Sonntag, 29. März 2009

வணங்கா மனிதங் குறித்து...

உடல் கருக்கும் தீ சுட
மெழுகு உருகும்
திரை கம்பத்தில் ஏற
தேசியக் கூச்சல் ஜுவாலைவிட்ட மெழுகாய்...

மலர்களைக் கொய்தவன் காசு பண்ண
தமிழீழ விடுதலை மனத்தில்
வித்துடலெனச் சொரியும் பூக்கள்
வன்னியில் குவளை ஏந்தும் சா பிணம்
குற்றுயிரைக் கொல்லப்படும்வரை கையிற் பிடிக்க!


தெருக்கள்தோறும்
புலிக்கொடி ஏந்தி
மண்டையில் புலித் தொப்பி வைத்து
மனமெல்லாம் கொலைக்கு இசைந்து
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"என...



பிணங்களின் மீது உரிமைகள்
கொடிகளைக் கட்ட
உயிருள்ளோர் செத்தாக வேண்டும்
இனி,அடுத்தவர் எவர்?

அள்ளிக்கொண்டு
அரசியல் செய்யத் தேசியத் தலைவர்
அரு மருந்துண்ணார் அவர்
அடுத்தவர் குழந்தைகளுக்குச் சைனட்டு

தேசமெனுங் கொடிய மனம்
தன் வீட்டுத் திண்ணையுள் வீழ்ந்த
பிணங்கள் எண்ணிப் பட்டுவாடா
பாயின்றித் தரையில் வீழ்த்தப்பட்ட தலைகள்
"தமிழீழத்தின் விடியலுக்கு" முந்திய வித்து


வணங்காத மண்ணும்
தமிழீழம் தாகம் என்பதாய்
கப்பலோடும் எவரெவர் பெயரிலோ


மண் வணங்குகிறதோ இல்லையோ
நீ வணங்குகிறாய்
கொலைகளுக்குத் தியாகமுங் கற்பிக்கின்றாய்


கப்பல் கட்டுவதுமட்டும் மக்களைக் காப்பதில்லை
கொலைக்குமுன் வைத்திருக்கும் உயிர்களை விட்டுவிடு
மக்களைக் காப்பதென்று புலிக்கதை சொல்ல
இனியும் நடேசன்கள் தேவையா?


ப.வி.ஸ்ரீரங்கன்
29.03.09