Samstag, 21. April 2012

கஷ்டம் உனக்கு இல்லை:மற்றவர்கட்கு மட்டுமே!

உன்னிடம் இல்லாதபோதும்
நட்பு,சொந்தஞ் சொல்லி வருபவருக்கு
கேட்பதைக் கொடுத்து உறவைக் காத்துவிடு.
உனது "கடன் பட்ட நெஞ்சு" கலங்கிக் கரையும்போது
உன்னை விட்டகன்ற தடங்களின் பின்னே
வெறித்துப் பார்ப்பதைத்தவிர
உன்னால் என்ன செய்ய முடியும்?

இருபது ஆண்டுக்கு முன்
தங்கையின் "பட்டப்படிப்பு வெற்றிக்கு" (ப்) பரிசு அளிக்க
கவிஞ நண்பனுக்கு நீ கடன் கொடுத்தாய்,
சில ஆயிரம்டொச்சு மார்க்கோடு அவனது கவிதை முகமும் கலைந்துபோச்சு!

வேலையிழப்பு நஷ்ட ஈட்டுப் பணத்தைக் கண்டபோது
கை நீட்டியவர்களை நீ மறக்கவில்லை!
நீட்டிய கையை நிறைத்தே உனது அந்த 24000 யூரோவும்
கரைந்து காணாமற் போச்சு!

அண்ணனுக்குத் தம்பிக்கு,மாமாவுக்கு மச்சாளுக்கென...





இப்போ, உனக்குக் கடன் தந்த சிற்றி பேங்கோ
உன்னை விட்டு விடுவாதாகவில்லை! நீ,கவிஞனின்
இருபதாண்டு ஏமாற்றையும் கண்டுகொள்ளவில்லை!,
வேண்டியபோது சிரித்த முகங்களை மீள மீள
ஆற்றிலிட்டுக் குளத்திற் தேடுவதாக...

வேண்டியவர்கள் மீளத் தருவதை மறந்தார்.

வேதனைப்பட வைக்கும் வங்கிக் கடனோ
வேலைக்குப் போகும் காரையும் விட்டுவைக்காதவொரு சூழலுள்
வேடிக்கை மனிதராகிறாய் நீ!

வேதனைப்படாதே!
உனக்கென்றொரு காலம் வரும்.
கடன் பட்ட(வங்கியில்) நெஞ்சு காயந்து போகாதவரை
உடல் உழைத்துக்கொண்டிருக்கும்.

உப்பிட்டாய்-நட்பை,உறவை உயிரென்றாய்
பணத்துக்கு முன் இவை செல்லாக் காசென்று
உரைக்கின்ற காலத்துள்உன்னைக் கைவிட்டவர்களுக்கு
என்ன பெயரடா பாட்டாளி?

உழைத்துக்கொண்டு ஓடாகு,
ஒரு நாள் ஓய்ந்து நீண்ட தூக்கத்துக்கு
ஒத்திகை பார்க்கவாவது இந்த உறவுகள்
உன் இதயத்துள் ஏதோவொரு மூலையில்
எதையாவது கிறுக்கட்டுமே!


ஸ்ரீரங்கன்
21.04.2012


Freitag, 19. August 2011

தூக்கிலிடுங்கள்!

தூக்கிலிடுங்கள்!

உங்கள் அனைவரையும்
என் விழிகளால் பார்க்கிறேன்
என் செவிவழி உங்கள் குரல்களை கேட்கிறேன்
உங்களோடு என் வாயினூடாக உரையாடுகிறேன்
உங்கள் வார்த்தைகள் எனது எதிரொலியாகின்றன

நீங்கள் மறுதலிக்கக் கூடும்
எழுதாத கதைகள் உங்கள் பக்கத்திலே
எழுதப்பட்ட கதைகளாக
புரட்டப்படாத பக்கங்களாக அவை இருக்கும்வரை...



நான் கதைகளைத் தேடிக்கொண்டே இருக்கிறேன்
அவை உங்கள் முடிவுகளைக் கொண்டிருப்பதால்
எனினும்,உங்கள் ஆரம்பத்தை நான் தரிசிக்கிறேன்
பழையனவற்றுள்ளும் புதியனவற்றுள்ளும்!

