துட்டக் கைமுனுவும்
எல்லாளனும்.
அந்த வார்த்தை தனது காலத்தை
இழந்துவிட்டது,
அதற்கு அதனது காலமாகவும் ஏதோ இருந்திருக்கும்,
நரம்பு புடைக்கும் சொல்லாய் அது காலத்தை இழந்திருந்தது!
இந்த வார்த்தைக்கு ஒரு நாள் இருந்திருக்கிறது,
அது தனது நாளையும் தொலைத்து
இன்னொரு இரவுக்குத் தவம் இருந்தபோது,
சூரியனின் சரிவில் வீழ்த்தப்பட்ட தலைகள்
வார்த்தைக்குச் சமாதிகட்டிக் கொண்டன.
அந்த வார்த்தைக்குத் தோதான
இன்னொரு வார்த்தை இனி மேலெழுவதற்கு,
வரப் போகும் இரவுகளில் முட்கம்பி வேலிகளில்
கிழிபடும் மனிதம் இடந்தரப் போவதில்லை.
வார்த்தைக்கு விருப்பங்கள் பலதாக இருந்திருக்கிறது,
மற்றவர்களைக் கொன்று வாழ முனையும்
ஒரு திசையில் அந்த வார்த்தை
"தமிழீழம்"என்று எமக்கு அர்த்தமாகியதா?
சிங்களத்து உச்சி பிளந்து
எல்லாளனைக் காட்டிய
அநுராதபுரத்தில் வீழ்ந்த தலைகள் பதினேழு,
வார்த்தைகளுக்கு அப்போதும் ஓய்வில்லை!
மாவீரர் உரை சொல்ல
துட்டக் கைமுனுவின் தலை பிளந்த
வரலாறு தேசியத் தலைவர் திசையில் வார்த்தைக்குப்
பெருமைப்பட்ட புல(ன்)ம் பெயர் புண்ணாக்குகள்.
வன்னிக்குள் மண்டியிட்ட
எல்லாளன் தலை பிளக்கத் துட்டக் கைமுனுக்குக்
கரம் கொடுத்தவர்களும் எல்லாளன் வாரீசுகள்தாம்
வார்த்தைக்கு இப்போது புதுவிளக்கம் சொல்ல
கைமுனுவுக்கும்
எல்லாளனுக்குமாகச் செத்தவர்கள்
அப்பாவி இலங்கைப் பஞ்சப்பட்டவர்கள்
அள்ளிய காசுகளில் அரைக்கு ஒட்டியாணம்
கட்ட முனையும் புலிப்பினாமிகளின் வீடுகளுக்கு
இன்னுமொரு தேசியப் பேயை வார்த்தைகொண்டு விடு!
வார்த்தை தனக்குள்ளே வருத்தல்களைப் புதைத்திருந்தது,
அதுவும் தன்னையும் மற்றவர்களையும் கொன்றபோது
தேசிய ஆன்மாவென்று தெருக் கரையில் நின்று,
அழுதுவடியும் கயவர் வார்த்தைக்குள் வதைபட்டவர்களை
வஞ்சித்து மோப்பம் பிடித்து வயிறு வளர்க்க
இன்னொரு பிரபாகரன் "எல்லாளனுக்கு" இரையாகணுமோ?
ப.வி.ஸ்ரீரங்கன்
01.06.2009
பிற்குறிப்பு:
2007 இன் மாவீரர் தினத்துக்கு உரை சொன்ன பிரபாகரன்,"சிங்களத்து உச்சி பிளந்து" எல்லானை அவர்களுக்குக் காட்டியதாகப் பெருமைப்பட்டார்.அநுராதபுர விமானப்படை தளத்துக்குப் பதினேழு கரும்புலிகள் சென்று தாக்கிய வெற்றிக்கு அவர் சொன்ன உரை அது.இதுள் சிங்கள ஆளும் வர்க்கத்து உளவியல் துட்டக் கைமுனுவின் வரலாறின் வழியிலேயே இயங்குகிறது.அது,வன்னிக்குள் மண்டியிட்ட எல்லாளன் தலையைப் பிளந்து"தேசியத் தலைவர்"தம் கூற்றை எதிர்கொண்டுள்ளதாக இவ் உளப்பாங்கை உணருவேண்டும்.