விடுதலையென
வெடித்துச் சிதறும்...
மெல்லத் தொலைத்துவிடும் உயிரும்
ஊனுமாகத் தமிழ் சொல்லிக் கருப்பையில்
எல்லோருக்கும் அளவில்லாக் கொலைகளில்
அடுத்தவன் சாவதென்ற நிம்மதி
எங்கப்பன் பிள்ளைகளில்லை
என்பிள்ளைகூட இங்குதானே?
இனியென்ன நமக்கென்றொரு நல்ல தேசம்
தமிழ் வாழ அவள் கருப்பைக்குள்
நீ மலர்ந்து நாடுகாணச் சாவது
சாவில்லை நித்திய வாழ்வின் கரு முகிழ்பென்று
இனிதாய் ஏற்று உயிராயுதமாவாய்
வெடித்துச் சிதறு
பொல்லாத"சிங்களவனை" ஓடோட விரட்ட!
அப்பாக்கள் ஆனவர்கள் எங்கள்-உங்கள்
உன்னதத் தலைவர்கள் உருவத்தில் எடைகூடிடினும்
உயிரைத் தமிழுக்காய் உருக்கும் நன்றிமிகு தலைவர்கள்
மேன்மை தகு மெல்லிய இதயத்தால்
சொல்லிய உங்கள் கனவுகளைச் சிரசைக் கொடுத்தும்
சில வருடங்களில் நிசப்படுத்த
மனித வெடிகுண்டாய் வெடித்துச் சிதறு!
தலைவர்கள்,தளபதிகள் இறப்பினும்
மனிதரை வதைக்கும்
சுரண்டும் அமைப்பும் சட்டதிட்டங்களும்
நிலைத்தே இருக்கும்!
ஒரு இரஞ்சன் போக
ஒன்பதுபேர்கள் பினல்னால் வந்தார்கள்
ஜே.ஆர் போக பிரமேதாசா பின்...
எத்தனை தலைமைகள்?
அமைப்பை மாற்றாத அடிதடியெல்லாம்
மக்களைக் கொல்வதற்கு வழியே தவிர
விடுதலைக்கானதல்ல
தழிச்சி கருப்பையில்
தவழும் தற்கொடைக் குண்டுகளே!
இன்னும் பல"மாவீரர்"தினங்களோடு
உளமாறக் கொண்டாட நாமிருக்கிறோம்
நம்புங்கள் நம் எதிர்கால மா-வீரர்களே!
நாற்றமடிக்கும் புதைகுழிகள்
யுத்தங்களின் மலட்டுத்தனத்தையும்
மையங்களில் கொட்டிக்கிடக்கும் மறைந்த நலன்களையும்
மறைத்துக்கொள்ள தேசியத்தின் பெயாரால்"வீரத்துக்கு"விழா எடுக்கும்
விடுதலையென வெடித்துச் சிதறும்!!!
விதைப்புக்கு இன்னும் தேடப்படும் மழலைகள்
விதைகளாய்மாற்றப்படும் ஒவ்வொரு நிமிடமும்
மனதுக்குள் அழுதுவடியும் சின்னக் கனவு
சில்லறைகளற்ற அம்மா மடியின் அந்தச் சுகத்தை!
தலைகள் தெறிக்கச் சாவு வந்து
தாய்மைக் கனவை உடைத்துக்கொள்ளும்
தமிழ் சொல்லும்
எல்லா வாய்களும்
தாலாட்டு மறந்து "ஒப்பாரி"சொல்லும் இனியெப்போதும்
இத்தனையாண்டுகள்
இலட்சம் தலைகளை உருட்டின பின்பும்
இதயம் மரத்த
இயக்க வாதம் இறப்பைத் தவிர
எதைத் தந்தது இந்தத் தேசத்தில்?
ப.வி.ஸ்ரீரங்கன்
01.12.2006
Keine Kommentare:
Kommentar veröffentlichen