Samstag, 24. Januar 2009

கிழக்கின் சுய நிர்ணயம்...

கேட்பாரின்றிக் கேணிகள்
விதைப்பாரின்றிக் காடாய் வயற்பரப்புகள்
வாத்தியாரின்றிப் பள்ளிகள்
வாழ்விழந்த ஏசு குருசு மரத்தில் தொங்கியபடி
தமிழ் தனித்தபடி தேசத்துள் விடுதலை தேடி...

எண்ணப்பட்ட தலைகளின் சரிவில்
மாவீரர் தினங்கள் வந்து போகும்
குருதிச் சேறு அப்பிய குழந்தை முகங்கள்
கொல்வதற்கேற்ற கூட்டுப் பிராத்தனை
தனித்த தேசம் சுய நிர்ணயம் தமிழீழம்!

பயங்கரவாதக் கதைப் புனைவில்
காலத்தை ஓட்டும் சிங்களக் கொடும் யுத்தம்
எக் காலத்துக்குமானவொரு தேசக் கதாநாயகர்
இவர்களுள் கைய+ட்டுப் பெற்றவர்களின்
பிரதேசக் கதாகலாட்ஷேபம்

காரியத்து மூளைக்குக் கதைக்க
ஒரு வடபகுதியும்,வன்னியும்
வாழ்விழந்தாகச் சொல்லவொரு கிழக்கும்
பெரும் பசைகள் வலுக்க வந்தது
இலண்டனுக்கும் பாரீசுக்கும்?

ஆரூ கண்டார்?
ஆட்களைக் கடத்தியவர்களுக்கு
நோட்டுக்களைக் கடத்தவா சுணக்கம்?
சும்மா சொல்லக் கூடாது
சுகமாய் இருக்க மக்களின் சோகம்
சொல்லிக் கொள்ளப்"புலிகளின்" அராஜகம்
வடக்கின் மேலாதிக்கம்!!

வண்டு திசை பார்த்துப் பூவொன்றில்
வயலும் வரப்பும் வாழ்வளித்த குறுங் குடில்
கிராமத்துக் குறுவாழ்வில்
குலைந்த சோகம்!

தெருவில் பொதியேந்தி
பொழுது படுவதற்குள் திரும்பும்
உழைத்தோய்ந்த முகங்கள்
சுழற்காற்றில் அள்ளப்பட்டது தெருவும்
தேசங்கொண்ட மனங்களும்

எங்கள் தெருவில் நாண்டுநிற்கும் நாவல்மரம்
எப்போதோ அழிந்தொதுங்கிய
நெட்டூரப்பொழுதின் வரவில்
வாழ்விழந்த மாதாவும் மௌனிக்க

இருப்பழியும் கரும் பொழுதொன்றில்
குருசு மரத்தடியில் சரியும் என்னுடலுக்கு
சாவு வந்ததாய்ச் சொல்வதற்கேனும்
என் கிராமத்தில் மனிதருண்டா?
இது"தமிழீழம்"கோசம் செய்த மோசம்?

நான் கனவுதரித்த கிராமம்
தின்னக் கொடுத்து வைக்காத உறவுகள்
பெருநாள் பொழுதொன்றில்
பெயர்த்தெறியப்பட்ட கிராமத்து இருப்பு


கருமேகம் பொழிய
காதல் வயலும் கதிர் முறிக்க
கால் வயிறு நிறைப்பாள் அன்னை
களித்திருப்போம் கஞ்சியில்
எனினும்,
கைக்கூலியாய் இருந்ததில்லைக்
களவும் செய்ததில்லை!

கோழித் "திருடனும்",
வாழைக் குலைக் "கள்ளனும்"
வாழ்வை விளக்குக் கம்பத்தில் தொலைக்கக்
கொலைஞர்கள் கூடிக் குலாவ
கோவணம் நிறைந்த கோடிகள்!

கொடுமை!
கொல்லைப் புறத்தில்
கன்னக் கோல் கொடும் பொழுதில்
கொலைகளை எண்ணக் கொம்ய+ட்டர்
"கிழக்கின் சுயநிர்ணயம்"
வழங்கும் வங்கிகள் நிறைய...

இப்போதெல்லாம் கிராமம் பட்ணத்தில்
சில்லறை கேட்டுத் தெருவில் தனித்தபடி
குற்றுயிர்கொண்ட குக் கிராமத்துத் திட நெஞ்சு
கூடின்றிக் குலையும்.
வன்னியிலும்
பாரிசிலும் இலண்டனிலும்
குருதிதோய்ந்த வலுக்கரங்கள்
வட்டியில் வயிறு வளர்க்கும்
வாழ்விழந்தது வடக்கும் கிழக்கும்.




24.11.2007

Keine Kommentare:

Kommentar veröffentlichen