Samstag, 24. Januar 2009

நெட்டூரம் இது?

"பத்தினி"

வார்த்தைகளின் பின் மெளனமும்
மெளனத்தின் பின் உணர்வுகளும்
உணர்வுகளின்பின் அழுகையும் அழிந்து போகின்றன

அற்புதமான அனைத்து நித்தியங்களும்
எங்கோ தொலைவில் உதிரும்
ஒரு நிர்ணயத்தில் எந்தப் புணர்வும் இல்லை
அற்பத்தனமென்று எந்த வினையும்
கட்டியத்தில் அமிழ்ந்து போவதுமில்லை

எதற்காக நீ ஓலமிட்டாயோ
அந்த உணர்வுக்குப் பின்னோ
நீண்ட அழுகையின் தடமும்
நினைவிழந்த உணர்வின் உருக்கமும்
இருப்பிடமின்றி திசையிழக்கும்

என்றுமில்லாதவாறு எதற்குத்தாம்
தொலைவைத் துரத்தி
அண்மிக்க முனைவது?

காத்திருப்பதற்கும்
நிலைத்திருப்பதற்கும்
இயற்கை ஈவதில்லை
இதற்குள்
பாவத்தைச் சுமக்க வைக்கச்
சங்கப் பலகையில் சில தீர்ப்புகள்!

நெட்டூரம் இது?

வலிய உணர்வுச் சுடரில்
கருகிய இதயத்தை
மெல்ல வருடும் நித்தியமொன்று
பிறப்பெடுக்கும் பின்னைய சுழற்சியில்
பெருகும் பொய்யுரைப்பாய்

நெஞ்சுப் பெரு வெளியில்
கற்றைக் கனவுகள்
கள்ளமாய் வினை முடிக்கும்

கருத்துக்களின் பின்னோ
சிறுத்துப்போகும் சுதந்திரம்
ஒத்தூதலுக்கான ஒரு போக விளைச்சல்
இன்னொரு போகத்தைக் குறி வைக்கும்
எனது விளையாட்டுக்கு மைதானமின்றி
நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும்

எந்தப் "பத்தினிக்கும்"வேண்டாப் பொழுது
வெருட்டுவதில் முடியும்
தன்னால் ஆவதும்
தவறிச் சுடுகாட்டுச் சாம்பலில்
எச்சில் வைக்கும்

மெளனித்த நாயோ
பதுங்கித் தாவும் பூனையைக் கவ்வும்
பிய்த்தெறியப்பட்ட அங்கங்கள் சொட்டும் உணர்வுக்கு
அர்த்தங்கொள்ள முனையும் எனக்குத் தோல்வி


ப.வி.ஸ்ரீரங்கன்
16.05.2007
2.13 மணி.

Keine Kommentare:

Kommentar veröffentlichen