வாகரைக்கும் வந்தது யுத்தப் பேய்
விடுதலை சொல்லி,
கோரப் பல்லில் குருதி சொட்ட
கொக்கரிக்கும் யுத்த ஆண்டாம் 2007.
புலியும்,சிங்கமும் கும்மியடிக்க
பசியும் பிணியும் மக்களையண்டக் கொலையும் குருதியும்
தேசியச் செல்வமாய் இலங்கைத் தேசம்.
காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம்
புரிந்துணர்வு,புண்ணாக்கு...
இந்தக் கோலத்தில்
உலகத்துத் தமிழர்கள்
ஓன்றுகூடித் தந்துதவட்டாம் தங்கம் வெள்ளி
தமிழீழம் காண்பதற்கு.
தரங்கெட்டவர்களே,
தற்குறிகளே,
மக்களை வதைக்கும்
யுத்தப் பிரபுக்களே!
அதோ பாருங்கள்,
அந்தோ அப்பாவிகள் அகதியாகி அழியும் விளிம்பில்!
ஆருக்கடா வேணும்
அகதிக் காண்டம்?
எவனுக்கெடா வேணும்
வெற்று மண்?
மக்களைத் தின்னும்
யுத்தப் பேய்களுக்கு
உயிரின் மதிப்புப் பூச்சியம்தான்.
தமிழீழம்!
...ம்...
இதைச் சொல்லியே
இன்றுவரை மக்களின் தலைகளை உருட்டும்
ஊருப்பட்ட புலையர்கள்
மக்கள்,மக்களென்று
தம்மக்கள் சுகத்துக்கு வழிகண்டார் நம் வேதனையில்,
வந்ததே சனியன் நமக்கு ஈழமென்று குரைத்தபடி!
பிறகென்ன?
மெல்லச் சுற்றி மேனியும் ப+ரிக்க
புதுவுலகத் தந்தையென்றும்,
தேசியத்தின் காவலலென்றும்,
அவன் காலத்தில் வாழக் கொடுத்தேனென்றும்
வாயாறப் பொய்யை அவிழ்த்து
வளத்தைப் பெருக்க
ஈழமே தாகமென்க!
வடக்கு என்றும்
கிழக்கு என்றும் பேசியது போய்
கோணமலையும் மாகாணமென்று
முத்தேசமானது நம் முன்னோர் மண்ணும்.
மூப்படைய மறுக்கும் ஆயுதக் கூட்டம்
அகதிப் பெருக்கத்தின் ஆணிவேராய்...
அண்டம் பெரிதுதான்
ஆனாலும் அகதிகளுக்கு அண்டுவதற்கும் ஒரு குடிலில்லை
வாகரைக்கு வந்தது யுத்தப் பேய்
வாழ்ந்தவர்கள் வதங்கி அகதியாக,
பொல்லாத கூட்டமொன்று
இதையும் பொடிவைத்துப்
பொழுதெல்லாம் மறைப்பிட்டுத்
தேசத்தின் விடுதலைக்கு
வேள்வியொன்றைச் செய்கிறது
மக்களின் வேதனையில்.
படுபவர்கள்
தேசியத்தின் குத்தகைக்காரரில்லை!
பாழ்பட்டுப் போவதும் அவர் வாழ்வில்லை
வதைபட்டுயிர் விடுபவரும்
அவர்கள் சொந்தமில்லை.
சொல்லுங்கள் இன்னும்
ஈழம் எங்கள் தாகமென்று!
இடிவிழாதோ இவர்கட்கு?
இத்தனையழிவிலும் இன்னும் ரீல்விடும் தேசியப் பொய்யர்கள்
ஈழமாம்,ஈழம்!!
2006.டிசெம்பர் 25
Keine Kommentare:
Kommentar veröffentlichen