ஊனினை அழிக்க...
இன்றென் மூளையை அறுத்து
அவியலிட ஆசை கொண்டேன்
அலுப்புத் தட்டும்போதும்
அருவருப்பு ஏற்படும்போதும்
அடுப்புக்குள் கூனிக்கொண்டு நுழைய விரும்புகிறேன்
முடியவில்லை!
எங்குமே எதிரிகளான சூழல்
புறமெங்கும் என் சாயலின்
மனிதர்கள் தொலைக்கப்பட்டார்கள்
எனக்கும் சாவுமணி அடிக்க
படையெடுக்கும்"அழகு மேனி"
எப்படி வாழ்வேன்?
எதையிட்டு மகிழ்வேன்?
என்னைத் தொலைத்த தெருவினில்
என் குழந்தைகள்
தம்மைத் தொலைக்க ஆயுத்தமாகின்றனர்
"கருப்பு" எச்சங்கள்
எல்லைப் புறத்தே தள்ளி வீசப்பட்டன
ஏதோவொரு மூலையில் என் இதயம் துடித்தது
என் சந்ததி
தொலைக்கப்பட்ட தம்
மூதாதையரைக் கண்டுகொள்ளவில்லை!
ஆங்கிலத்தில்
தனது அடையாளத்தைச் சொல்லிக்கொண்டது ஒரு அடிமை
தொலைந்தது
தானும் தன் சந்ததி என்பதையும் மறந்திருக்க
தெருமுனையில்
தன்னையே துரோகி என்றது இன்னொரு அடிமை
எப்படி எழுந்து மீள்வேன்?
எவருக்குமே என் சாவு தெரிந்திருக்கவில்லை
எல்லோருமே அதை வரவேற்றபோது
அவர்களிடமிருந்த முகங்கள் தொலைந்திருந்தன
எதன்பெயராலும்
எதன் பொருட்டும் என் தாயைக் கற்பழித்தேன்
வாழ்வதற்கு நியாயம் எனக்கு இருப்பதற்கு
அவளுக்கு நியாயம் சொல்லும்வரை
நான் அழிந்தே போக வேண்டும்
அந்தத் தடையமற்ற பொழுதின் திசையுள்
அவளது இருப்பு
தொடர் இருட்டில் நிலவக் கூடும்
அதற்காகவேனும்
எரி அடுப்புள் நுழையக் கற்றுக் கொள்கிறேன்...
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
17.11.2009
1 Kommentar:
இது தொடர்கதை
Kommentar veröffentlichen