கோயிலும்
கொழுத்த வரும்படியும்
எந்தத் திசையை நோக்கினும்
மடமையும்,ஏமாற்றும் கோசங்கள்
நிறைந்த கள்ளத்தனங்கள்,
கதைகளாய் நம்முள் கொட்டப்படும்
தீயவர்களின் தெருக் கூத்துக்கள் கோயிலாய் எழ
பல்லாயிரம் ஆண்டுகள் மடிந்தொழிந்து போயினும்
புதுப்பிக்கும் ஒவ்வொரு தரணத்திலும்
எங்கள் சாவின் சாயலே முகத்திரையில் ஓங்கியுதைக்கிறது!
வர்ணத்தைத் தர்மமாக்கிய வதைஞர்கள்
வழிபாட்டுத்தலமென்று
வக்கரித்த அழிவுகளைக் கண்களில் தூவி
வருமானத்தை உறுதிப்படுத்த
வாழ்வு மீண்டும்
வர்ணச் சாணத்தால் நாற்றமெடுக்கும்
அதுவும் பேரானந்தமென்றும்
பேரவாவென்றும்
பாரீசிலும்,இலண்டனிலும்,ஜெர்மனியிலும்
தேரிழுக்கத் தெருப் பார்த்துத்
தமிழரைப் பிடுங்கும் ஒரு கூட்டம்
நேற்றிக் கடனென்று
நெருப்பில் வெந்த சில்லறைகளைக் காவு கொடுத்துத்
தலையில் குட்டு வைக்கும் சீமாட்டியாய்
அகதிப் பெண்டிரும் அய்ரோப்பியத் தெருவில்...
அழிவார்!
ஆறறிவு படைத்ததாய்ச் சொல்லும் அதே பொழுதில்
அடுப்பெரிக்கும் மரக்கட்டையாய்
பார்ப்பானின் காலடியில் சாம்பலாய் மாற
மடி கனக்கும் அவனோ
மாளிகைகள் கட்டி
நடுவீட்டில் ஊஞ்சலில் தவமிருக்கும் பொழுதாய் காலம் நகர
நாமோ இதழ் வெடிக்கும்
பனிக் குளிரைக் குடித்து
விரல் விறைக்கத் தெருக்கூட்டிய பணத்தில்
பார்ப்பானுக்குப் படியளக்க
பாரீசில் தேர்ப்பவனி வருகிறார் கணபதியார்,
காம் நகரில் அம்பாளில் கலையேற
இலண்டனில் ஈழேஸ்வரர் வருடத்துக்கு ஏழு இலட்சம் பவுண்களை
ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க
எடடா சாமிக்குப் பிரதட்டை என் தமிழா!
25.09.2006
Keine Kommentare:
Kommentar veröffentlichen