தோழனே,
துக்கித்திருக்கவும் முடியவில்லை;
துயர்கொள்வதற்காக அழவும் முடியவில்லை!
உன்னைப் போன்றவர்கள் பலரை நாம்
பாசிசத்தின் மடியில் ஏலவே இழந்துள்ளோம்.
அழிக்கப்பட்டவர்களில்
ஒருவனாய் ஆனாய்
ஆக்கத்துக்கு நீமட்டுமல்ல
பெயர் குறித்து எழுதமுடியாத அளவுக்குப்
பத்திரிகையாளர்கள் செயலிலிருக்கப் பலியாக்கப்பட்டனர்!
...நிர்மலராஜன்,சிவராமெனத் தொடர்ந்த
இந்தக் கதை பாதாளத்தில்
திசநாயகம்-ஜசீதரனைச் சிறிது சிறிதாகக் கொன்றபடி
உன்னில் படமெடுத்த கருநாகமாக மகிந்தா முகம் விரிகிறது
நாளை இன்னொரு பத்திரிகையாளனைப் பறிப்பதற்கு முன்
வஞ்சகத்தின் வழிகளைக் கண்டு வீதிக்கிறங்காதவர்கள்
வீடுகள்தோறும் மரணங்கள் விழும்
தேசத்தைத் திருடுகிற அந்நியர்கள் ஆட்டிப்படைக்கும்
மகிந்தா குடும்பத்துள் மலிந்தவை எல்லாம் கொலைகளே
மக்களுக்குச் சேவகம் எனும் போதகன்
தேசத்தின் தலையைக் கொய்து வழிந்த குருதியில்
சால்வையொன்றைத் துவைத்துக் கழுத்திலிட்ட கையோடு
போப்பாண்டவர் கால்களில் வீழ்ந்து
கொலைகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்ற முதற்கணமே
உன்னில் பரீட்சையை எழுத
ஒவ்வொன்றாகத் தலைகளை இனியும்
இலங்கை மக்கள் இழப்பதற்குக் கோத்தபத்தைகளும்
பிரபாகரச் சேனைகளும் கோடி தவமிருக்குங் கணங்களை
இரணமான உனது வீழ்ச்சியுள் காண்பதற்கு எவர்
மறுக்கின்றாரோ அவர் கொலைக் களத்தில் இன்னொரு பொழுதில்
காணாமற் போனதை எழுத ஒரு பேனாக்கூட
இலங்கை மண்ணுள் இருக்காது
வெள்ளைவேனும் வேஷ்டிக் கட்டும் கொல்லைப் புறத்திலிருந்து
கொல்வதற்குப் புலிகளென்ன சிங்கங்களென்ன
இரண்டினது கழுத்துகளில் மட்டுமே வெவ்வேறு அட்டைகள்!
ப.வி.ஸ்ரீரங்கன்
08.01.2009
Keine Kommentare:
Kommentar veröffentlichen