Samstag, 24. Januar 2009

கிராமத்தின் துடிப்பில் வலுவிருக்கும்

அகதியாகி
அழியுங் காலம்


சத்தமில்லாதவொரு தெரு முடுக்கில்
தனித்தேயிருக்கும் பொழுதொன்றில்
ஊர்க் கனவு
மனது கனக்கும்


அந்நியன்
எச்சமிடும் நிலையிலும்
கொலை விழும் தரணத்திலும்
எனது தேசத்துக்
கிராமத்தின் துடிப்பில் வலுவிருக்கும்
வாழ்விருக்கும்


ஆத்தையின்
இடுப்பிலிருக்கும் நீர்க் குடமும்
அள்ளிய நீரும்
ஆச்சியின்
சோறூட்டும் சூம்பிய விரல்களும்
அப்புவின்
சுருட்டு மணமும்
அந்தச்
சாக்குக் கட்டில் குட்டித் தூக்கமும்
சித்திரை நிலவும்
சின்னமடுமாதாவின்
பூசை மணியும்
சங்கு ஊதியதற்காகவும்
தேவாரம் பாடியதற்காகவும்
வைரவர் கோவிலில்
ஐயரிட்ட பொங்கல் அழிந்த காலத்துள்
பதியமிட்ட உணர்வு


புகையிலைச் செடிகளின் மலர்ந்த இலைகளும்
மெளனமாய்க்
கொட்டும் பனியும்
இதற்குள்
மனசைப் பறிக்கும்


அணிலின் பாட்டும்
பனங்காய் வாசமும்
அவற்றைப் பந்தாடும் ஊர் மாடுகளும்
அணைக்க
மாமிமகள் மச்சினிச்சியும்...
இளையராசாவின்"மச்சானைப் பார்த்தீங்களா"ப் பாட்டும்...
என்னத்தைச் சொல்ல?


ஐரோப்பியச் சந்தையில்
அனைத்தையும் பெற்றும்
அம்மாவுக்கு "அடுப்பெரிக்க விறகு பொறுக்கும்"
அந்தச் சுகம் இல்லை


கட்டிய மாட்டுக்குப்
புல் செருக்கும் வலியும்
அன்றைய வதையினுள்
ஓன்றாய் விரியும்
இங்கே
அகதிய அழிவில் அதுவும் சுகமே



கால் நூற்றாண்டு கடந்தாலென்ன
இல்லைக்
கட்டை
வெந்து மண்ணாகினாலென்ன?
கள்ளிக்கும்
ஆமணக்குக்கும்
கதை சொன்ன அந்தக் காலம்
கண்ணீரில் படரும்


பட்டம் விட்டு
அண்ணனும் தம்பியுமாக
அள்ளிச் சுவைத்த அம்மாச் சோறு அமுதம்!


இப்போதும்
மனைவியுண்டு
மக்களுண்டு
வேலையுண்டு
காருண்டு
காசு உண்டு
ஆனால்இ
கண்ணீர்...

காலங்கள் கடந்திடினும்
கண்ணீரில் நிழலாடும்
என் முற்றம்!


முப்பாட்டன் வளர்த்த பனையும்
அப்பன் தோண்டிய கிணறும்
ஆத்தை அவிந்த சமையற் கட்டும்
அள்ளிச் சுவைத்த செம்பு நீரும்
ஓட்டைச் சயிக்கிளும்
புழுதி ஒழுங்கையும்
ஆடும்இமாடும் அந்த வீமாவும்
"உஞ்சு"என்பதற்குள் காலை நக்கும்;
இன்றும்
அழியாத கோலமாய்...


எத்தனை இரவுகள்?...


இடித்துக் கொட்டும் மழையும்
ஐப்பசிப் பெருநாளாய் மலரும் சின்னமடுமாதாவும்
சங்கானைஇ
சில்லாலை மக்களின் கூடார வண்டிலும்
குயிலின் கூவொலியும்
கும்மாளமிடும் சிறுசுகளும்
குழம்பில் அவியும் மீனும்
குத்தரிசிச் சோறும்
கொடிய வதையாய்
இதயம் வலிக்கும்


சிங்கராஜரின் அடுக்கு மொழியும்
அள்ளித் தரும் அருந் தமிழும்
மாதாவின் வளவுக்குள் அலைய
அம்மாவின் மடியில் தலை புதைக்கும் நான்!


அங்கேயும் இல்லை நான்
இங்கேயும் இல்லை நான்
அகப்பட்டது அகதியாய்...

அந்நியனாய் முகந்தொலைத்த
இந்தப் பொழுதில்
எள்ளி நகையாடும்
ஐரோப்பியக் குடியின் மிதப்பில்
என் தேசத்து வளமும் தாளமிட
கொல்லைப் புறத்து
கேடியரசியலின் கூசாத் தூக்கிகளும்
கேடான யுத்தப் பேரரசர்களும் பேசும் தீர்வுகளோ
நடாத்தும் யுத்தங்களோ
"அகதி"க்கு ஆட்சேர்க்கும்

அப்புவிடம்
குடியிருந்தது சொந்த முகம்
பேரனிடம்
வேருமில்லை விழுதுமில்லை
இதில் முகமிருக்கும் வேளை ஏது?


அகதியாய் ஓடி
அகதியாய் வாழ்ந்து
ஐரோப்பியத் தெருக்களில் சருகாய்ப் பறந்து
அள்ளப்படும் குப்பைகளோடு
முகமிழந்த இந்த முண்டமும்
ஒரு நாள் அள்ளப்படும்




27.09.2007

Keine Kommentare:

Kommentar veröffentlichen