Mittwoch, 8. April 2009

புலித் தளபதி தீபன்!

உனது இதழில்
மொழியில்லை!


நீ, அடுக்கடுக்காக
வெற்றிகள் குவித்தபோது,
வண்ண வண்ணப் படங்கள் போட்டுப் பரப்புரை.
தமிழீழம் உனது மிடுக்கில்
கொலுவுற்றதாகவும் பலர் நம்பிக் கிடந்தனர் அன்று!

அந்தோ பரிதாபம்!



நீ, உயிரிழந்து
மல்லாந்து கிடக்கும் மண்ணைத் தவிர
இன்று,
உன்னைத் தொட்டுப் பார்க்கக்கூடத்
தமிழரால் முடியவில்லை!

உனது நாமத்தை
உச்சரிக்கக்கூட ஒருவனில்லை,
உப்பில்லாத ஊர் இது!

உயிரோடிருக்கும்போது
உன்னை,
உருபெருக்கக் காட்டிய ஊடகங்களுக்கு
உனது
மரணத்தைச் சொல்லவும் துப்பில்லை.

தூ...

சதிகாரக் கூட்டமே!

நீ, கொலைக் காரன்,
கொடுமையானவன்,
மக்களை வதைக்கத்
"துரோகி"
என்ற ஆயுதத்தோடு அலைந்தவன்!

எனினும்,
சிங்களக் காடையர் இராணுவத்தால்
அடிமைப்பட்ட நாம்
உனது மிடுக்கில் பெருமிதங்கொண்ட காலமொன்று
விழிமுன் தோன்றிச் சொரிகிறது நீராக!!

புரிகிறது!

இயக்கத்தினது நலனுக்காக
எவரையும் கொல்லும்
அந்தக் கொடுமையான தமிழ்மனது
கொல்லப்பட்டவர் குறித்துச் சொல்லாதுதாம்!

துன்பத்தில்,
பங்குகொள்ளாப் பணவேட்டைக்காரர்கள்
பாடையா கட்டுவார்கள்?

மக்களுக்குச் சொல்வதற்குக் கூட
உனது மரணம் விரோதமானதா?

அறியாத நேரத்தில்,
புரியாத களமொன்றில்,
சரிந்ததோ உனதுடல்?

உயிர் துறந்த
அந்தக் கணங்கள்
துரோகிகளென நீ
பலியெடுத்தவர்களது
கணத்துக்கு ஒத்ததாகவா உணர்ந்தாய்?

எத்தனையோ பொழுதுகளில்,
உனது
மிடுக்கை ஏலம் போட்டவர்கள்
தமிழீழத் தேசிய உறக்கத்தில்
உன்னை மறந்திட
துரோகத் தலைமைக்கு
சிரங்கொடுத்த உனது நிலை வீரமா
அல்லது
கோழைத்தனமா?

நினைவுக்காகக்
குறிப்பு எழுதுகிறேன்
அவ்வளவுதாம்!

காலம்,
எப்போதாவது
உன் மரணத்துக்கான தீர்ப்பைச் சொல்லும்.


அதுவரையும்,
உனது
மிடுக்குத் தமிழர்களது
தவித்த மனதுக்கும்,
சிங்களத்துக்
காட்டுமிராண்டி இராணுவ அச்சத்துக்குமான
ஒரு வடிகாலகவே இருந்திருக்கிறது என்றுரைப்பதில்
நான்
எதையும் இழக்கப்போவதில்லை!

நீ,கொடியவனாகவும்,
பாசிச வாதியாகவும் மாறினாய்.
மக்கள் படைத் தளபதியென
உன்னை எங்ஙனம் உரைப்பேன்?

எனினும்,
அமைதிகொள்!
அழிந்து விட்டாய்,
அற்ப அழிவு அரசியலில்
உன் மரணத்தின் தடமே மறைக்கப்பட்டுள்ளது!

மௌனித்த
உனது இதழில் மொழியில்லை,
நீ,
இப்போது தமிழனும் இல்லை,
சிங்களவனும் இல்லை-மனிதன்!

செயலால் இனங்காணும்
உனது உடலுக்குக் "கொலைக்காரன்" எனும் வரலாறு
மனதினது ஏதோவொரு உணர்வுத் தடத்தில்
குறிப்பெடுத்து நெஞ்சைக் கல்லாக்கிறது!


என்றபோதும்,
விழி பனிக்கிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்
09.04.2009
பின்னிரவு:01:11 மணி

3 Kommentare:

Thamizhan hat gesagt…

தீபன் உன்னை மன்னிக்க மாட்டான்
பிணத்தை வைத்து நீ பெரிய மனித நாடகம்
காரித்துப்பி உன் வார்த்தையை வீணாக்காதே
வீழ்வது உன் முகத்திலே தான்
மல்லாந்து படுத்தது போதும்
ம்னிதனாய் எழு துரோகியானாலும் சரி!

Anonym hat gesagt…

என்றபோதும்,
விழி பனிக்கிறது.
இதயம் இனிக்கவில்லையா!

P.V.Sri Rangan hat gesagt…

//தீபன் உன்னை மன்னிக்க மாட்டான்
பிணத்தை வைத்து நீ பெரிய மனித நாடகம்
காரித்துப்பி உன் வார்த்தையை வீணாக்காதே
வீழ்வது உன் முகத்திலே தான்
மல்லாந்து படுத்தது போதும்
ம்னிதனாய் எழு துரோகியானாலும் சரி!//

உண்மைதாம் தமிழரே,துரோகியாகிச் செத்தபின் மலாந்து கிடந்தாலென்ன மண்கவ்வினாலென்ன?என்னால்,மீளவும் எழ முடியாதே!

Kommentar veröffentlichen