சுதந்திரம்!
மெல்லிய கூர்வாள்
கொடு நெஞ்சில் தைக்க
மெல்லவரும்பும் குருதி
கண்ணிமையெங்கும் தெறித்தொதுங்க
மெல்லச் சிரிக்கும் மனமும் உணர்வும் எனக்கில்லை!
எதிரியையும் வாழவிடு இந்த மண்ணில்!
அவன்(ள்)
தன் சுயத்தை மதிப்பீடு செய்வதற்கொரு வாய்பை
இல்லாதொழிக்க நீ யார்?
கொஞ்சும் மழலையையும்
கோலாச்சும் உன் நெட்டூரம்
குடல் தெறிக்கச் சிதறுகிறது.
எதற்காக?
எதிரியின் குழந்தையென்றா,
பிறப்பினுள் பெயர்த்து வைத்த
உயிரினிளுறைந்த இயக்கம் விரிந்து நின்றது?
அந்தவொரு புள்ளியில் மட்டும்
எவரும் தமது விறைத்த மூளையை உரசக் காணோம்
பின்னைய பொழுதொன்றில்
பேசிக் கொள்ளப்போகும்'பெரிசுகளின்'உலர்ந்த உதடுகள்
ஐயோ,ஆண்டவனே! என்பதாகமட்டுமிருக்கா!
குறிதவறிய கோணங்கள்
குதறிய புணத்தின் விறைத்த நெற்றியில்
விடுதலைப் பிரசுரம் ஒட்டிக்கொள்ளும்
நெஞ்சாங்கட்டைக்கு
நொடுந் தொலைவில் கிடக்கும் ஒரு கழித்தெறிந்த காகிதத்தை
தேடிச்செல்லும் சில கூட்டம்!
எடுப்பதற்கு யாருமற்ற பொழுதில்
அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும்,மாவும்
தின்னக் கொடுத்து வைக்காத மக்களைக் கனவு காண்கிறது தீவுக்குள்ளே.
உயர்ந்த பாதுகாப்பு
வலையங்களாகவும்,முள்கம்பிச் சிறைகளாகவும்
துப்பாக்கி மனிதர்களின் 'சித்திரங்களாக' உலகெங்கும்
மனிதவுடல்களில் கீறிப்பார்க்கிறது விடுதலை,
தேசப்பாதுகாப்பு-பயங்கரவாதத்துக்கெதிரான போர்,இன்னபிற!
ஒரு சிரட்டைத் தண்ணிக்கு அலையும்
தரித்திரத்துடன் 'விடுதலை'
மண்ணையுதைத்துத் தரையில் வீழ்கிறது
சுதந்திரமென்பது
நேற்றுப் பெய்த கொடு மழையில் அள்ளுப்பட்டது.
ப.வி.ஸ்ரீரங்கன்
18.10.2005
Keine Kommentare:
Kommentar veröffentlichen