குரைக்கும் நாய்!
நாயொன்று இருந்தவிடத்திலிருந்து
குரைத்தபடி கோடுகிழிக்கிறது.
எனது தேசத்தில் குழந்தைகள் போராட வெளிகிட்ட நேரம்
ஏழரைச் சனியனின் நேரம்
தொடர் தோல்வியில்
என் இரத்தம் இலங்கைத் தீவெங்கும் ஆற்றை உண்டாக்கியபடி
தேசத்தின் மடியில் தவழ்ந்த என் புதல்வர்கள்
தாம் நினைத்த காரியத்துக்காகச் சாகிறார்கள்
எனினும்,
என் தேசத்தின் பிதாவுக்குச் சூழலை மதிப்பிடும் தகமையில்லை
இவன் தந்தை
நடந்த புல் சரியாத நன்றியுடை நல்ல மனிதன்
நான்
இவனை"அவனே-இவனே"என்பேன்!
என் தேசம் மரணிக்கிறது
எனக்குள் குருதி உறைகிறது!
நான் பாடிய மாதாகோவில் குருசு மரம்
எனது பிணத்தால் கறை படும் ஒரு பொழுதில்
எனது பிணம்
என் தோட்டத்தில் புதைத்தாகணும்
அதற்காவேனும்
நான் என் தேசத்துக்காக மரித்தாகணும்!
விடுதலை!
வீரியமிக்க என் மழலைகளின் மரணத்தை
நான் தாங்க முடியாது
புலம்புகிறேன்!
"புலிகளுக்குக் கடுஞ் சேதம்"தினக்குரல் செய்தியைப் போடுகிறது!
என் கண்களில் நீர் தாரைதாரையாகச் சொரிகிறது.
இது எனது சுயம்!
என்னை
எனக்கே புரிய முடியவில்லை.
நான் புரட்சியை விரும்புகிறேன்
இதைவிட என் மழலைகளை
தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன்
அவர்கள்
அப்பனாகிய என்னை
அம்மாவாகி என்னைக் கொல்லலாம்
அதற்கு அவர்களுக்கு முழு உரிமையுண்டு!
தேசத்தின் கருத்தரிப்புக்குத்
தம்மை வித்தாக்கியவர்கள் அவர்கள்!!!
எனது மரணம்
அவர்களது தியாகத்தின் நீட்சியாகணும்
என் திடமான மரணம் தேசத்தின் வலுவுக்கு வீரியம் சேர்க்க
நான் அழிந்தேனும் அறிவைச் சொல்வேன்
என் குழந்தைகளின் படிப்புக்கு எதுவுமே சொல்லிக் கொடுக்கவில்லை
அவர்கள் பெறும் முட்டைகளில் நான் வெம்பிக் கொண்டாலும்
எனது தேசத்தின் குழந்தைகளின் உயிரின் விதைப்பில்
என்னை இழக்கிறேன்.
புரியாதவொரு புலத்தில் புலம்புகிறேன்
பெற்ற கல்வியில் தேசத்தின் விடிவைக் குறித்து நோகிறேன்
பெரிய கலைகள்,
பெரிய முறைமைகள்,
பெரிய தத்துவம் புரிந்த பொழுதுகள் ஏராளம்!
எனினும்,
என் மாதாவின் வயற்பரைப்பில் மரணத்தைக் கேட்கிறேன்
என் தேசத்தை நிர்மாணிக்கிற தேசத்துக் குழந்தைகளே,
போரிடுவென்று சொல்லேன்!!
கற்றுக் கொள்,
காலத்தை-நேரத்தை!
உனது தியாகம்
தேசத்தின் விடிவுக்கானதாவென்று
நீ
உணர்வதற்காய் கற்றுக்கொள்,கற்றுக்கொள்,
இன்னுமொருமுறை கற்றுக்கொள்!
நாயொன்று இருந்த இடத்திலிருந்து குரைத்தபடி
அது
எனது தேசத்தையும் குழந்தைகளையும் தின்னும் நோக்கில் குரைக்கிறது!
எனது கரங்களில் வலுவில்லை
கல்லெறிந்து வெருட்டுவது எனது நோக்கமில்லை
அதை மண்ணில் புதைப்பதே எனது நோக்கம்
நான்
வெறி பிடித்தவன்!
அறிவின் வெறி,
ஆணவமாய் இருக்காதெனினும்
அந்த வெறி
உலகத்தின் அறிதலை வெற்றி கொண்ட வெறி!!!
குரைக்கும் இழி நாய்
என் முன் மண்டியிடுவதல்ல என் நோக்கு!
அது கொண்ட அரசியலே
அழிவுக்கு வழி என் தேசத்துக் குழந்தைகளுக்கு,
இதை நீ
புரிக!
06.12.2007
Keine Kommentare:
Kommentar veröffentlichen