உங்களை வாசித்து விடுகிறேன்
எகிறப்பட்ட காலத்துள் ஏதோவொரு சஞ்சலத்துடன்
பக்கங்கள் எதையுமே நான் புரட்டாமல்!
எல்லாப் பக்கங்களிலிருந்தும் உங்களை அழித்து விடுவதில்
தேசத்தினது திரண்ட ஞானத்தைத் தரிசிக்கிறேன்

உங்களது செய்கையோடு கூடிய
ஏற்கப்படாத நடாத்தையின்பால்
என் எற்கப்படாத மரணத்தை
உங்களுக்குள் தருவிப்பதில் முடிவுறாத வினைகள்
தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
19.08.2011

Mittwoch, 17. August 2011

கழுவேறாக் கன்னி_Pratibha Patil

கழுவேறாக் கன்னி

மற்றும் தொடர்பாடு எவன்கொல்"தூக்கு" அறுக்கல்
உற்றார்க்கு உடன்பகை அவை உள்வழி ஆரிய-திராவிட
பற்றா வினையாய் பலபல சூழ்ச்சிகள்
அற்றாய் உழலும் சாணாக்கியனும்
தென் நாட்டு வேந்தாய் இன்று வேடம் புனைந்து


வித்தகர் செய்த விலங்கொடு வீழ்ந்து
மற்றவர் செய்வினைக்கு வீணாய் மயங்கி
பாமரர் மாண்பு அழிதல் காண் நெஞ்சே!
எய்தவர் இருந்து நீடூ நிலை எய்யுமவர்
அம்புக்கு நாண்கள் பலியாய்க் கொடுப்பதென்னே!



பிரதீபாப் பட்டீல்"அம்மணீ" அரிய தருவே
மத்தக மாண்பு அழிதல் காண்வாழி "மேடம்"!
ஆரிய வினைபல விதியாலே அன்று சௌவீர புரமும்
இன்று தென்கோடித் பெரும்பற்றப்புலியூர் அண்டிய
தெருவும்வேறு யாக்கை ஆகி நர பலி எடுப்பாயோ?


ஈழமெனப் பொருதல் செய்வினைப் பயனென
கெட்டோம் இதுஎம் நிலை என்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகுபவர் சுற்றம்
கெட்டது சொல்லி பெரிது இகழ்ந்து ஆற்றவும்
எட்ட வந்து தூக்கிலிட இசைந்து நிற்பவே!


பாளையாம் தன்மை அழித்தும்
பாலனாம் தன்மை கொன்றும் திராவிடக்
காளையாம் தன்மை இகழ்ந்தும்
காமுறும் இளமை விலத்தியும் ஈழமாய் வாழ்ந்து
ஆரியப் பயனுள் நமக்குள் நாம் அழிந்தே போனாம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.08.2011

Samstag, 13. August 2011

வஞ்சகக் கள்வர்.

வஞ்சகக் கள்வர்.

அறிவு-ஆய்வு பிறிதாகியது அழி புலித் தேசமென
செவிஅகம் புகூச் சென்ற புலிப் பாசிசமும்
தனி ஊழ் வினைகொள் விடிவெனப் பகிர்ந்து
சூரியதேவன் ஆம் எனச் சொல்லி
துன்னலன் தூபி எழத் துவண்ட கூட்டம்!

பிளந்த சிரம் மறுத்துத் துயில் விரித்து
போற்றிப் புகழ்ந்த நாவு அகழ் குழியுள் அடை காக்க
அழிந்தவன் அவித்த ஜனக்கூட்டம் போரிடை
முள்தரிக் கம்பியும் இடை இருள் யாமத்து இருந்தார்,
மங்கோல் காட்டி மடியவிட்டார் என் ஜாதியை!-தூ...


