Samstag, 6. Februar 2010

நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!

நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!

வீதி எங்கும் கொட்டாத பனி கொட்டக்
குப்பற விழுந்த சிறிய பையன்
மெல்லவெழும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருக்க
முதுகினில் விரியும் அன்னைக் கரம்
மெல்லக் கொடுக்கும் உறு துணை!

அன்னை.

எனது குவளையுள்
நுரையொழுப்பும் பியரைப் போல்
நெஞ்சுள் நுரைக்கும் அன்னை!

நொந்துலர்ந்த இதயத்தோடு
நெடிய வாழ்வுக்குள்
குந்த இடமின்றி அகதியாய்
ஏதோவொரு தெருவில் நான்...

சுவரில் தொங்கும் கடிகாரத்தின்
ஈனக் குரலில்
இதயம் குழப்பும் ஒரு கும்மிருட்டில்
அவளை அணைத்தபடி அச்சம் தொலைத்து
கட்டிலில் கண்ணயர்ந்ததும்
வர்ண ஜாலத்துள் மிதக்கும் தலையணை.

முந்தைய பொழுதின்
கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைத் தீவாய் வேளைகள் செல்ல

மீளவும் பியரைக் கொள்ளும்
பெருவாயுள் அகாலக் கொடுமையின் சிதை
உறவுக்கான இரைமீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
பேசப்படும் தொ(ல்)லைபேசி அதிர

அன்னை உயிர் குடித்த
காலனது கதை பகிர்ந்த
மருமகள்:"உடனடியாகப் போன் செய்யுங்க
மாமா"என...


முன்னைய பொழுதில்
ஒரு தம்பி நஞ்சுண்டு
மரிக்கப் போன் செய்தாள் அக்காள்
இன்னொரு இழவு
சொல்லும் அவள் மகள்-என் உறவுகள்!

அம்மா,உடல் சாய்த்து வான் பார்க்க
இரவல் வீட்டுத் தரையில் இறுதிப் பயணந் துவக்க
துவண்ட என் நெஞ்சு துன்பித்திருக்க
இரவல் அறியாது நாம் வாழ்ந்த மண்போன்றும்,
மனைபோன்றும் அன்னையின் நினைவு
மெல்ல விழியுள் நீர் சுரக்க

சின்னமடுமாதவின் ஒரு கோடியில்
பசுமைகொண்டிருந்த எனது முற்றம்,
சுற்றம் தொலைத்த அன்றைய இடர்முகம்
அன்னையில் மடியில் தவழ்ந்த சோகமென நான்...

அடுப்படியில் வெந்துலர்ந்தவளின்
சேலைத் தலைப்பில் பதுங்கிய அச்சம்
மீளவும் அன்னைச் சேலையைத் தேடுவதும்
அரண்டெழுந்து அவதியுமாய்
புரண்டொதுங்கும் பொல்லாத பொழுதுகளுமாய்
மப்புக் கொண்ட புத்தியுமாய் நான்

வேடிக்கை மனிதன் ஆனேன்,
வேதனையைச் சொல்ல முடியாத குற்றம்
நெஞ்சினுள் அம்மா மரணத்தைப் புதைக்க
எனது மனைவிவழி உறவுகளுக்கே
அம்மாவின் மரணம் தெரியாது-இதுதான் நான்!

குற்றம்!அம்மாவைப் பார்க்காத குற்றம்
பொழுதெல்லாம் என்னைச் சிலுவையில் அறைய
சுற்றத்தோடு அன்னையின் இழப்பைப் பகிர்வதில்
எல்லையிட்டபோது என்னைத் தொலைத்திருந்தேன்

எனினும்,
பால்யப் பொழுதின் முந்தைய இரவுகளில்
ஆத்தையின் அரவணைப்பில் அச்சம் விலக்கி
அகலக் கால் வைப்பதும் அரண்டு போய்
மெல்லத் தாய் மடியில் புரண்ட பொழுதும்
பட்டுப்போன தருணத்தில் அன்னை முகந்தாங்கி
நினைவுத் தடமாக விரிய


பொல்லாத செய்திகளைப்
போர்வையின் கணகணப்பில் புதைத்து
கள்ள நித்திரையில்
கண் துயில மறுக்கும் கோடி பொழுதுகள்
இரண்டுங் கெட்டான் உணர்வை
உடலெங்கும் விதைக்க
அம்மாக் கனவு மெல்ல விரியும் கொடிய இரவில்
அம்மாளாச்சி வெள்ளைச் சேலையில்
வேப்பிலை காவிக் கண்ணெதிரில்

என்ன சொல்வேன்?

