Samstag, 24. Januar 2009

ஒதுங்குக ஓரமாய்

அரசியல்சாரா
"என்னை"
அரசியலாக்காதீர்கள்!

"அரசியல் சாராததென்பதும் அரசியல் சார்ந்ததே!"
அரசியலின்றி அணுவும் இல்லை
அதுதரும் ஒளியுமில்லை-அழிவுமில்லை
எப்பெப்ப ஏது எழுதிடினும் இருப்பது அரசியல்தான்
நான் என்பதன் திரட்சியே
உடலின் அரசியலையும்
உளத்தின் அதுசார்ந்த கருவுருவையும்
புற நிலையின் தன்மையே
"நான்"என்பதையுஞ் சொல்லி
எனதென்பதையும் காட்டி
அதுதாண்டிச் செயலையும் தூண்டி
"எப்படியும்"எழுதத் தூண்டுவதால்
அங்கேயும்"அப்பன் அரசியல்"
அமர்ந்திருந்து அழுத்தி
ஐந்து ருபாய்க்கு அப்பம் வேண்டும்போதும்
அரசியலாய் வந்துவிடுகிறது!

பெரியாரியமென்பது
அரசியலற்ற நிலவினது
(ஓ... நிலவின் நிலத்தைக்கூட விற்றிருக்கிறார்கள்,
அதையும் அமெரிக்க "அப்பன்கள்" வேண்டியுமிருக்கு...) நீட்சியல்ல

நீட்டிமுடக்கும் ஒவ்வொரு சொல்லும்
அரசியலின் அடுத்த நகர்வைச் சொல்பவை
"பெரியார்"என்பதே அரசியல்தான்
அங்கேயும் அடுக்கப்பட்ட
ஒவ்வொரு கல்லும் அரசியலை உரிப்பதற்கே

விழிப்புணர்வென்பதன்
உட்புறஞ்செரியும் உருவம் என்ன?
அதைச் சொல்லும் அரசியலும்
நிலவும் அரசியலின் அடுக்குகளுக்கு ஆராவாரம்
அள்ளித் தெளித்து
கக்கத்தில் வைக்கும்"அரசியல் சாரச் செயற்பாடு" என்றும்
அடுத்தவருக்குச் சொல்லும் அவசரத்தில்
"பெரியாரியம்"அரசிலின்றி இருந்தால்
அடுப்பு ஊதவும் அருகதையின்றி
அழிந்தொழிந்து அக்கிரகாரத்து
அடுகளையுள் அள்ளிய சருகாய் கிடந்திருக்கும்!

அறிக!
அரசியலறிவற்று
அரசியல் பேசும்
அன்புநிறை அகப் புரட்சியார்களே-
பெரியாரிய விழிப்புணர்வுப் விழுப் புண் வீரர்களே!!

அரசியலுக்கு
அடித்தளம் பொருள்
அது தரும் வறுமைக்கு
சட்டம் சொல்லுஞ் தனியுடமை
அப்பவும் வரும்
அடக்குவதற்காய் ஆயிரம் படை மதமென்றும்

மண்ணென்றும் மோட்ஷமென்றும்
இப்பவும் சொல்வோம்
"அரசியலற்ற-எந்த அரசிலுமற்றென்னை
உங்கள் அரசிலுக்குள் தள்ளீ
அடக்கப் பார்க்காதீர்கள்"
"பெரியார்" எவரது என்போம்?
அரசியல் அற்றிருந்தால்
மார்க்ஸ்-காந்தி மற்றும் பல புள்ளிகளும்
பாருக்குள் பண்டியாய் இருந்திருப்பர்
அந்த அரசியல் சாராதிருந்தால்!!

பகக்தில் பாம்பு வருங்கால்
படபடக்கும் உணர்வுக்குள்ளும்
பொருள் சார்ந்த எண்ணம் கண்டீர்!
போரிடடும் தருணமே
காரணத்துக் காரியத்துக்கும்
முடிச்சிடும் முன்னைய புரிவில்
மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே!
உங்களைச் சொல்லி"அரசியல்"செய்யும் அரசியலும்
அரசியலில்லை அரசியல் இல்லை(!!!???)

அப்போதெதற்கு நான்
வார்த்தைகளை அடுக்கி
வம்பு பேசுகிறேன்?

அரசியல் சாரா "என்னை"
அரசியலாக்க "ஒரு கூட்டமே" அலைகிறது
அது ஒதுங்குக ஓரமாய் இப்போது
என் "வாடகை" வீட்டுக்கான நிலவரியை கட்டுவதற்கு
நான்
பேரூந்துக்கு "ரிக்கற்" எடுக்கக் காசு இல்லை!!


ப.வி.ஸ்ரீரங்கன்
07.10.2007

Keine Kommentare:

Kommentar veröffentlichen