"செய் வினை-சூனியம் கில்லி யாழ்ப்பாணியச்
சாபம் கொல்லோ?திப்பிய ஊழியம் கொல்லோ?
எய்யா இழவு கண்டு மையலேன் யான்!"-இன்றும்!
ஊழிக் கூத்தன் முள் எயிற்று சன்னம்
அருந்த ஏமாந்த ஆர் திராவிடவுயிர் உதிர்ந்து.

பால்குடி,பெண்டிர் முதலெனக் காவு கொள்
தேசியம் சீண்ட எல்லாளப் புரட்டல் போனது
இடம் மறுத்து எங்கோ ஏதோவென.
இலட்சம் இரண்டா மூன்றோவெனக் கணக்கற்ற
சிரசுகள் தெறிக்கத் துவண்டனர் என் கூட்டத்துக் குழாம்!

ஆடலும் பாடலும் ஆயுதமும் காட்டி
கறந்த பொன் கோடி கோடி கொண்டோர்
புலிக் கோவேந்தர் ஆனகதை யாரறிவார் அச்சோவே?
பண்ணிசைச் செம் மொழி உயிரெனச் சொல்ல
பாடினர் பண்டிதர் ஊழ்வினை மறுத்து உயர்வென

புலித் தேசம் "ஈழம்" பொய்யாகிக் கொல்வினை கூட வரவே
திராவிடத்தார் கல் தோன்றி மன் தோன்றிய பின்னும்
பல்மன் பல்தேசச் சரிவில் ஏதிலி பூண்டு சாவலி கொண்டார்
தலித்தென்றும்,பைபிள்-கூர் ஆன் காவி கோவணத்தையும் கொடுத்தார்
பாத்திரம் ஏந்திய பண்டய கர்ண தேசப் பாவையைக் கண்டு!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
13.08.2011

Freitag, 12. März 2010

ஈசன் எந்தை டக்ளஸ் வள்ளல்

சாவோலை
கொண்டொருவன்...



மக்கள் சேவைதான்
மகத்தானதென்றேல்-அஃது
அமைச்சரெனுங் கருந்தவப் பேறில்
ஆட்காட்டிச் செய் தவம்-கொலையின்றேல்
கொல்வதெனப் போற்றி


ஈசன் எந்தை டக்ளஸ் வள்ளல்
இருப்பிட உப்பிட உறவிடவெனப் பகர
ஒரு பிடி மண்ணில் எல்லாந் தொலைத்த
உயிர்பிடி இனத்தின் வேரறு மண்ணாய்


மேதமை மெய்மை மேலெனச் சொல்லி
வள்ளல் வடிவினில் விடிவெனப் பாடி
வாத்தியார் போக்கில் வந்தது விடுதலை



அட்டைக் கத்தி அவருக்கிருந்தது-இவருக்கு
நெட்டை இரும்பு தோளில் தொங்க
தெருவெல்லாம் வெள்ளம் செவ்வாறாய்ச் சீற
சிறந்தது தமிழர் இல்லத்து முற்றம்!


ஒற்றெரென ஒடுங்கிய ஊரும்
ஓலத்தின் வழி ஏலத்தில் மண் பறிகொள் மேடாய்
உப்பு நீர் சுரக்கும் பனங்காடும் பறி போய்
வந்தார் வனப்பாய் வாயாற விடுதலை அள்ளி


அவருக்கே ஓட்டை அள்ளி இறைத்து
வதையெனப் படேல் வாழ்க நீயும்
வாழிய யாழே வீணை கொண்டு-இல்லை
வீழ்வதும் உனது தலையென வெண்ணி
வீழ்த்து இலட்சம் வோட்டெனக் களவாய்...


வாழ்க அண்ணா வாழிய நீயே!
வருவது பதவி தருவது கரமெனக்
குரலும் ஒலிக்க கொன்றாவது குலத்தை
கோவேந்தர்க்குத் தானம் தருக.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
13.03.2010

Samstag, 6. Februar 2010

நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!

நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!

வீதி எங்கும் கொட்டாத பனி கொட்டக்
குப்பற விழுந்த சிறிய பையன்
மெல்லவெழும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருக்க
முதுகினில் விரியும் அன்னைக் கரம்
மெல்லக் கொடுக்கும் உறு துணை!

