நான் மனிதப் பிணங்களின் மீதிருந்து
தேசியப் படையலிட்டேன்
என் தேசக் கன்னிக்கு
அவள் திரண்டு முறுகி வளர்ந்திட்டபோது
என் தேவைக்காக இன்னொரு தியாகத்திற்குத் தயாரகிடும் படி
தேசமக்களைச் சில பிணங்களுடாய்த் திரட்டிக் கொண்டேன்
பால்கொடுத்த மார்புக்காம்பு உலர்வதற்குள்
பிள்ளையைப் பறிகொடுத்த தாயொருத்தி என்னைத் திட்டித் தீர்த்தாள்
வீட்டுக்கொரு போராளியற்ற வீடுகளெல்லாம் நாட்டுக்குத் தேவையற்றெதன அவளுக்குச் சொல்வேன்
என் கிளிதட்டு விளையாட்டில்
ஆத்தை அப்பனையிழந்த அநாதைகளை
அடுத்த வேள்விக்காய் அநாதையென்ற நாமம் தவிர்த்து
ஆசையாய் அன்பாய் தேசியப் பாலூட்டி வளர்த்தபோது
பூனையாய் வந்த சுனாமி கவ்விச் சென்றது.
அறுப்புக்கு வளர்த்த என் கிடாய்கள்
கட்டறுத்துத் தனி வழிபோன பின் நான் மெலிந்து விட்டேன்
என்னைச் சொல்லித் தேசமும்
தேசத்தைச் சொல்லி நானும் இரண்டறக் கலந்து புனிதமானதில்
நான் தொலைத்தது எதுவுமில்லை
என்றபோதும்
மக்கள் இன்னும் என்னைக் காத்தபடிதாம்!
இதுதாம் தேசப்பற்று.
இன்னொரு சுனாமியுள் கைப்பிடி மண்ணாய்க் கரையக் காத்துக்கிடக்குமொரு தேசத்தில்
நான்-நீயென்றுவேறு உரிமையிட
அந்த மாபெரும் அரக்கி விட்டுவிடாள்போலத்தாமிருக்கு.
காடுகளுக்குள் விறகுவெட்டிச் சோறுண்ணும் கூட்டத்துக்கு
புலப்பெயர்வின் புதிய வாரீசுகள் வாலை முறுக்கி
தேசியச் சவாரியிட
சாவதென்னவோ அந்தக் காட்டுவாசிகள்தானே!
நான் மௌனித்திருப்பதால்
எனது குரலாகப் பல வர்ணக் காகிதங்கள் முளைப்பதில்
எனக்கெதுவும் பாதகமில்லை
ஆனால்
என் பெயர் சொல்லிச் சில சில்லறைகள் தாள்களாக மாறுவது எனக்குத்தாம் ஆபத்து.
எதுவும் தெரியாத பொழுதொன்றில்
எனக்குத் தெரிந்து மொழியுனூடாய்ப் பேசுவதொன்றும்
எனக்குக் கடினமானதில்லையென்பதால் இது நோகத்தக்கதல்ல.
என் மொழியின் வீச்சில் உதிருமந்தச் சருகுகளை
இன்று போய் நாளை வாவென்பேன்
அதுவரையும்
பேசுங்கோ அன்புத் தம்பிகளா பேசுங்கோ
அண்ணாவின் அருமையையும்
அந்த ஆத்தாளின் அழுகையையும்
ஒருதட்டில் நெறுத்தபடி.
31.03.2005
வூப்பெற்றால்
ஜேர்மனி
ப.வி.ஸ்ரீரங்கன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen