Samstag, 24. Januar 2009

ஊழீ முதல்வனும்

எச்சங்கள்
அழித்தவொரு படுகையில்


திகழ் ஒளி நிலத்தில் சிந்த
விளங்கு பயிர் வான் நோக்கும்
எனினும்
எனக்கென்றொரு விடிவு இருண்டு கடந்தது
குப்பைக்குள் கிடக்கும் எனது எலும்புத்துண்டு
கோவணம் கட்டுகிறது வினை முடிப்பதற்கு
இது போதாத காலம்


மெலிய படுகையொன்றில்
தூங்குகிறது என் பாவம்!
பயிர் முளைத்தறியாத உவர் மண்ணாய்
மனங்கள் சில மனிதரின் பெயரில்
பெருங் கூச்சலுக்குள் கீறப்படும் கோடுகள்
அவை வளைந்தும் குறுகியும் குற்றப் பத்திரிகை தாங்கி



பொழுது புலரும்
போகும் நாளிகையும் மீண்டு வரும்
பொய் அறியாக் காலமும் கட்டுண்ட மனிதருக்காய் இரங்கும்
ஆனால்
மனிதன் நானோ மண்ணுக்குள் போய்விடினும்
மரணம் அறியாச் சிறு துகளாய்
மரணப் படுக்கையில் முள்ளாய்க் குற்றும் இருப்பு
எனது எலும்புத் துண்டம் எதிரில் தோன்ற


தோரணங்கள் துன்பித்துத் தொங்க
தூவும் மலர்ச் சொரிவும்
அர்ச்சனைக்கான அவசரத்துள்
ஆருக்கோ அபிஷேகம் அதற்கு அவஸ்த்தை


எச்சங்கள் அழித்தவொரு படுகையில்
நாளைய நிலை மறுப்பை நிச்சயிக்கச் சில முனைப்புகள்
எடுத்த எடுப்பில் சூரியனுக்குத் தூக்கு
ஊர் பெரியவரின் உதட்டில் உதிர்ந்தது உண்மை


கருத்தரித்த எனது இருப்பில்
பச்சை குத்திய முகங்களுக்கு எவருரிமை கொள்வார்?
வயற் பரப்பில் வட்டமிட்ட காகங்கள்
புழுக்களோடு மல்லுக் கட்டுகிறது
மண்பதத்தைச் செய்தவை புழுக்கள்!


தோப்பாக நின்றபோது நான் பெருங்காடாகவும்
தனிமரமாக நின்றபோது தடங்கலாகவும்
தெருவோரத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன
தறித்தெறிவதற்குத் தோதான கோடாரிக்கு
நானே முன்னொரு பொழுதில் காம்பாக இருந்திருக்கிறேன்


ஊழீ முதல்வனும் உயிர் தந்த ஆழீயும் எனக்குள் உறங்க
ஓரத்துக் கிளையில் முறிபடும் காலம்
ஈரத்தை மறைத்த இறங்காப் பொழிவில்
இதயத்தை இழக்கும்!


திகழ் ஒளி
நிலத்தினுள் சிந்தினும்
விளங்கு பயிர் வான் நோக்கினும்
விடியாத சில தேசங்கள்
எவனுக்கோ
முகமொன்று செய்து கடைவிரிக்கச்
சில காலிகள் தெருவெங்கும் ஒட்டுகிறது
களவாடிய எவன் அறி புலனை

ஸ்ரீரங்கன்
18.11.2007

Keine Kommentare:

Kommentar veröffentlichen