நட்பு,சொந்தஞ் சொல்லி வருபவருக்கு
கேட்பதைக் கொடுத்து உறவைக் காத்துவிடு.
உனது "கடன் பட்ட நெஞ்சு" கலங்கிக் கரையும்போது
உன்னை விட்டகன்ற தடங்களின் பின்னே
வெறித்துப் பார்ப்பதைத்தவிர
உன்னால் என்ன செய்ய முடியும்?
இருபது ஆண்டுக்கு முன்
தங்கையின் "பட்டப்படிப்பு வெற்றிக்கு" (ப்) பரிசு அளிக்க
கவிஞ நண்பனுக்கு நீ கடன் கொடுத்தாய்,
சில ஆயிரம்டொச்சு மார்க்கோடு அவனது கவிதை முகமும் கலைந்துபோச்சு!
வேலையிழப்பு நஷ்ட ஈட்டுப் பணத்தைக் கண்டபோது
கை நீட்டியவர்களை நீ மறக்கவில்லை!
நீட்டிய கையை நிறைத்தே உனது அந்த 24000 யூரோவும்
கரைந்து காணாமற் போச்சு!
அண்ணனுக்குத் தம்பிக்கு,மாமாவுக்கு மச்சாளுக்கென...
இப்போ, உனக்குக் கடன் தந்த சிற்றி பேங்கோ
உன்னை விட்டு விடுவாதாகவில்லை! நீ,கவிஞனின்
இருபதாண்டு ஏமாற்றையும் கண்டுகொள்ளவில்லை!,
வேண்டியபோது சிரித்த முகங்களை மீள மீள
ஆற்றிலிட்டுக் குளத்திற் தேடுவதாக...
வேண்டியவர்கள் மீளத் தருவதை மறந்தார்.
வேதனைப்பட வைக்கும் வங்கிக் கடனோ
வேலைக்குப் போகும் காரையும் விட்டுவைக்காதவொரு சூழலுள்
வேடிக்கை மனிதராகிறாய் நீ!
வேதனைப்படாதே!
உனக்கென்றொரு காலம் வரும்.
கடன் பட்ட(வங்கியில்) நெஞ்சு காயந்து போகாதவரை
உடல் உழைத்துக்கொண்டிருக்கும்.
உப்பிட்டாய்-நட்பை,உறவை உயிரென்றாய்
பணத்துக்கு முன் இவை செல்லாக் காசென்று
உரைக்கின்ற காலத்துள்உன்னைக் கைவிட்டவர்களுக்கு
என்ன பெயரடா பாட்டாளி?
உழைத்துக்கொண்டு ஓடாகு,
ஒரு நாள் ஓய்ந்து நீண்ட தூக்கத்துக்கு
ஒத்திகை பார்க்கவாவது இந்த உறவுகள்
உன் இதயத்துள் ஏதோவொரு மூலையில்
எதையாவது கிறுக்கட்டுமே!
ஸ்ரீரங்கன்
21.04.2012
Keine Kommentare:
Kommentar veröffentlichen