கண்ணுக்குள் வட்டமிடும்
பெற்றா-புறக்கோட்டை!
ஐ.பி. ரஞ்சன்
என்
சித்தப்பன் சிவராஜா
அவன் நிறுவனம்:
"பீப்பிள் ரேட் அன் சப்பிளைஸ்"
1983 ஜுலை 23.
சில நூறு பிணங்களைக்
கண்டேன் பெற்றாவில்!
சுருவில் சண்முகம் கம்பனியின்
இறக்குமதி-ஏற்றுமதி விண்ணன் சுந்தரலிங்கத்தை
ஜுலைக் கலவரம் தார்ப் பிப்பாவில் திணித்தபோது
நான் பூந்தோட்டவீதியில் ரஞ்சனின் ஜீப்பில்
நல்லதோ கிட்டதோ
ஐ.பி.ரஞ்சன் அன்று எனக்கு மேய்ப்பன்!
சில கணத்தின் கழிவில்
சோற்றுப் பார்சலுடன்
சிங்களத் தோழர்கள் மிதந்தார்கள் ஸ்டேஷனில்
ரஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க
சோற்றுப் பார்சலுடன் மல்லுக் கட்டிய பொழுது
ரத்கம ஸ்டோர் முதலாளிக்கு
அந்து ஊர்ப் பெயர் காத்தபோது
நாலு கோடி சொத்து எஞ்சியது இந்தக் கலவரத்துள்!
எனது அப்பனின் தம்பிக்கு
அந்தளவுகோடி தீயில் அமிழ்தது!
இன்னும் நெஞ்சில் வடுவாக அந்த நாள்.
நீ, மரணத்தைத் தியானித்துள்ளாயா?
சில முஸ்லீம்கள்-தெரிந்தவர்கள்
சிங்களவர்களாகத் தார்ப்பார் ஆடியதை
அன்று அனுபவித்தவன் நான்
கட்டுப்பத்தையில் பெட்டி சுமந்தவர்கள்
ஞானத்தின் தொலைக்காட்சிப் பெட்டிகளைச் சுமந்தார்கள்
என்னோடு புத்தகஞ் சுமந்தவர்கள் எதிரியாகிப்
போட்டுத் தாக்கியபோது
நானும் புரண்டேன் தமிழனென்பதால்
என்ன கொடுமையடா!
அன்றைய ஜுலையை நினைவு கூரும் நானோ
இன்றும் பல ஜுலையை எனது தேசமெங்கும் விதைத்தபடி
புலம் பெயர்ந்து எண்ணிக் கொள்வதில்
விமோசனமும் உண்டோ?
இன்றும்,
இதயத்தைத் தீனியாக்கும் அந்த ஜுலை 23!
ஜே.ஆர். மிக அழகாகத் திட்டமிட்டான்
பிரமதாசா நடாத்தி முடித்தான்
லீலாக் கலாண்டரின் சின்னத்துரை
மைந்தர்களோ பிரமதாசாவின் பேர்சனல் லோயர்கள்...
சுந்தரலிங்கம் மாண்ட கையோடு
அவன் தம்பி என்னை விடுவித்த நாலாம் மாடிக் கைது நினைவில்...
டினோஷன் ரேடிங் கம்பனியும்
லீலா சின்னத்துரை மகன் தனபாலாவின் தயவில்
இன்று எதையோ எழுதுகிறேன்.
ஜுலையின் வலி பெரியது
நான் அனுபவித்தவை...
நடு இராத்திரியில்
எனது மலக் குழியில் செலுத்தப்பட்ட
பொலீசின் ஆண்குறியின் தடிமனால்
எனது வலியும் ஜுலைதான்
கொல்லப்பட்டவர்களில் பலரை எனக்குத் தெரிந்தது
கொன்றவர்கள் பலரை நான் முஸ்லீமாக இனம் கண்டதும் உண்டு
எதற்கொடுத்தாலும் அழிந்தது ஒரு சமுதாயம்
என்னை ஒடுக்கியபடி
நான் ஓரத்தில் மௌனிக்கலாம்
வரலாறு மௌனித்தால்
எனக்குள் நெருப்பு எரியும்
தேசத்திலும் ஒரு இனம் எரியும்
இதுதான்
1983 ஜுலை 23.
ப.வி.ஸ்ரீரங்கன்
23.07.2008
Keine Kommentare:
Kommentar veröffentlichen