அன்னை.

எனது குவளையுள்
நுரையொழுப்பும் பியரைப் போல்
நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!

நொந்துலர்ந்த இதயத்தோடு
நெடிய வாழ்வுக்குள்
குந்த இடமின்றி அகதியாய்
ஏதோவொரு தெருவில் நான்...

சுவரில் தொங்கும் கடிகாரத்தின்
ஈனக் குரலில்
இதயம் குழப்பும் ஒரு கும்மிருட்டில்
அவளை அணைத்தபடி அச்சம் தொலைத்து
கட்டிலில் கண்ணயர்ந்ததும்
வர்ண ஜாலத்துள் மிதக்கும் தலையணை.

முந்தைய பொழுதின்
கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைத் தீவாய் வேளைகள் செல்ல

மீளவும் பியரைக் கொள்ளும்
பெருவாயுள் அகாலக் கொடுமையின் சிதை
உறவுக்கான இரைமீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
பேசப்படும் தொ(ல்)லைபேசி அதிர

அன்னை உயிர் குடித்த
காலனது கதை பகிர்ந்த
மருமகள்:"உடனடியாகப் போன் செய்யுங்க
மாமா"என...


முன்னைய பொழுதில்
ஒரு தம்பி நஞ்சுண்டு
மரிக்கப் போன் செய்தாள் அக்காள்
இன்னொரு இழவு
சொல்லும் அவள் மகள்-என் உறவுகள்!

அம்மா,உடல் சாய்த்து வான் பார்க்க
இரவல் வீட்டுத் தரையில் இறுதிப் பயணந் துவக்க
துவண்ட என் நெஞ்சு துன்பித்திருக்க
இரவல் அறியாது நாம் வாழ்ந்த மண்போன்றும்,
மனைபோன்றும் அன்னையின் நினைவு
மெல்ல விழியுள் நீர் சுரக்க

சின்னமடுமாதவின் ஒரு கோடியில்
பசுமைகொண்டிருந்த எனது முற்றம்,
சுற்றம் தொலைத்த அன்றைய இடர்முகம்
அன்னையில் மடியில் தவழ்ந்த சோகமென நான்...

அடுப்படியில் வெந்துலர்ந்தவளின்
சேலைத் தலைப்பில் பதுங்கிய அச்சம்
மீளவும் அன்னைச் சேலையைத் தேடுவதும்
அரண்டெழுந்து அவதியுமாய்
புரண்டொதுங்கும் பொல்லாத பொழுதுகளுமாய்
மப்புக் கொண்ட புத்தியுமாய் நான்

வேடிக்கை மனிதன் ஆனேன்,
வேதனையைச் சொல்ல முடியாத குற்றம்
நெஞ்சினுள் அம்மா மரணத்தைப் புதைக்க
எனது மனைவிவழி உறவுகளுக்கே
அம்மாவின் மரணம் தெரியாது-இதுதான் நான்!

குற்றம்!அம்மாவைப் பார்க்காத குற்றம்
பொழுதெல்லாம் என்னைச் சிலுவையில் அறைய
சுற்றத்தோடு அன்னையின் இழப்பைப் பகிர்வதில்
எல்லையிட்டபோது என்னைத் தொலைத்திருந்தேன்

எனினும்,
பால்யப் பொழுதின் முந்தைய இரவுகளில்
ஆத்தையின் அரவணைப்பில் அச்சம் விலக்கி
அகலக் கால் வைப்பதும் அரண்டு போய்
மெல்லத் தாய் மடியில் புரண்ட பொழுதும்
பட்டுப்போன தருணத்தில் அன்னை முகந்தாங்கி
நினைவுத் தடமாக விரிய


பொல்லாத செய்திகளைப்
போர்வையின் கணகணப்பில் புதைத்து
கள்ள நித்திரையில்
கண் துயில மறுக்கும் கோடி பொழுதுகள்
இரண்டுங் கெட்டான் உணர்வை
உடலெங்கும் விதைக்க
அம்மாக் கனவு மெல்ல விரியும் கொடிய இரவில்
அம்மாளாச்சி வெள்ளைச் சேலையில்
வேப்பிலை காவிக் கண்ணெதிரில்

என்ன சொல்வேன்?