அன்னை இனி வரமாட்டாள்.
அவளது இயக்கம் குலைந்துவிட்டது
தோன்றியதன் மூலத்திணிவு இன்னொரு திசையில்
இருப்பு விரிக்க இழப்பு எமக்காக...

புகலிடம்கொண்டு வருசம் இருபத்தி ஐந்து
என் கட்டையும் போய்விடும் இன்னுஞ் சில வருடத்தில்
இதற்குள் என்ன பொல்லாத துக்கம்-இழப்பு?

தரையில் பட்டுத் தெறிக்கும்
ஒளி முறிவுகளில்
ஒரு கணமேனும் தேக்கமிருப்பதற்குச் சாத்தியமுண்டா?
உயிர்கொண்டலையும் உடலுக்கும் இது பொருந்தும்?

என்றபோதும்,அன்னையும்
அவள் கைப் பிடிச் சோறும்
காணமற்போன ஒவ்வொரு பொழுதுகளும்
பொல்லாத உலகத்தின்
பொருளில்லா வாழ்வுத் தடமாய் அகதி வாழ்வு

அடங்க மறுக்கும் அரண்ட மனதுக்கு
அரைத் தூக்கத்தின் குறை துயில்
கொள்ளிக் குடமுடைத்த
அப்பனின் இழவு சொல்லி
மிச்ச சொச்சக் கனவையும் சிதைக்க
அன்றைய பொழுதில்
பிணைத்த கரங்களோடு அப்பனின் பிணத்தில்
விழுந்தழுத என் தம்பிகளின் முகங்கள் வந்து குத்துகிறது!

பிஞ்சுக் கரங்கள் இடித்த சுண்ணம்
நினைவில் குத்தும் இழப்பின் வலியாய்!

இப்போது,
அன்னையும் அப்பன் வழியில்...
எத்தனை இரவுகளில்
எங்களைத் தூக்கியணைத்து
துயரங்கலைத்த
தோழி நீ!

இந்தப் பொழுதில்
நீயும் இல்லை
நெடு நிலவும் இல்லை
நெஞ்சில் உரம் சேர்த்த
சின்னமடு மாதாவும் இல்லை அருகில்!

எல்லாம் இழந்த
இந்தப் பொழுதில் அம்மாவின் இறுதி நிகழ்வு
வெப் காமில் பார்த்து விழிபனிக்க
அக்காளினதும் தங்கையினதும் கண்ணீர்க் கோலம்
மூச்சையடக்க,
எனது இறுதிப் பொழுதை மெல்ல அழைக்கும் கால வரைவு!

என் சந்ததியின் தவிப்பில்
என்றோ ஓர் நாள் அழுகி நாறப்போகும் எனது உடலும்
இந்த ஜேர்மனியக் கொடுங் குளிரில் அன்னையின் சோகம் காவி
அநாதைக் கோலம் கொண்டு விழி வான் பார்க்க
பனிவீழ்த்தும் வானமும் என்னை நகைக்கிறது!

அன்னை.

அம்மன் தாலாட்டை
அடியெடுத்துப் பாடி
என் நோய் மறக்க வைத்த அன்னை,
மெல்லத் தலை கோதி அள்ளியணைத்து
கிள்ளிய வீபூதியில் நெற்றியைத் தடவி
நெடிய வலி போக்கிய கிழவியைத் தின்றது தீயும்!

"ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவிஎன்று நாமம்,படையாதே!-மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே!
செத்தாரைப் போலத் திரி!"என்றான் பட்டினத்தான்

என் அன்னை அங்ஙனம் இருந்தவள்-வாழ்ந்தவள்
மூன்று மையில் கட்டை எனைச் சுமந்து சென்று
வைத்தியம் பார்த்த அவள் கால்கள் கட்டுண்டு கிடக்க
பாடைகொண்ட மோட்டார்க் கார் மெல்ல விலக
அம்மாவும் மறைந்தாள் இப்போ அப்பனைப் போல!

நானோ,அள்ளிய சோறும்
மெல்ல முடியாத வாயோடு
உணர்வு மரத்த மனிதனாய்
நுரை வெடித்த வெற்றுக் கிளாசில்
வந்தமர்ந்த தேனீயின் இருப்பில்
என்னை இழக்கின்றேன்.

அன்னை,அம்மாளாச்சியாய்...


ப.வி.ஸ்ரீரங்கன்