Samstag, 24. Januar 2009

நுனி நாவுத் தாளலயம்

நான்
தத்வமஸி
அஹம் பிரஹ்மாஸ்மி!!!

என் தேடலுக்கான நேரம்
நீண்ட பொழுதின் மறைவுக்குள்ளேனும்
அந்தத் துளியைக் கண்டாக வேண்டும்
நடுச்சாமப் பொழுதொன்றில்
கிழித்தெறியப்பட்ட துவாரத்துள் குருதி கசியக்
கடுப்படையும் ஒரு சுவாசக் கணம்

எத்தனை அலறல்கள்
எப்படி நிகழ்ந்தோய்ந்திருந்தும்
ஒரு ப+ச்சிக் கனவுள் போட்டெடுத்த
நரம்புத் தடம் புதிதாய்...

நாவுத் துவாரத்து இடுக்களில்
மெல்லச் சிக்கிய உயிரின் முனைப்புகள்
கொன்றுவிட்ட முழுமுதற்கணங்களும்
மௌனித்த திருப்தியில் மடிந்தோய்ந்த சுருதி

முதற்கட்டம்
இடைக்கட்டம்
கடைக்கட்டம்

சந்தர்ப்பவாதக் கிருமிகளின்
பல் முனைத் தாக்குதலுக்கு
இலக்காகிய பந்துக்குள்
உயிர்த்திருக்கும் காற்று
இன்னொரு பொழுதில் இறைக்கை விரிக்கும்

அந்தப் பொழுதுக்கு முன்னான இந்தக் கோலத்துள்
வலிந்தெதிர்க்கும் துணிக்கைகளுக்காகத் தானும் வீங்கி
தான் கொண்ட தடங்களையும் நோகடிக்கும்
நிண நீர் முடிச்சவிழ்க்கும் செயற்றிறனோ
கருங்காலிச் செயல்

மூட்டு வலிகளாய் பெருக்கெடுக்கும்
வைரசு மகாராசாவுக்கு
வற்றாத வெறி
போட்டுத் தாக்குவதற்கு
இந்தப் பொழுதில் ஒரு துரும்பும் இல்லை
இனியாவது பிறந்து காண்
என் பின் தடமே!

மெல்லப் பெருத்த தொந்தியும்
பத்திலொரு பாகத்தை இழக்க
பருதவிக்கும் சாக்குப் பையோ
சல்மோனால
கோலிற்றிசுக்களால் நிரம்பி வழியும்

அதையும் தாங்கி அற்பக் காரியத்துள்
அகதியாய் அலையும் மனமும்
அடுத்த காண்டம் குறித்த பேரச்சத்துள்
அசையாத வடுக்களைச் சுமக்க மறுக்கும்

ஆங்காங்கே உப்பி விரியும்
தோற் கட்டிகள்
தோல்வியின் கயிற்றில்
ஊஞ்சிலிட மறுக்கும் ஆன்மாவைச் சிதைக்கும்

தெரிவுகளற்ற ஒரு கனாக்காலம்
தெருவெங்கும் தோரணை கட்டும் இளமிடுக்கை
எப்பவோ இழந்த உணர்வும்
இருப்பதற்கான வெளியைத் தேடியலையும்

மெல்லத் திசையிழக்கும் அந்த விழிகளும்
ஆரத்தழுவும் ஆத்தையின் அந்தத் திசையை
உணர்வதற்குள் மூர்ச்சையாகும்
ஒரு நாட்பொழுதில்

பெரு விருப்பில் இனித்தவை
இதயப் பரப்பெங்கும் எழுதிவைத்த
"அழகு-இடுப்பளவு-மார்பழகு"
நீரிழந்த கண்மாய்த் தரையாய்
குறுக்கும் நெடுக்குமாகச் சிதறி வெடிக்க

சில்லறையைக் காவுகொண்ட தாய்லாந்தும்
இருஷ்சியாவும்
இருமேனியாவும் இன்னும் சில தேசத்துச் சிற்பங்களும்
மெல்ல உயிர் தின்ற வேற்று வாசிகளாய்

"........................"
"??????????????????"

வேறுபடும் கலர்களையெல்லாம் புகுந்து பாhக்கும்
பேரவாப் பொழுதுகளின் "பரம் பொருளே"
நின் தரிசனம்
இன்னும் விளங்க மறுக்கும்
உன் மடிப்புச் சொண்டில்
நுனி நாவுத் தாளலயம்
இன்னும் வலுத்துக் கொள்ளும்!

நான்
நான்
நான்
தத்வமஸி
அஹம் பிரஹ்மாஸ்மி!!!

ப.வி.ஸ்ரீரங்கன்
02.09.2007
0.40 மணி.

Keine Kommentare:

Kommentar veröffentlichen