அன்னை இனி வரமாட்டாள்.
அவளது இயக்கம் குலைந்துவிட்டது
தோன்றியதன் மூலத்திணிவு இன்னொரு திசையில்
இருப்பு விரிக்க இழப்பு எமக்காக...

புகலிடம்கொண்டு வருசம் இருபத்தி ஐந்து
என் கட்டையும் போய்விடும் இன்னுஞ் சில வருடத்தில்
இதற்குள் என்ன பொல்லாத துக்கம்-இழப்பு?

தரையில் பட்டுத் தெறிக்கும்
ஒளி முறிவுகளில்
ஒரு கணமேனும் தேக்கமிருப்பதற்குச் சாத்தியமுண்டா?
உயிர்கொண்டலையும் உடலுக்கும் இது பொருந்தும்?

என்றபோதும்,அன்னையும்
அவள் கைப் பிடிச் சோறும்
காணமற்போன ஒவ்வொரு பொழுதுகளும்
பொல்லாத உலகத்தின்
பொருளில்லா வாழ்வுத் தடமாய் அகதி வாழ்வு

அடங்க மறுக்கும் அரண்ட மனதுக்கு
அரைத் தூக்கத்தின் குறை துயில்
கொள்ளிக் குடமுடைத்த
அப்பனின் இழவு சொல்லி
மிச்ச சொச்சக் கனவையும் சிதைக்க
அன்றைய பொழுதில்
பிணைத்த கரங்களோடு அப்பனின் பிணத்தில்
விழுந்தழுத என் தம்பிகளின் முகங்கள் வந்து குத்துகிறது!

பிஞ்சுக் கரங்கள் இடித்த சுண்ணம்
நினைவில் குத்தும் இழப்பின் வலியாய்!

இப்போது,
அன்னையும் அப்பன் வழியில்...
எத்தனை இரவுகளில்
எங்களைத் தூக்கியணைத்து
துயரங்கலைத்த
தோழி நீ!

இந்தப் பொழுதில்
நீயும் இல்லை
நெடு நிலவும் இல்லை
நெஞ்சில் உரம் சேர்த்த
சின்னமடு மாதாவும் இல்லை அருகில்!

எல்லாம் இழந்த
இந்தப் பொழுதில் அம்மாவின் இறுதி நிகழ்வு
வெப் காமில் பார்த்து விழிபனிக்க
அக்காளினதும் தங்கையினதும் கண்ணீர்க் கோலம்
மூச்சையடக்க,
எனது இறுதிப் பொழுதை மெல்ல அழைக்கும் கால வரைவு!

என் சந்ததியின் தவிப்பில்
என்றோ ஓர் நாள் அழுகி நாறப்போகும் எனது உடலும்
இந்த ஜேர்மனியக் கொடுங் குளிரில் அன்னையின் சோகம் காவி
அநாதைக் கோலம் கொண்டு விழி வான் பார்க்க
பனிவீழ்த்தும் வானமும் என்னை நகைக்கிறது!

அன்னை.

அம்மன் தாலாட்டை
அடியெடுத்துப் பாடி
என் நோய் மறக்க வைத்த அன்னை,
மெல்லத் தலை கோதி அள்ளியணைத்து
கிள்ளிய வீபூதியில் நெற்றியைத் தடவி
நெடிய வலி போக்கிய கிழவியைத் தின்றது தீயும்!

"ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவிஎன்று நாமம்,படையாதே!-மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே!
செத்தாரைப் போலத் திரி!"என்றான் பட்டினத்தான்

என் அன்னை அங்ஙனம் இருந்தவள்-வாழ்ந்தவள்
மூன்று மையில் கட்டை எனைச் சுமந்து சென்று
வைத்தியம் பார்த்த அவள் கால்கள் கட்டுண்டு கிடக்க
பாடைகொண்ட மோட்டார்க் கார் மெல்ல விலக
அம்மாவும் மறைந்தாள் இப்போ அப்பனைப் போல!

