உன் அபிமானம்...
மக்களைக் கொல்லு
மக்களைக் கொல்லு
சும்மா கொல்லு,சுகமாய் இருக்கும் நீ கொல்லு!
மனிதாபிமானம் கூடவே கூடாது!
புரட்சிக்கு அது எதிரானது
டோல்ஸ்ரோய்கூடத் துரோகியாகிய
வரலாறு இந்த உலகத்தில்தாம் நிகழ்ந்தது
நீ கூட அறிந்திருப்பாய்
புலிகொல்வது தியாகமென அதன் வால்பிடிகள் அவிழ்க்க
சிங்கம் கொல்வது ஜனநாயத்துக்கு ஆனதென-அதன்
வால்கள் இயம்ப
அந்தோ நீ
இடையினில் அமுதஞ்சுரக்க
நஞ்சுக் கடலைக் கடைவதால்
மக்களது ஆயுட் காலத்தை நீட்ட முடியுமா?
ஆதலால் கொல்லுதலைப் பழகு
மரணங்கள்
கொலைகள் வீழ்த்தும் களங் குறித்து
கவனத்தில்கொள்ளாதே ஆவது பின்னால்
துரோகத்தின் தொடரே!
மனிதாபிமானம் காட்டாதே
புலிக் களத்தில்
போராடிச் சாவது
துரோகம் மறுத்த தியாகமே
கடைசிப் புலியுள்ளவரைப் போராட விடு
இறுதியில் நான் புரட்சி செய்ய!
மருந்துக்கும் சரணடைவைப் பேசாதே-அது
மகத்துவமில்லாத துரோகம்-நீயும்
மக்களைக் கொல்
வேண்டியதைச் செய்
கொலைகளை உனது வீட்டிலிருந்து ஆரம்பி
எனினும்,நீ செய்வது
துரோகந்தாம் ஆனால் அஃது
சிங்கத்தின் துரோகத்தைப் போலன்று
ஏனெனில்
நீ கொலை செய்வதால் புலி
உனக்கான தேவை வேறானது
சிங்கம் பசிமறுத்து வேட்டையாடுவதால் அஃது வேறானது
நீ,பசித்திருப்பதால் புசிக்க
வேட்டையைத் தொடக்குகிறாய்-இது
அடிப்படையில் வேறான அளவுகோலுக்குள் அளக்கப்பட
புரட்சிப் போதனாச் சாலை புகட்டும் துரோகம் இஃது
துணிந்து நில்,
உனது கடைசிச் சகா வீழும்போது-நீ
சைனட்டைக் கையிலெடு
அதுவரையும் உன்னில் தியாகத் தீ எரிகிறது!

உனது கொலைகளுக்கான எனது தீர்ப்பு
துரோகமற்ற தியாகமென்று
நான் மட்டுமே பிரேரிப்பதால்-ஆவது
புரட்சிக்கான புதிய விடியல்
குடிகளுக்குள் வெடியை வைப்பதும்
கூன் விழுந்தவர்களைக்
கட்டாய இராணுவமாக்குவதும்
தியாகத்தைச் செய்வதற்கான தீராத தேசியம்
இது,தமிழுக்கு ஒரு ஈழத்தை அவாவுறுவதே
அதைப் பிரித்தறியும் புரட்சியின் சிறப்பு
தலை வணங்குகிறேன்
உன் துரோகம் மறுத்த தியாகத்துக்காகவும்
பாசிச வாதியாக நீ
இருந்தாலும் உனது புனிதக் கொலைகள்
வரலாற்றில் தியாகத் தீயை மூட்டியே சாம்பலாகும்!
இதனால்
நீயும் தலைவனே!
நீ தியாகி
உனது தியாமெங்கே
சிங்கத்துக்கு வாலாக நீளும்
எச்சில் நாய்களின் துரோகம் எங்கே?
ஆதலால் நாம்
உன் பாதத்தை நக்கி
மோனத்தில் வாழ்வதே
ஈழத்தின் வெற்றி
வாழ்க நீ புலியாக-வாழ்க!
ப.வி.ஸ்ரீரங்கன்
16.04.09