தெருமுனைகளும்
தேசத்தை ஏலம் போடும்
கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்
நீ "ஈழவிடுதலை" என்கிறாயே அது என்வென்றுரைக்க முடியுமா?
மோதிய சுவரில் வழிந்தோடும் குருதியில் பட்டுவிலகும் தென்றல்
நாசித்துவராத்தோடு குருதிவெடில் சுமந்து
எனது உயிர்ப்புக்கு உப்பிடுகிறது
எனக்குள்ளும் இறந்தவர்கள்
கொன்றவர்களுக்குள்ளும்
கொலைகளை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்கள்
தேசத்தினது விடுதலையை மையப்படுத்தும் துப்பாக்கிவழி
எனக்கிருக்கும் உயிர்த்திருக்கும் உரிமை
எந்தத் தேசமும் தந்ததில்லை
அதைத் தருவதற்கு எவருக்கு உயிருரிமையாக்கப்பட்டது?
ஒட்டிய உடலொடு கஞ்சல்படும் உயிர் மொழியின் உரிமைக்கு உருமாகிறது
மொழியோ எனக்குள் இருப்பிழக்கிறது
அஞ்சல்படுத்தப்படும் மனித அழிப்புக்கு
உலகத்தின் பலபாகத்திலும் நியாயவோலை எழுதப்படுகிறது
மக்களின் நலனென்று கொலைகள் தீவிரமாக நடாத்தப்பட்ட
தெருமுனைகளும் தேசத்தை ஏலம் போடும் பொங்கு தமிழென
சாவதற்காய் உயிர்த்திருக்கும் அனைவரையும்போலவே
எனக்கும் உயிர் நிலைத்திருக்கு
எழுப்பப்படும் உயிரின் முனகலில் மரண வலி
கொலைகளின் தீவிரம் எதற்காக?
மரணம் நிச்சியப்படுத்தப்பட்ட பலிப்பீடத்துக்கு முன்னே
துப்பாக்கிகள் பிராத்தனை செய்கின்றன
தோத்திரம் உரைக்கும் எனது எஜமானர்கள் கைகளில் ஏசுவின் குருதி
கண்டடையப்படும் நியாயத்தின் வழி
விடுதலை எனக்குச் சாத்தியம் என்பவர்கள்
என்னைத் துரோகியென என்றோ கொன்றழித்தனர்
இதையும் விடுதலையின் நீதி என்கின்றனர்!
வாழ ஆசைப்படும் மெல்லிய விருப்புக்குத்
தேசத்தின் பெயரால் தியாகம்-வித்துடல் முன் நிறுத்தப்பட்டபின்
மரணங்கள் வழிபாட்டுக்கான தரிப்பிடங்களாகின்றன
கொலைகள் "ஈழப்போர்" எதிர் கருத்துக்குத் தீர்வாகிறது
போர் வாழ்வு புகழுடம்பின் புனிதமாகின தேசத்தில்
கொல்லப்படும் உயிர் கடைப்பொழுதிலும் வாழ்வுக்காக ஏங்கித்தொலைகிறது
அதையும் தேசவிடுதலைத் தியாகமென்று
உலகத் திண்ணைகளில் தேசியக் கொடியேற்றுகிறது பாசிசம்
கொல்லப்படுவதற்கு முன் கல்லறையின் முன்னே
கனத்த மனதுடன் குழந்தைகள் அணிவகுத்தபடி
வாழ்வுக்காய் ஏங்கிக்கிடக்கச் சில காட்டுமிராண்டிகள்
தமது கட்டளையைச் சுமக்கும்படி துப்பாக்கியால் சத்தியம் வேண்டுகிறார்கள்
கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்
ஈழம் விடுதலையாவதற்குள் குருதிச் சேற்றில் அமிழ
தமிழ்க் குறுந்தேசியம் என்னையும் உன்னையும் அண்மிக்கும்
ஈற்றில் இருவருக்கும் வேறு கல்லறைகள்
"துரோகி-தியாகி"என்று குருதியல் எழுதியும் வைக்கப்படும்
விடுதலை, சுதந்திரம், சுயநிர்ணயம்,தமிழீழம்
ஏகப் பிரதிநிதிகளின் வழியே பொங்கு தமிழாகப்பொங்க
கல்லாப் பெட்டிகள் நிரம்பும் தேசிய வர்த்தகத்தில் பணமாக
இல்லாத ஈழமோ பிணத்தால் நிரம்பி வழிய
21.06.2008
Keine Kommentare:
Kommentar veröffentlichen