நானோ,அள்ளிய சோறும்
மெல்ல முடியாத வாயோடு
உணர்வு மரத்த மனிதனாய்
நுரை வெடித்த வெற்றுக் கிளாசில்
வந்தமர்ந்த தேனீயின் இருப்பில்
என்னை இழக்கின்றேன்.

அன்னை,அம்மாளாச்சியாய்...


ப.வி.ஸ்ரீரங்கன்

Montag, 28. Dezember 2009

செங்கதிர் சேகரா!

போர்-"ஆசிரியர்" பெரி-துவக்க...


புலி எழுதிய நந்திக்கடற்கரை நெற்றியின்
அயல் எழுதிய கைமுனுவும் சிங்கமும்
வன்னியும் தம்பொழில் யுத்தப் பிரமுகர்
ஏவல் கேட்பப் பாரத-பார் அரசு ஆண்ட
காவிக் கழிசடைக் காந்திக் கொற்றம்
நாளிதோறும் ஈனக் குரல் இயம்பும்;கல்வியர்
அஃதாவது விடுதலை நமக்குஇன்று ஆம் என்று
ஈழம் தன் குடிகளைக் கூஉய்க்,
துப்பாக்கியும் பிணவாடையும் சுமந்து குடியழிய
கோவேந்தன் கரிகாலன்தம் புதல்வன் தன்கூட்ட சகிதம்
குனியக் கண்ட பக்ஷ கோடாலிக் கொத்த வந்து தோன்றினான்-பிரபா.


வஞ்சம் செய்தார் கல்வியர் நந்திக் கடல் அமைய
குடிவளம் கவர்ந்தார் கறைஎன் கோயாம்?
வன்னிக் குடிஅழித்தார் பொய்யும் சூதும்
வஞ்சம் செய்வோர் வடிவுஎன் கோயாம்?
விடுதலை வேட்கையும் தாயின் கனவும் இழந்தே
சரண் புகு ஒளித்தார் முகம்என் கோயாம்?

இன்புற தம்மக்காள் இடர்எரி அகம்மூழ்கத்
துன்புறா இலாபங்காண் முறுவல் வெண்பேய்கள் போல்
மன்பதை அழிந்து ஒளிய,போர்-ஆசிரியர் தவறிழைப்ப,
புதல்வரை இழந்தேன்யான் அவலம்கொண் டழிவலோ?
கல்விச்செம்மையின் இகந்தகோல் கல்வியர் தவறிழைப்ப,
இம்மையும் இசைஒரீஇ,இனைந்து "உம்பால்" ஏங்கி அழிவலோ?

இணைய-தளபதிகள் சூதுரைத்து எவர்மாண்டார்?
"எங்கணாஅ!"பொங்கி எழுந்தாயோ பொழிகதிர்த்
திங்கள் முகிலொடுஞ் சேணிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுது நீஇப்போ பயன் யாது?
அடங்கு நீ சடங்கு முடித்து, அமுதூட்டப் படிப்புண்டு;
சிவசிவா!ஈழவக் கூத்தினுள் வந்தீண்டும்
ஆயக்கல்வியர் எல்லீருங் கேட்டீமின்;
பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி;
செங்கதிர் சேகரா!மாசுகொள் மனிதரா நாம்?-
தவறறியாரோ அல்லர்;கடுப்பாய் உரைத்தேன் காண்!

கொடுங்கோலும்,போர்க்குடையும்,
வன்னிநிலத்து மறிந்து வீழ்தரும்
நங்கோன்-தன் கொற்றவாயில்
ஒற்றாடல் நடுங்க,நடுங்கும் உள்ளமும்;
இரவு வில்லிடும்;பகல்மிக் குண்டுவிழும்
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
"வருவதோர் துன்பம் உண்டு"
தேசியத் தலைக்கு யாம் உரைத்தும் நின்றதன் நடுவே;
நீ சிரஞ்சொடுக்கித் தாழ்ந்தது எங்கே?சொல் சேகரரே-சொல்!

ப.வி.ஸ்ரீரங்கன்

28.12.09