்
உருவமிழந்த இதயத்துள் எலி பிராண்டும்
பூனைகளின் பசித்த தவத்துள் அது சாகக் கிடக்கிறது
என்னைப் பிய்த்தெறிவதற்கு
பேரங்களோடு கட்டப்படும் சூன்யத்துள்
என்னதான் இருந்திட முடியுமென்பதை
இதுவரை நானோ அல்லது
என் மரணமோ அறிவதற்கு அவசியமில்லை
வவ்வாலின் வாயுள்
சிட்டுக் குருவிக்குப் பலிப்பீடம்
ப.வி.ஸ்ரீரங்கன்
இலையுதிர்காலம்: 2007.
Keine Kommentare:
Kommentar veröffentlichen