Samstag, 24. Januar 2009

தந்தையுமாகி நின்று

எந்தையும்
தாயும் எனத் தொடர...


"இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்"
இன்னமுமே புரியா இது அத்தான்-ஆசான் தாயுமாகி
இன்னதெனக் கூறுவதற்குள் இதயமொடு சமரசஞ் செய்யுந் தருணத்தில்
இதுதானோ உற்றார்க்கு உடம்பு மிகை, பிறப்பு அறுக்கல்?

காற்றே கவிந்திருக்கும் கருமுகில் அறுத்து
காவிச் செல்லு என் கண்ணீரை
கட்புலம் நோகிய நினைவொடு நெஞ்சு
அத்தானாய் வந்தாய் ஆசானாய் இருந்தாய்

தந்தையுமாகி நின்று
தமிழ் செய்யும் எனது மனதில்
நிலைத்தாய் தாயுமாகி தாங்கொணாத் தவிப்பு
தர்க்கத்துள் நிலைக்காத உறவில்

என்னத்தைச் சொல்ல?எத்தனையோ பகைகொண்டேன்!
பக்குவமாய் உறவுறுந் தருணமொன்றிற்காய் நாம் காத்திருக்க
காற்றிடையுறவுண்டாய் கவிதையானது உனது நினைவு
நெருப்பிடும் கணத்திலும் நின் பெருமிதம் எனது நினைவாய்

தளையறு வாதத்திலும் தவப் பெரும் தர்க்கத்திலும்
தமிழாய்ச் சொல்லும் உணர்வினுடு தவித்தவொரு வாழ்வும்
போரிடை அன்ன தன் புதல்வச் சுற்றமும் சுற்றப்
பொருவில் மேருவும்,பொரு அரும் வாழ்வு புக்கான்

நிலவொடு வானம் பொருந்தும்?
முகிலொடு பொழிவு நள்ளும்
புகழ்தரும் பொலிவும் அமிழ்தின் அகமும்
அந்தமிலா அமைதிகொள்ள வாயிடை மொழியுமானாய்

தக்கதே செய் என்பாய்
தகமையாய் வளர்க என்பாய்
தாயினும் மேலாய் இருந்தாய்
தந்தையே எனக்கும் ஆனாய்!

இன்றோ என் சொல்லுக்குச் சுகமுமில்லை
நீ இல்லா நினைவுக்கு உருவமுமில்லை
கனத்த உணர்வினுள் கண்ணீரொடு மோதும் நான்
கண்ட மாத்திரத்தில் நீ காலமுமானாய்?

மாமுனி மனையோடு மருவிய கால வெளியொன்றில்
விழி எறிந்து வரவுக்காய் நான் மிதந்த பால்யம்
பக்குவமாய் பொத்திய புதுவுணர்வுக்கு நீ உறவென்றாய்
உளமொடு ஊனும் நோக உனக்கெனப் பணிந்தேன் அன்று

மைத்துனர் முறைமையால் மனதுடைந்து
மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம்
நேற்றைய நினைவுமுறிக்க
நீ நெடுந்தொலைவில் நிற்கக் கண்டேன்!

"கெட்டேம் இதுஎம் நிலை என்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகுபவர் சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரிது இகழ்ந்து ஆற்றவும்
எட்டவந்து ஓர் இடத்து ஏகி நிற்பவே"என்பதும் அறிவாய்

இற்றையில் வெம்பி வெந்தழுது வீங்கி நிற்கும்
நினைவுடை நெஞ்சுகொண்டேன்
உற்றது உறவென்பாய் அற்றது அறமுமின்றி
அழிவது இயல்பென்பாய், அர்த்தமும் ஆசானாய் ஆனவனே!

முற்றத்து வாழை குலையீந்த
முத்தனும் பெண்டிரும் கூத்தாட
மெத்தமும் நித்தம் இது தொடர
அந்தமும் ஆதியும் பொய்த்திருக்க

எந்தையும் தாயும் எனத் தொடர
சிந்தையில் சிறப்புடை சேர்த்த நினைவிடை
நெஞ்சறி நன்றி நானுரைக்க-என்
இதயத்துள் எங்கோ நிறைந்திருப்பாய்.

ப.வி.ஸ்ரீரங்கன்.
13.05.2008

Keine Kommentare:

Kommentar veröffentlichen